காமராசர்

Vinkmag ad

காமராசரே
பிள்ளைகளை பிறப்பித்து
தாயானவர்கள் பூமியில் உண்டு
நீ மட்டும்தான்
பள்ளிகளை பிறப்பித்து தாயும் ஆனவன்.

நீ அதிகம் படிக்காத பாமரன் தான்.
ஆனாலும் பாரதியின்
பாடலாகாவே வாழ்ந்து காட்டியவன்
வயிற்ற்குக்கு சோறும்
பயிற்றிட கல்வியும் தந்து
பாரதியின் பாடலாகாவே
வாழ்ந்து காட்டியவன்
 
ஒரு கர்ம வீரனை பெறப் போகிறோம் என்ற
கர்வத்திற்காகவோ என்னவோ
நீ பிறந்த ஊர்
நீ பிறப்பதற்கு முன்னதாகவே
தன் பெயருடன் விருதை
தன் பெயருக்கு முன்னால்
இணைத்துக் கொண்டது

எங்கள் தவங்களின் வரமாய்
வந்துதித்த அன்புத் துறவியே..
 
 
காசு கொழிக்கும் வீடுகளில்
இருந்த கலைமகளை
நீதானே ஏழைகளின்
குடிசைக்குக்கு இட்டு வந்தாய்

ஆனால் இறுதி வரை உனக்கு
ஒரு வீடு கூட சொந்தம் இல்லை
என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது.
 
பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி நீ
இப்போதெல்லாம் கலர்டீவி கூட
இலவசமாய் கிடைக்கிறது.
நீ கட்டாயம் வேண்டுமென்று
சொன்ன கல்வி மட்டும்தான்
கட்டணம் கேட்கிறது
 
கேஜி கேஜியாய்
புத்தகம் சுமக்கும்
எங்கள் குழந்தைகள்
எல்கேஜியில் சேரவே
எழுபதாயிரம் வேண்டுமாம்

மாடு மேய்த்தவனை
ஏடு படிக்க சொன்னவனே
இன்னும் எங்கள் பிஞ்சுகள்
சிவகாசி கந்தகத்தில்
சிராய்ப்பு வெடிகளில் தான்
 
காந்தியும் நீயும்
திரைப்படம் ஆனீர்கள்
பாதிபேருக்கு
கதை கொஞ்சம் தெரிந்தது
ஆனால் காமராசரே
உன் படத்தில் தான்
கதாநாயகியே இல்லையாம்
வருத்தத்தில் ரசிகன்
வராததாலே வசூலே
இல்லை…
 
மக்கள் தலைவனாகவே
வாழ்ந்து மறைந்து போன
உத்தமனே

உனக்கு தெரியுமா
குஜராத்திலிருந்து வந்து
தமிழ்நாட்டிற்காக
அரையாடைகளை தியாகம் செய்தது
காந்தி மட்டுமல்ல
நம் நமீதாவும் தான்
 
இப்போதைய தலைவர்கள்
தங்கள் குடும்பத்தையே
ஆட்சி பீடத்தில்
அமர வைக்க ஆசைப்படுகிறார்கள்
நீ மட்டும் தான்
அரசியலுக்காக
குடும்பத்தையே துறந்தவன்
 
நீ கதரையும்
உன் மதரையும் கடைசிவரைக்கும்
கை விட்டதேயில்லை
ஆனால் நீ அறிவாயா
இன்றைய என் இந்திய இளைஞர்கள்
அன்னையரை
முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு
அந்நிய தேசத்தில் ஐடி சந்தையில்
அடிமையாகிப் போன கதையை
 
நீ உடுத்தியிருந்த
ஆடையை போலவே உன்
உள்ளமும் வெள்ளை
இன்று மாறிக்கொண்டே இருக்கிறது
துண்டுகளின் நிறமும்
தலைவர்களின் பச்சோந்தி மனமும்
 
நீ மண்ணுக்கு வந்த
நதிகளுக்கு வளம் சேர்த்தாய்
இன்று நீ தூர் வாரிய ஏரிகள் எல்லாம்
எட்டு மாடிக் கட்டிடங்களாய்
அதனால் தான்
விவசாயின் கண்ணுக்கு
வந்தது கண்ணீர் நதிகள்
 
பல கட்சிக் கொடிகளுக்கு
நடுவில்
காப்பாற்ற படுவோமா என்று
கலவரத்தில் கலங்கிப் போய் இருக்கிறது
நீங்களெல்லாம் போராடி
காப்பாற்றித் தந்த
நம் தேசியக் கொடி
 
மன்மத ராசாவைத் தெரியும்
எங்கள் இளசுகளுக்கு
காமராசரே உன்னைத் தெரியாததுதான்
கவலையாக இருக்கிறது
 
காந்தியை சுட்டதற்காக
கவலைப்படாத எம் இளைஞன்
கோலங்கள் அபியை சுட்டதற்காக
கலங்கிப் போய் நிற்கின்றான்
 
எங்கள் லட்சியத் தலைவனே
நீ அதிகம் படித்ததில்லை
ஆனால் நீ எங்களுக்கு பாடமானாய்
நாங்கள் உன்னை பார்த்ததில்லை
ஆனால் நீதான் எங்களுக்கு பாதையானாய்
நன்றி வணக்கம்

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே…
நீ நதி போல ஓடிக்கொண்டிரு…
*
ஷாஜஹான்.

admin

Read Previous

2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டி னத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங்க​ள்:

Read Next

3 அரிய நூல்கள் + 12 தாய்மொழி இதழ்கள் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *