புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் திருமாறன் சந்திப்பு

புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் திருமாறன் சந்திப்பு

சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கடையம் அருகில் உள்ள வெங்காடம்பட்டியைச் சேர்ந்தவர் திருமாறன் நெடுங்காலமாக ரத்த தானம், சிலம்பக் கலை அபிவிருத்தி, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு, மரம் வளர்ப்பு, அவசர கால உதவிகள், விதைப்பந்துகள் தயாரிப்பு என சமூக சேவையில் அடையாளம் காணப்படுபவர்.
பூமி வெப்பமயமாதல், மாறுபாடுகளுடனான மழைப்பொழிவு, வறட்சி, முன்னேற்ற பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது, வன அழிவுகள் என்பதை தடுக்கும் ஒரே தீர்வு, “ஒற்றை ஆயுதம்” மரம் மட்டுமே என்ற பரந்த விழிப்புணர்வை திருமாறன் பள்ளி கல்லூரிகளில் பேச்சுக்களாலும், செயல்பாடுகளாலும் ஏற்படுத்தி வருகிறார். “ஒரு கோடி விதைப்பந்துகள்” என்ற ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் பயணித்து வருகிறார். தற்போது 46 லட்சம் விதைப்பந்துகளை மாணவ சக்தி மற்றும் போலீஸ் பட்டாலியன் துணையுடன் செய்து முடித்து விட்டார். அக்டோபர் 18, 2025 அன்றுடன் 50 லட்சத்தை இந்த பசுமை திட்டம் எட்டிவிடும். 2026 இறுதி அல்லது 2027 மார்ச் மாதத்திற்குள் மீதி 50 லட்சம் விதைப்பந்துகள் செய்து வீசப்பட்டு ஒரு கோடி இலக்கை எட்டி முடிக்கலாம் என்பது திருமாறனின் திட்டம். விதைப்பந்து நடவடிக்கைகளை புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் திருமாறன் விளக்கினார். மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நற்சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை அவரிடம் காண்பித்து ஆசி பெற்றார். ஒரு கோடியை விரைவில் எட்டிட முதல்வர் திருமாறனை வாழ்த்தினார். இந்த சந்திப்பின்போது ரத்த தான கழக மணியன் உடன் இருந்தார். புதுவை முதல்வருக்கு டாக்டர்கள் தங்கபாண்டியன், சுப.திருவன் முயற்சியில் வெளிவந்த பாரதியார் கவிதைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்கப்பட்டது.
ஃபுட் நோட்
புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியுடன் சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன்.




