ஏ.டி.எம்.கார்டை ஏமாற்றி 16000 எடுத்த 2 பேர் கைது
ஏ.டி.எம்.கார்டை ஏமாற்றி 16000 எடுத்த 2 பேர் கைது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் (55) என்பவர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அங்குள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
அவருக்கு ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏ.டி.எம். மையத்தில் நின்றிருந்த இருவர், தாங்கள் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய செந்தூர்பாண்டியன் தனது ஏ.டி.எம். கார்டை அவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பின்னர், வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று செந்தூர்பாண்டியனிடம் தெரிவித்தனர் , அவரது அசல் ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக வேறொரு ஏ.டி.எம். கார்டை திருப்பிக் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து செந்தூர்பாண்டியன் கார்டை கவனிக்காமல் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.அன்று மாலை அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16,000 ஏ.டி.எம். மூலம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டுள்ளார்.
வங்கியின் அறிவுறுத்தலின்படி அவர் சாயல்குடி போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கோவையைச் சேர்ந்த காட்ஜான் (24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பீட்டர் பிரபாகரன் (34) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




