கட்டுரைகள்

ஐம்பெருங் காப்பியங்களில் வேற்றுரு எய்தும் மந்திரம்

ஐம்பெருங் காப்பியங்களில் வேற்றுரு எய்தும் மந்திரம்

— தேமொழி 

முன்னுரை:

தமிழ் இலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர்களுக்கு அருளப்படும் “மூன்று மந்திரங்கள்” என்பது கதையின் திருப்பங்களை ஏற்படுத்தும் மிக முக்கிய திருப்புமுனைகளாக அமைந்துள்ளன. அவற்றைப் பெறுபவர்கள் தாங்கள் இம்மண்ணில் பிறந்த நோக்கத்தை  அடைய அவற்றைப் பயன்படுத்தி தங்கள் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.

ஐம்பெருங் காப்பியங்களில் சீத்தலைச் சாத்தனார் எழுதிய பௌத்தக் காப்பியமான மணிமேகலையிலும், திருத்தக்கதேவர் இயற்றிய சமணக் காப்பியமான சீவக சிந்தாமணியிலும் அவற்றின் நாயகர்களான மணிமேகலையும் சீவகனும் முறையே மூன்று மந்திரங்களைப் பெற்று தங்கள் குறிக்கோளை நிறைவு செய்கிறார்கள்.

1. மணிமேகலை:

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், காப்பிய நாயகி மணிமேகலை மணிபல்லவத் தீவில் இருக்கும்பொழுது, அவளது பௌத்தத் துறவற வாழ்விற்கும் உலக நன்மைக்கும் உதவும் பொருட்டு மணிமேகலா தெய்வம், 1. பசிப்பிணி நீக்கும் மந்திரம், 2. வேற்றுருவம் கொள்ளும் மந்திரம், 3. வான்வழிச் செல்லும் மந்திரம் ஆகிய  மூன்று அரிய மந்திரங்களை அவளுக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த மூன்று மந்திரங்களின் துணையோடு மணிமேகலை அமுதசுரபியைப் பெற்று, வான்வழியே தமிழ்நாட்டிற்கு வந்து மக்களின் பசிப்பிணியைப் போக்கினாள், பௌத்த சமயத்தின் மேன்மை குறித்த தெளிவைப்பெறுகிறாள். 

2.  சீவகசிந்தாமணி:

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில், வித்யாதரனான சுதஞ்சணன் நன்றிக்கடனாகச் சீவகனுக்கு 1. நஞ்சு தீர்க்கும் மந்திரம், 2. உருவம் மாறும் மந்திரம், மற்றும் 3. குரலை இனிமையாக்கும் மந்திரம் ஆகிய மூன்று மந்திரங்களை உபதேசிக்கிறான். இந்த மந்திரங்கள் சீவகனின் திருமணங்கள் மூலம் வேற்று அரசர்களின் உதவியாகப் படைபலம் பெற்று தனக்கு உரிமையான ஏமாங்கத நாட்டின் அரசை மீட்பதற்குச் சீவகனுக்கு உதவியாக இருக்கின்றன.

இந்த இரண்டு காப்பியங்களில் கூறப்படும் மூன்று மந்திரங்களில் பொதுவாக அமைவது வேற்றுரு எய்தும் மந்திரமாகும்.

காப்பியங்களில் வேற்றுரு எய்தும் மந்திரம்:

1. மணிமேகலைக்கு மந்திரங்கள் கொடுத்த மணிமேகலா தெய்வம்:

உவவனம் புகுந்த சோழ இளவரசன் உதயகுமரன் அங்குள்ள பளிக்கறையில் இருக்கும் மணிமேகலையின் எழில்  கண்டு காமம் கொண்டு அவளை அடைய விரும்புகிறான். அவளும் அவள் தோழி சுதமதியும் அவனுக்கு இது தவறு என்று அறிவுரை கூறுகிறார்கள். மணிமேகலையை இப்போது அடைய முடியவில்லை என்றாலும் அவள் பாட்டி  சித்திராபதி மூலம் சேர்வேன் என்று சூளுரைத்துச் செல்கிறான் உதயகுமரன். தான் திட்டமிடும் அறவாழ்விற்கு உதயகுமரன் இடையூறாக இருக்க முயல்வதைக் கண்டு மணிமேகலை கலங்குகிறாள்.  இந்திரவிழாவினைக் காண விரும்பி புகார் நகரம் வந்த மணிமேகலா தெய்வம் துயருடன் இருக்கும் இவர்களை அணுகி உண்மை அறிகிறது. மணிமேகலைக்கு உதவ விரும்பிய மணிமேகலா தெய்வம், உறங்கும் மணிமேகலையைத் தழுவி எடுத்துக் கொண்டு விண்ணின் வழியே முப்பது யோசனை தூரம் தென் திசையில் சென்று கடலால் சூழப்பட்ட மணிபல்லவத் தீவில் மணிமேகலையை வைத்துவிட்டு, மணிமேகலா தெய்வம் நீங்கியது. காலையில் துயில் நீங்கி எழுந்த மணிமேகலை அங்கிருந்த புத்த பீடிகையைக்  கண்டு வணங்கி எழும்போது தன் முற்பிறப்புச் செய்தியினை உணர்ந்தவளானாள். அப்பொழுது மீண்டும் வானில் இருந்து இறங்கிய மணிமேகலா தெய்வம், மணிமேகலை அவள் விரும்புமாறு அறவாழ்வை மேற்கொள்ள மூன்று மந்திரங்களை அவளுக்கு அருளியது.

          அறிபிறப்பு உற்றனை அறம்பாடு அறிந்தனை

          பிறஅறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை

          பல்வேறு சமயப் படிற்றுஉரை எல்லாம்

          அல்லியங் கோதை கேட்குறும் அந்நாள்.

          இளையள் வளையோள் என்றுஉனக்கு யாவரும்

          விளைபொருள் உரையார் வேற்றுஉரு எய்தவும்,

          அந்தரம் திரியவும் ஆக்கும்இவ் அருந்திறல்

          மந்திரம் கொள்கென வாய்மையின் ஓதி

          மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள்

          பொதுஅறிவு இகழ்ந்து புலம்உறு மாதவன்

          திருஅறம் எய்துதல் சித்தம்என்று உணர்நீ

          மன்பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி

          நின்பதிப் புகுவாய் என்றுஎழுந்து ஓங்கி,

          மறந்ததும் உண்டுஎன மறித்துஆங்கு இழிந்து

          சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய்

          மக்கள் யாக்கை உணவின் பிண்டம்

          இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்என்று

          ஆங்குஅது கொடுத்துஆங்கு அந்தரம் எழுந்து

          நீங்கியது ஆங்கு நெடுந்தெய்வம் தான்

                    [மணிமேகலை; 10. மந்திரங் கொடுத்த காதை; 75-94]

கையில் மலரை ஏந்திக் கொண்டு வானத்தில் இருந்து இறங்கி வந்து  புத்த பீடிகை மீது மலர்தூவிப் பணிந்து வணங்கியது மணிமேகலா தெய்வம்.  பின்னர் அங்கிருந்த மணிமேகலையை நோக்கி மணிமேகலையே,  மிக்க பெருமையுடைய இந்தப் புத்த பீடிகையை வணங்கித் துதித்ததால் நீ உன்னுடைய முற்பிறப்பை அறிந்து கொண்டாய்; அறத்தின் தோற்றத்தையும் அறிந்தாய். இனி பிற சமய உண்மைகளைச் சொல்லுவோர் தன்மையும் கேட்பாய். 

பல்வேறு சமயங்களின் பொய்யுரை களையெல்லாம் நீ கேட்கச் செல்லும் அந்நாளில் உன்னை மிகவும் இளவயது உடையவள் என்பதாலும், ஒரு பெண் என்பதாலும் எண்ணி எவரும் தத்தம் சமய தத்துவங்களை உனக்குச் சொல்ல விரும்பமாட்டார்கள். அதனால்,  நீ வேற்றுருவத்தினை அடையவும், வானத்திலே செல்லவும் உதவும் அரிய ஆற்றல் பொருந்திய இம்மந்திரங்களை அறிந்து கொள்வாயாக என்று கூறி அதற்கான வேற்றுரு எய்தவும், விண்ணிலே செல்லவும் உதவும் இரு மந்திரங்களை மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்குக் கூறி அருளியது.

நாள்தோறும் வளரும் நிலவு நிறைமதியாகும்  வைகாசித் திங்கள் முழுநிலவு நாள் புத்தர் ஞானம் பெற்ற மங்கலத் திருநாள் ஆகும். (புத்தர் பிறந்த நன்னாளும் அதுவே). அந்நாளிலே பொதுவான உலக அறிவினை வெறுத்து ஒதுக்கிச் சிறப்பான மெய்ஞானம் பெற்றான் புத்த பெருமான். அத்தகைய சிறப்பு கொண்ட புத்த பெருமானின் நல்லறத்தை நீ அடைதல் உறுதி என்பதை உணர்வாயாக! மிக்க பெருமையுடைய இந்தப் புத்த பீடிகையை வணங்கித் தொழுத பின்னர் உன் ஊருக்குச் செல்வாயாக என்று கூறி மணிமேகலா தெய்வம் மேலே சென்றது. மீண்டும் இறங்கி வந்து, “சிறந்த கொள்கையையுடைய மணிமேகலையே! ஒன்று சொல்ல மறந்துபோனேன். அதனைக் கேட்பாயாக. மக்களுடைய உடல் உணவினால் ஆகிய ஒரு தொகுதி. இப் பெரிய மந்திரம் மக்களின் பெரும்பசியையும் போக்கும்” என்று கூறி அரும்பசி அறுக்கும் மந்திரத்தையும் அளித்த பின்னர் பெருமையுடைய மணிமேகலா தெய்வம் வானிலே எழுந்து சென்றது. இவ்வாறாக; 1. வேற்றுரு எய்தவும், 2. விண்ணிலே செல்லவும், 3. அரும்பசி அறுக்கவும் உதவும் மூன்று மந்திரங்களை மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு அருளிச் சென்றது.

2. சீவகனுக்கு மந்திரங்கள் கொடுத்த சுதஞ்சணன்:

தன்னுடைய முற்பிறவியில்  நாயாகப் பிறந்திருந்திருந்தவன் சுதஞ்சணன்.  துறவிகளின் உணவைக் கவர்ந்ததற்காக அடிபட்டுக் குற்றுயிராக இறக்கும் தறுவாயில் இருந்த அவன் மீது அன்பு கொண்டு  நற்கதியிற் சேரும் மந்திரத்தைச் சீவகன் அவன் காதில் அருள் உள்ளத்துடன் ஓதியதால்  மந்திர வித்தைகள் தெரிந்த விஞ்சையனாக (வித்தியாதரனாக) வானுலகில் பிறக்கிறான் சுதஞ்சணன்.  தன் நன்றிக் கடனாக அவன் சீவகனுக்கு உதவ உறுதி கொள்கிறான்.  பல்லக்கில் வரும் குணமாலையை, மதம் கொண்டு தெருவில் திரிந்த பட்டத்து யானை கொல்ல முயல,  அதனை அடக்குகிறான் சீவகன். பிறகு அவளையே மணந்து கொள்கிறான். தோல்வியுற்றதால் மனவுளைச்சல் கொண்ட பட்டத்து யானை உண்ண மறுக்கிறது. இதனால் சினம் கொண்ட மன்னன் கந்துக்கடன் சீவகனைக் கைது செய்து கொண்டு வரப் படையை அனுப்புகிறான். அவர்கள் சீவகனைக் கைதியாக்கிக் கொண்டு வருகையில் புழுதிக் காற்றை எழுப்பி சீவகனைக் காப்பாற்றி அவனை வானுலகிற்குக் கொண்டு சென்று விருந்தோம்புகிறான் சுதஞ்சணன்.  சிலநாள் கழித்து தன் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு மண்ணுலகிற்குத் திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடர விரும்புகிறான் சீவகன். அவனுக்கு வாழ்வில் உதவக்கூடிய மூன்று மந்திரங்களைச் சொல்லி இம்மந்திரம் மூன்றையும் குறிக்கொள்க என்று கூறி, அவற்றின் தந்திரமும் விளங்கக் கூறுகிறான் சுதஞ்சணன்.

          செல்கதி மந்திரஞ் செவியிற் செப்பிய

          மல்லலங் குமரனை வாழ நாட்டவே

          வல்லவன் மந்திர மூன்றுங் கொள்கெனச்

          சொல்லின னவற்றது தொழிலுந் தோன்றவே.

          கடுந்தொடைக் கவர்கணைக் காமன் காமுறப்

          படுங்குர றருமிது பாம்பு மல்லவுங்

          கடுந்திற னோய்களுங் கெடுக்கும் வேண்டிய

          வுடம்பிது தருமென வுணரக் கூறினான்.

                    [சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம் (1217-1218)]

நற்கதியிற் சேரும் மந்திரத்தைத் தன் காதில் ஓதிய, ஆற்றல் உறும் அழகிய சீவகனை வாழ்விக்கும் வன்மையுடைய சுதஞ்சணன்;  இம்மந்திரம் மூன்றையும் குறிக்கொள்க என்று சொல்லி அவற்றின் தந்திரமும் விளங்கக் கூறினான்.

விரைந்து தொடுக்கப்படுவதும் ஆண் பெண்களில் ஒருவருக்கொருவர் கவர்ச்சியை உண்டாக்குவதும் ஆகிய அம்பினையுடைய காமனும் விரும்பும் இனிய குரலைத் தருவது இம்மந்திரம்; பாம்பின் நஞ்சையும், பாம்பல்லாத ஏனைய நஞ்சுடையனவற்றின் நஞ்சினையும், காற்று நீர் நெருப்பு இடி முதலியவை கொடுக்கும் துன்பங்களையும் கெடுக்கும் இம்மந்திரம்; வேண்டிய உடம்பைத் தருவது இம்மந்திரம் என்று விளங்க அறியுமாறு சுதஞ்சணன் உரைத்தான். இம்மந்திரங்களைத் தக்கக் காலத்தில் பயன்படுத்தும் சீவகன் தன் குறிக்கோளை நிறைவேற்றுகிறான். இவ்வாறாக; 1. எவரையும் மயக்கும் இனிய குரலையும், 2. பாம்பு, மற்ற நஞ்சுகள், இயற்கைப் பேரிடர்களினால் வரக்கூடிய துன்பங்களைக் கடக்கவும், 3.விரும்பும் உருவத்தைப் பெறவும் என உதவும் மூன்று மந்திரங்களை சுதஞ்சணன் சீவகனுக்கு  அருளுகிறான்.

முடிவுரை :

இந்த இரண்டு காப்பியங்களும் கூறும் மூன்று மந்திரங்கள் காப்பியத் தலைவர்களான மணிமேகலை சீவகன் ஆகியோருக்கு இன்றியமையாத உதவியாக அமைகின்றன. இவற்றில் வேற்றுரு எய்தும் மந்திரம் பெண் என்பதால் கல்விக்கு ஏற்படக் கூடிய தடையைக் கடக்க  மணிமேகலைக்கும், தேவையானபொழுது உண்மையுருவை  மறைத்துத் தப்பிச் செல்லச் சீவகனுக்கும் உதவுவதையும் காண முடிகிறது. சில நேரங்களில் வேற்றுரு எய்துவது மிகவும்  கைகொடுக்கும் என்பதை இருகாப்பியங்களிலும் வேற்றுரு எய்தும் மந்திரம் குறிப்பிடப்படுவதால் உணர முடிகிறது.

உதவிய நூல்கள்:

1.         மணிமேகலை, மூலமும் தெளிவுரையும். முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன், பாரதி பதிப்பகம். 1998

2.         சீவகசிந்தாமணி, மூலமும் உரையும்-[முதற் பாகம். புலவர் அரசு, பொ. வே. சோமசுந்தரனார்,  திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.  1994.

நன்றி: 

தமிழணங்கு;  நவம்பர் 2026

சக்தி;  நவம்பர் 2026

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button