கட்டுரைகள்

ஐரோப்பாவில் காட்டுத்தீ பரவலுக்கான காரணங்கள் 

ஐரோப்பாவில் காட்டுத்தீ பரவலுக்கான காரணங்கள் 


இர . ரஹமத்துல்லா, இயக்குனர், ரேடியண்ட் ஐ.ஏ,எஸ். அகாடமி, கள்ளக்குறிச்சி

சமீபகாலமாக, பிரான்ஸ், கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வருகின்றன. கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகள் எரிந்து சாம்பலாகும் வகையில் ஐரோப்பா தீவிர காட்டுத்தீயை எதிர்கொண்டு வருகிறது. இந்தத் தீ விபத்துகளால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல அவசரக்காலப் பணியாளர்கள் உயிரிழந்தனர். சில வாரங்களுக்குள் தென்மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளைத் தாக்கும் இரண்டாவது வெப்ப அலை இதுவாகும்.

காட்டுத்தீ ஏற்படுவதற்கான காரணங்கள்

1. காட்டுத்தீ ஏற்படத் தேவையான காரணிகள்:

அதிகப்படியான வெப்ப நிலை, உடனடியாக எரியக்கூடிய எரிபொருள் மற்றும் ஒரு தீப்பொறி ஆகியவைகள் இதற்கான முக்கிய காரணங்களாகும். 

2. ஐரோப்பாவில் நிலவும் தட்பவெப்ப நிலை:

வழக்கத்திற்கு மாறாக வறண்ட மற்றும் வெப்பமான வசந்த காலத்தால் மண் வறண்டு போனதால், ஐரோப்பாவில் காட்டுத் தீ காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதற்குக் காலநிலை மாற்றமே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.வழக்கத்தை விட முன்கூட்டியே நிலவும் தீவிர வெப்பம் மற்றும் சில பகுதிகளில் நிலவும் வறட்சி ஆகியவை தீயை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

3. எளிதில் எரியக்கூடிய எரிபொருள்:

வெப்பநிலை அதிகரிக்கும்போது தாவரங்களில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, அதிக அளவில் காய்ந்த எரிபொருள் (எரியக்கூடிய பொருட்கள்) உருவாகிறது. வறட்சி மற்றும் அதிக வெப்பம் தாவரங்களை அழிப்பதோடு, காய்ந்த புல் மற்றும் காட்டின் தரையில் உள்ள பிற பொருட்களை உலர்த்துகின்றன. தீ ஒரு பகுதியில் பரவத் தொடங்கும்போது இவை எரிபொருளாகச் செயல்படுகின்றன.

4. தீப்பொறி:

மின்னல் மூலமாகவோ அல்லது உள்ளூர் மக்களின் கவனக்குறைவு அல்லது விபத்துகள் மூலமாகவோ தீப்பொறி ஏற்படலாம்.

உதாரணமாக, 2018-ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்து, லாரி ஒன்றின் டயர் வெடித்து, அதன் சக்கர விளிம்பு (rim) சாலையின் மீது உராய்ந்து தீப்பொறிகளை உருவாக்கியதால் காட்டுத்தீ ஏற்பட்டது.

காட்டுத்தீயின் தாக்கங்கள்

1. மாசுபாடு:

காட்டுத்தீயால் ஏற்படும் காற்று மாசுபாடு குறுகிய காலத்திற்கே நீடித்தாலும், மற்ற வகை காற்று மாசுபாடுகளை விட இது மிகவும் தீவிரமானதாக உள்ளது. காட்டுத்தீயிலிருந்து வெளிவரும் புகை என்பது நுண்ணிய மற்றும் பெரிய துகள்கள் (particulate matter) மற்றும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், ஆவியாகும் கரிம சேர்மங்கள் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த காற்றுப் பொருட்கள் உள்ளிட்ட வாயுக்களின் சிக்கலான கலவையாகும்.

2. உடல்நலப் பாதிப்புகள்:

தீ மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் நேரடி ஆபத்தை விளைவித்தாலும், காட்டுத்தீயிலிருந்து வெளிவரும் புகை – குறிப்பாக PM 2.5 (அதாவது 2.5 மைக்ரானுக்கும் குறைவான அளவுள்ள துகள்கள்) – சுவாச மண்டலம் மற்றும் இதய-இரத்த ஓட்ட மண்டலத்தையும் பாதிக்கக்கூடும்.ஏற்கனவே இதய-இரத்த ஓட்டம் அல்லது சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்நிலை நோயின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது. 

3.வனவிலங்குகள் பாதிப்பு:

காட்டுத்தீ தாவரங்கள் (மரங்கள், மூலிகைகள், புல்வெளிகள் போன்றவை) மற்றும் அவற்றின் பல்லுயிர் தன்மையை அழிப்பது மட்டுமல்லாமல், அழிந்துவரும் நிலையில் உள்ள வனவிலங்குகள் உட்பட விலங்கினங்கள் மீதும் குறிப்பிடத்தக்க நீண்டகால எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது.முட்டைகளை எரித்தல், குட்டி விலங்குகளைக் கொல்லுதல் மற்றும் வளர்ந்த விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுதல் ஆகியவற்றின் மூலம் இவை வனவிலங்குகளைப் பாதிக்கின்றன.

4. காடுகள் மற்றும் மண் பாதிப்பு:

காட்டுத்தீ மண்ணில் உள்ள கரிமப் பொருட்களை அழித்து, மேல் மண் அடுக்கை அரிப்புக்கு ஆளாக்குகிறது.இது பயிர் இழப்புக்கும் வழிவகுக்கிறது. இவை காடுகளின் மறுவளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனைப் பாதிக்கின்றன.

5. பொருளாதாரம் சரிவை காணுதல் 

காட்டுத்தீ போக்குவரத்து, தகவல் தொடர்பு, மின்சாரம் மற்றும் எரிவாயு சேவைகள் மற்றும் நீர் விநியோகம் ஆகியவற்றை சீர்குலைக்கக்கூடும். இதனால் பொருளாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன.

காட்டுத்தீயைத் தடுத்தல் மற்றும் அதன் பாதிப்பைக் குறைத்தல்

1. தடுத்தல்:

வானிலை தரவுகளைப் பயன்படுத்தி தீ விபத்து ஏற்படக்கூடிய நாட்களை முன்கூட்டியே கணித்தல்.முகாம் அமைக்கும் இடங்களிலிருந்து காய்ந்த தாவரக் கழிவுகளை அகற்றுதல்.

காட்டுத் தரையில் உள்ள காய்ந்த இலை-தழைகளை முன்கூட்டியே எரித்தல். காடுகளுக்குள் தீயைத் தாங்கி வளரக்கூடிய தாவர வகைகளை வரிசையாக வளர்த்தல்.காடுகளில் ‘தீத் தடுப்புப் பாதைகளை’ (fire lines – தீ பரவுவதைத் தடுக்க தாவரங்கள் இல்லாமல் காலி செய்யப்பட்ட பாதைகள்) உருவாக்குதல்.

காட்டுத்தீயைத் தடுக்க ‘கட்டுப்படுத்தப்பட்ட எரிப்பு’ (controlled burns) முறையும் பயன்படுத்தப்படுகிறது.கட்டுப்படுத்தப்பட்ட எரிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மனிதர்களால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் தீயாகும். நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் முறையாக நிர்வகிக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட எரிப்பு முறைகள் வன மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இவை கட்டுப்பாடற்ற காட்டுத்தீயைத் தடுக்க உதவும்.

2. பாதிப்பைக் குறைத்தல்:

தீயணைப்புப் படைகள் மூலம் தீயை முன்கூட்டியே கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். இத்தகைய நடவடிக்கைகளுக்காக, வனத்துறைகள் தீ பாதுகாப்பு மற்றும் தீ கட்டுப்பாட்டுப் பிரிவைக் கொண்டுள்ளன.எனவே, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி அது பரவுவதைத் தடுப்பதே ஆகும். காடுகளில் சிறிய காலி இடங்கள் அல்லது அகழிகள் போன்ற தீத் தடுப்புப் பாதைகளை (firebreaks) உருவாக்குவதன் மூலம் இதைச் சரி செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button