கொளுந்துரை முத்தமிழ்ப் பெரும்புலவர் மகான் சுவாமி இராமதாசர்

கொளுந்துரை முத்தமிழ்ப் பெரும்புலவர் மகான் சுவாமி இராமதாசர்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொழுந்துரை எனும் கிராமத்தில் 07.09.1916 ஆம் ஆண்டு பிறந்தவர் முத்தமிழ்ப் பெரும்புலவர் மகான் சுவாமி இராமதாசர். இவரது இயற்பெயர் இராமலிங்கம் மலேசியாவில் தமிழ்க் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர்.
கடல் கடந்து அயலகம் சென்று மலேசிய தமிழர்களுக்குக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். தனது 21 ஆம் வயதில் கப்பல் வழியாக பினாங்கு (மலேசியா) சென்று தமிழர்களுடைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிபுரிந்ததுடன் மட்டுமின்றி, பல பள்ளிகளையும் பாட சாலைகளையும் நிறுவி கல்விப் புரட்சி செய்து, சீரற்ற தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி வெற்றி கண்டவர். அதுமட்டுமின்றி பினாங்கு செந்தமிழ்க் கலாநிலைய நிறுவனத் தலைவராகவும், சகலகலா வல்லுநராகவும், சர்வசமய ஆய்வாளராகவும், வேதாந்த சித்தாந்தக் கலாநிதியாகவும், பன்மொழிப் புலவராகவும், தமிழவேள் முத்தமிழ்ப் பெரும்புலவராகவும் விளங்கியுள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டமான இராமநாதபுரத்தில் பிறந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை சென்று மொழித்தொண்டு, சமயத்தொண்டு, சமூகத்தொண்டு, பொதுத்தொண்டு ஆகியவற்றைச் செய்து தனது அறிவார்ந்த திறனால் சரித்திரம் படைத்துள்ளார்.
உடல் வலிமை வாய்ந்த இருபது இளைஞர்களுக்குச் சிலம்பம், மற்போர் போன்ற தற்காப்பு பயிற்சிகளையும் இராமதாசர் கற்றுக் கொடுத்தார். தான் ஆரம்பித்த செந்தமிழ்ப் பாடசாலை மூலமாய் துடிப்பும் அறிவும் கொண்ட மாணவர் படையை உருவாக்கிச் சமூக சேவைகளில் ஈடுபடத்திக் கொண்டார். சித்த மருத்துவ நிலையத்தைத் தொடங்கி, சித்த வைத்தியத் துறையிலும் மாணவர்களை உருவாக்கினார். அனைத்துச் சமயத்தவரும் எவ்விதப் பேதமின்றி இனம், மொழி பாராது இராமதாசரைக் குருவாக ஏற்றுக் கொண்டு கல்வியும் கலைகலும் பயின்றனர்.
ஆற்றிய சமூகப் பணி
1940 ஆம் ஆண்டு சம்பள உயர்வு போராட்டம் நாட்டில் தீவிரமான போது பலர் பணியிழந்து அவதிப்பட்ட போது கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கிய மக்களை தனது முயற்சியால் கரம் நீட்டி காப்பாற்றினார். 1942 ஆம் ஆம் ஆண்டு உலகப் போரின் போது ஜப்பானிய ஆதிகத்தின் காரணமாக பலர் இவரிடம் தஞ்சம் புகுந்த போது அடைக்கலம் கொடுத்து பேருதவி செய்தார். 1944 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலேசியா வந்த போது அவரது இந்திய தேசிய ராணுவ படையில் சேர தனது 25 மாணவர்களை அனுப்பி உள்ளார். கோ.சாரங்கபாணி, சுவாமி ஆதமாராம், பிரம்மச்சாரி கைலாசம், சிங்கை நாராயணசாமி, தான் ஸ்ரீ மாணிக்கவாசம் போன்ற பல்வேறு தலைவர்களுடன் தொடர்பில் இருந்து மலேசிய நாட்டு மக்களின் வாழ்வியலுக்குத் தொண்டாற்றினார்.
மலேசியா நாடு சக்கரவர்த்தி இராமதாசருக்கு AHLI MANGU NEGARA (AMN) விருது வழங்கியுள்ளது. இவரது அயராத உழைப்பும், இடையுறாத மக்கள் சேவையையும் அறிந்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1943-ல் பிளாங்கு ராஜமாரியம்மன் ஆலயத்தைப் புதுப்பித்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். செந்தமிழ்ப் பாடசாலையை, இளந்தமிழ்ப் பாடசாலை என்றும் செந்தமிழ்க் கலாநிலையம் என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். இளந்தமிழ் பாடசாலை சிறுவர்களுக்கான பள்ளியாகச் செயல்பட்டது.
1946-ல் ராஜமாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் இளந்தமிழ் பாடசாலை மாணவர்களுக்கான ஒரு பள்ளியைக் கட்ட வழிவகைச் செய்தார். சீனத் தொழிலாளர் சங்கத்தின் ஆதரவால் அவரது விண்ணப்பம் வெற்றிப் பெற்றது.1948-ம் ஆண்டில் சுவாமி இராமதாசர் 180 மாணவர்களுடன் இளந்தமிழ் பாடசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். புதிய இடத்தில், இளந்தமிழ் பாடசாலை, அரசாங்கத் தமிழ்ப்பள்ளி என்று பெயர் மாற்றங்கண்டது. பின்னர் ரிவர் ரோட் தமிழ்ப்பள்ளி என்ற பெயரிலும் ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி என்ற பெயரிலும் அப்பள்ளி இயங்கியது. பலரின் கூட்டு முயற்சியில் 2021-ம் ஆண்டு முதல் அப்பள்ளி இராமதாசர் தமிழ்ப்பள்ளின் என்று அதன் தோற்றுநரான சுவாமி இராமதாசரின் பெயரிலேயே இயங்கி வருகின்றது. இசுலாமியர்களுக்கு மசுதி கட்டிக்கொடுத்து அவர்கள் மீது பேரன்புடையவராகத் திகழ்ந்துள்ளார்.1980 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு மலேசியப் பேராளராகக் கலந்து கொண்டு ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார்.
இவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் நூற்றுக்கும் மேலோர். அதில் வீ.கே.சுப்பிரமணியம், அ.இராமநாதன், கன்னல்கவி ந.கரீம், வரகவி நாச்சிகுளத்தார், வே.மகேந்திரன், இராஜவிக்கிரம காரியர் P.P.N, ஆனந்தூர் ஓ.எம்.காதிர் சுல்தான், கா.கதிரவன், வெண்ணீர்வாய்க்கால் இரா.பாண்டிப்புலவர், அபிராமம் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முதலியோர். மலேசியாவில் கமலாட்சி ஆறுமுகம் மற்றும் செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணன் தற்போது வசித்து வருகின்றனர். எஸ்.காரைக்குடியில் ஆறுமுகம் இராமதாசரின் சீடராக இன்று வரையிலும் அவர்மிது பெருமரியாதையுடன் வாழ்ந்து வருகின்றார். இதுபோல் பலர் உள்ளனr.தமிழகத்திலிருந்து மலேசியா மண்ணில் பெரும்புரட்சி செய்த இவர் 28.06.1991 ஆம் ஆண்டு இம்மண்ணை விட்டு நீக்கினார். கடந்த 21.11.2025 அன்று இவரால் உருவாக்கிய பினாங்கு பள்ளியில் 109 ஆவது பிறந்தநாள் விழா இவரது மாணவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
முனைவர் சே.முனியசாமி, ஆய்வாளர், மதுரை.

