மழைக்கு_மற்றொரு_பெயர்_பாவம்?


………………………………………..
மு.தமிமுன் அன்சாரி
…………………………………………
மழை
குதூகலம் நிறைந்த
ஒரு குழந்தை!
அது ஆசையுடன்
முத்தமிடுகிறது
பூமி பந்தை !

மழைத்துளிகள்
யாவும்
மேகங்கள் நடத்தும்
பேரணிகள்!
இடியும், மின்னலும்
அதன் தோழமைகள்!

மலையோரங்களில்
மனையோரங்களில்
வயல்களில்
வனங்களில்
மழைக்கு கிடைக்கிறது
மரியாதை!
ஆனால்
மனிதர்களின்
வாழிடங்களில்
கிடைப்பதோ
அவமரியாதை!

விலங்குகளிடமும்
பறவைகளிடமும்
அதற்கு வரவேற்பு!
மனிதர்களிடம்
மட்டுமே வெளிப்படுகிறது
முனுமுனுப்பு !

மழை
ஒரு தெருப்பாடகன் !
ஆனால்
இசைக்கு பதிலாக
கிடைப்பதோ
வரம்பற்ற வசை!

சனியன்
இம்சை
தொந்தரவு
என இரக்கமற்ற
விமர்சனங்கள் ஒருபுறம் !
மழையால் கிடைக்கும்
பள்ளிக்கூட
விடுமுறைகளில்
மகிழும் பிள்ளைகள்
மறுபுறம் !

மழைக்கு
பிடித்தது சுதந்திரம்!
அதற்கு தெரியாது
வானிலை
அறிக்கைகளின்
மந்திரம்!

மழையின்
ஒடு பாதையெங்கும்
வேகத்தடைகள்!
ஒட முடியாத
இடங்களிலும்
‘கான்கிரீட்’ கடைகள்!

கடலுக்கும், ஏரிக்கும்
செல்லவும்
இடையூறு !
கால்வாய்க்குள்
செல்வதிலும்
தகராறு!

மழை
ஒரு சுயநலமற்ற
போராளி!
ஆனால்
கேள்வி கேட்கத் தெரியாத
ஏமாளி!

பாவம் மழை!
அளவுக்கு அதிகமாக
பூமியை
நேசிப்பதுதான்
அது
செய்யும் பிழை