கட்டுரைகள்

வண்ணப்பாடல்கள் பாடுவதில் வல்லவர்பொந்தம்புலி நவநீதக்கிருட்டிணப்பிள்ளை 

வண்ணப்பாடல்கள் பாடுவதில் வல்லவர் பொந்தம்புலி நவநீதக்கிருட்டிணப்பிள்ளை 

19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நவநீதக்கிருட்டிணப்பிள்ளை இராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள பொந்தம்புளி என்னும் ஊரில் பிறந்தவர். பொந்தம்புளி என்னும் ஊர்ப் பெயரை ஆராயமுற்படுகையில், பொந்தன்புளி  என்பது மரம் வகையைக் குறிக்கும். ‘பொந்தன்புளி’ எனும் மிகப் பெரிய மரம் ஒன்று முன்னொரு காலத்தில் இவ்வூரின் நடுவில் அமைந்திருந்தது. பொந்தன்புளி மரங்களின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் அரேபியா தீபகற்பகம் ஆகும். இதில் எட்டு இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் தங்கிப் பல்வேறு ஆய்வுகளை நடத்திய புவியியலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் பொந்தன்புளி மரங்களை உலகின் எட்டாவது அதிசயம் என வர்ணித்துள்ளார்.

தமிழகம் மற்றும் இலங்கையை ஆண்ட மன்னர்கள் அரேபிய தீபகற்பத்திலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்தனர். அவ்வாறு இறக்குமதி செய்த குதிரைகளுக்கு பொந்தன்புளி மரத்தின் இலைகள், பூக்கள் கொட்டைகளைக் கொடுப்பர். “தமிழகம் மற்றும் இலங்கைக்கு அரேபியர்களின் மூலமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பொந்தன்புளி மரங்கள் வந்து சேர்ந்தன. இந்த வணிகத் தொடர்புக்கு ஆதாரமாக 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநெல்வேலி மாவட்டம், திருப்புடையார் கோயில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில், இராமேசுவரம் கடற்கரையில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கலப் கப்பலையும், அதில் குதிரைகளையும் அரபு வணிகர்கள் நிற்கும் காட்சியையும் இன்றும் பார்க்க முடியும்” என்று குறிப்பிடப்படுகின்றது. (தி இந்து, மின்னாளிதழ், 06.11.2015) ஆக இவ்வகை மரங்கள் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இம்மரங்கள் அதிகமாக இருந்ததால் பொந்தம்புளி என்னும் பெயரில் ஊர் அமைந்தது என அறிய முடிகிறது.

 நவநீதக்கிருட்டிணப்பிள்ளை வண்ணப்பாடல்கள் பாடுவதில் வல்லவர் எனப் போற்றப்படுபவர். கந்தபுராணச் செய்திகள் எல்லாவற்றையும் அடக்கிக் கந்தபுராண வண்ணம் என்னும் வண்ணப்பாடலைப் பாடியுள்ளார். இவ்வண்ணப்பாடலுக்குக் காப்புச் செய்யுள் ஒன்று பாடியுள்ளார். இதனை “எந்தப் புராணத் தியல்பினிலு மேற்புகழின்/ கந்தப் புராணமதைக் காதல்வணஞ் – சந்திசொல/ மாதங்கத் தன்காணா மாதங்கத் தன் பயந்த/ மாதங்கத் தன்புவருமால்” எனும் அடிகள் மூலம் அறியலாம். (தமிழ்ப்புலவர் அகரவரிசை, முதல் தொகுதி, ப.123)

            இக்காப்புச் செய்யுளைப் பாராட்டி எண்ணற்ற புலவர்கள் சிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர்.  அவ்வாறு சிறப்புப் பாயிரம் பாடியவர்களில் பெருநாழி வயிரவலிங்கம் பிள்ளை, சங்கமுத்துப்பிள்ளை, கந்தசாமிப் புலவர், கருப்பண பண்டாரம், மாரிமுத்துப் பண்டாரம், முதுகுளத்தூர் கணக்குச் சுப்பையாப்பிள்ளை, பூ.ஆறுமுகம்பிள்ளை, சடையனேரி உத்தண்ட வேலுச்சாமியா பிள்ளை, துரைச்சிங்கம் பிள்ளை, பார்த்திபனூர் பழனியாண்டி ஆசாரி, கடலாடி சிக்கந்தர் முகைதீன், கமுதக்குடி குமாரசாமியாசாரி ஆகியோர் காணப்படுகின்றனர்.      

நவநீதக்கிருட்டிணப்பிள்ளை கவித்திறமையால், அவர் இயற்றிய நூலிற்கு பதின்மூன்று புலவர்கள் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளதை நோக்குகையில் சம காலத்தில் வாழ்ந்த புலவர்களிடம் சிறந்ததொரு நட்புறவைப் பூண்டிருந்தர் என்பதை அறிய முடிகிறது.

முனைவர் சே.முனியசாமிஆய்வாளர்,  மதுரை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button