டிசம்பர் ஆறு
ஆறுகளில்
அழுக்கானது
டிசம்பர் ஆறு
அடித்துத் துவைக்க
மனமில்லை
சட்டையில் பூக்கள்
இந்த இரண்டு ஹைக்கூ கவிதைகள் இலக்கிய உலகத்திலும், சமூகத் தளத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் சாதாரணமானவை அல்ல!
முன்னது
சமய நல்லிணக்கம் சார்ந்த
மனித நேயக் கவிதை.
மதவெறியர்களை அடையாளம் காட்டும் கவிதை!
பின்னது, நம் அடிமனத்தைத் தொடும் ஆகச் சிறந்த கவிதை!
ஆம்!அனைத்துயிர்கள் மீதும் அன்பு காட்டும் உயிர்ம நேயத்தையும் கடந்து,
வாடிய பயிரைக் கண்ட
போதெல்லாம் வாடி நின்ற
அருட்பிரகாச வள்ளலார் பாடி நின்ற “பயிர்ம நேயம்” பற்றியும் நாம் அறிவோம். ஆனால், அதையும் தாண்டி,
சட்டையில் வரைந்து நிறைந்து கிடக்கும் வண்ணப் பூக்களும் வதங்கிக் கசங்கிப் போய்விடும், அதனால் அடித்துத் துவைக்க மனமில்லை என்று எழுதும் ரமா. ராமநாதனைப் போல் கவிஞன் ஒருவனை உலகத்தில் எந்த மூலையில் தேடிப் பார்த்தாலும் கிடைப்பதுண்டோ?
பானைச் சோற்றுக்குப் பருக்கை சோறு பதம் என்பதுபோல், மேற்கண்ட இரண்டு தேன் துளிகளை மட்டும் தெளித்துக் காட்டியுள்ளேன் பெருமைக்குரிய
அருமைச் சகோதரர் ரமா. ராமநாதன் அவர்களின் கவியுள்ளம் எத்தகையது என்பதை எடுத்துக் காட்ட!
அத்தகு தலைசிறந்த கவிஞரான,
அன்பின் வடிவமாகத் திகழும்
நெஞ்சம் நிறைந்த சகோதரர் திரு.
ரமா.ராமநாதன் அவர்கள்,
தமிழ்நாட்டு அரசின் “தமிழ்ச்செம்மல்” விருது பெற்றமைக்காகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறையில் கடமை உணர்வுடன் பணிபுரிந்த
“சிறந்த அலுவலர்” என்ற அரசு விருதினைப் பெற்றமைக்காகவும்,
ஆலங்குடியில் அவர் இல்லத்தில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து, என் கவிதைப் புத்தகம் வழங்கி, மனம் கனிந்த வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தேன்.
… கவிச்சுடர் கவிதைப்பித்தன்.