அழுகிய நிலையில் ஆட்டோ ஓட்டுநரின் சடலம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள இருவேலி கண்மாயில் அழுகிய நிலையில் ஆட்டோ ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் சிவகுமார் (26) மலட்டாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணமாகாத இவர் கடந்த சனிக்கிழமை இரவு முதல் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.
இதற்கிடையில், இருவேலி கண்மாய் சீமைக் கருவேலக் காட்டுப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஓர் ஆட்டோ கேட்பாரற்ற நிலையில் நிற்பதாக அப்பகுதி மக்கள் சில ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அதன் உரிமையாளர் யார் என்பதை கண்டறிய முயன்றனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் தகவல் அறிந்து சாயல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சீமைக் கருவேல முள் புதருக்குள் அழுகிய நிலையில் சிவகுமாரின் சடலம் கிடந்தது. சடலத்தின் அருகில் ஒரு மது பாட்டிலும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகுமார் உயிரிழப்பு தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சாயல்குடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.




