“கண்மாயே எங்கள் வாழ்வாதாரம்” கிராம மக்கள் மறியல்

“கண்மாயே எங்கள் வாழ்வாதாரம்” கிராம மக்கள் மறியல்

கீழக்கரை ஆக,22
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள இதம்பாடல் பகுதியில் பொதுப்பணித்துறை கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து பண்ணை குட்டைகள் அமைக்கப்படுவதை கண்டித்து கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதம்பாடல் பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் அரசு விதிகளுக்கு புறம்பாக ஆழமாக பள்ளம் தோண்டி பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் எதிர்காலத்தில் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்தனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம்சாட்டினர்.காலையில் தொடங்கிய சாலை மறியல் போராட்டத்தினால் சுமார் 4 மணி நேரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் அதிகாரிகள், “உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தனர்.
மேலும் “நடவடிக்கை எடுக்கத் தவறினால், அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டு பெரிய அளவிலான போராட்டம் நடத்துவோம்” என மக்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.




