இராமநாதபுரம்கட்டுரைகள்

மியன்மார் வித்வான்களுக்கு நூல் அனுப்பிய முதுகுளத்தூர்  புலவர் பூ.ஆறுமுகம்பிள்ளை

மியன்மார் வித்வான்களுக்கு நூல் அனுப்பிய முதுகுளத்தூர்  புலவர் பூ.ஆறுமுகம்பிள்ளை

முனைவர் சே.முனியசாமி
பேராசிரியர்
முதுகுளத்தூர்ப் புலவர் ஆராய்ச்சியாளர்.

தென்குழந்தாபுரி என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள  முதுகுளத்தூரில் இருபதிற்கும் மேற்பட்ட  புலவர்பெருமான்கள் பிறந்து, பல்வேறு இலக்கியங்களைப் படைத்து தமிழிற்கும், தான் பிறந்த ஊரிற்குப் பெருமை சேர்ந்துள்ளனர். அவ்வழியில் இராமநாதபுரம் சேது சமஸ்தான வித்துவான் துவாத்ரிம் சதாவதானி சரவணப்பெருமாள் கவிராயரின் மாணவர் முதுகுளத்தூரைச் சேர்ந்த பூலாறுசாமிபிள்ளை ஆவர். இவர் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இன்று  “தமிழர்களின் தாய்மடி கீழடி” எனக் குறிக்கப்பெறும் கீழடி பற்றி  “கீழடி மகிமைச் சிந்து” எனும் நூலைப் படைத்துள்ளார். மதுரை ரயில் நிலையத்திலிருந்து கீழடி செல்வதற்கான வழித்தடங்களை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பூலாறுசாமியின் மகனே ஆறுமுகம்பிள்ளை ஆவார்.  இவர் 1899 ஆம் ஆண்டு  ‘சோடசப்பிரபந்தம்’ எனும் நூலை இயற்றியுள்ளார். சோடசம் என்றால் பதினாறு. பிரபந்தம் என்றால் கட்டப்பட்டவை அல்லது தொகுப்பு என்று பொருள்.  இது ஒரு இலக்கிய வகையாகும். சோடச பிரபந்தம் என்பது பதினாறு வகை இலக்கியங்களால் ஆக்கப்பட்டவை. தமிழில் 96 சிற்றிலக்கியங்கள் உண்டு. இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிபொருள்களில் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது. சான்றாக, பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்றவைகள் சிற்றிலக்கிய வகைகளைக் குறிப்பிடலாம்.

‘சோடசப்பிரபந்தம்’ என்னும் நூல் விநாயகர் திரிபு வெண்பாவந்தாதி, மதுரை யமக அந்தாதி, திருவுத்தர கோசமங்கைப் பதிகம், பஞ்சாசத் திருப்புகழ், கொடுமளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி, குழந்தாபுரிப் பதிற்றுப்பத்துப் பதிகம், குழந்தாபுரிக் குமரேசர் மாலை, மருதூர் இரட்டைமணிமாலை, சித்திவிநாயகர் மும்மணிமாலை, சித்திவிநாயகர் பதிகம், தில்லை நடராஜர் பதிகம், காரைக்குடி கொப்புடையம்மன் பதிகம், முகவை திரிபுரசுந்தரியம்மை பதிகம், திருத்தொண்டர் வந்தனைக் கோவை, தாயுமானசுவாமிகள் புராணம், அரிச்சந்திரவண்ணம்  போன்ற 16 வகையான நூல்களைக் கொண்டுள்ளது.

விளம்பரம்

இந்நூலில், விளம்பரம் எனத் தலைப்பில் முக்கிய அறிவிப்பாக பூ.ஆறுமுகம்பிள்ளை ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளார். “என்னாற் செய்யப்பட்டிருக்கிற அரிச்சந்திர வெண்பாவை இந்தச் சோடசப் பிரபந்தத்துடன் சேர்ப்பதாய் நோட்டீசு மூலம் பிரசுரஞ் செய்திருந்ததில், வித்துவான்கள் அதைப் பிரத்தியேகமாகப் பிரிண்டு செய்வது நலமாயிருக்குமென அபிப்பிராயப்பட்டதால் அதை இத்துடன் சேர்க்கவில்லையாதலாற் கூடிய சீக்கிரமச்சிட்டுக் கையொப்பக் காரர்களுக்கு ஒவ்வொரு புத்தகம் இனாமாக அனுப்பப்படுமென்று தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன்.

          இப்புத்தகம் வேண்டியவர்கள் மணியார்டர் மூலம் பணத்தை எனுக்கனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். தபால்சார்ஜ் நாலணாச் சேர்த்தனுப்ப வேண்டும். வி.பி. போஸ்டிலனுப்ப வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டாலும் அனுப்பப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார் பூ.ஆறுமுகம்பிள்ளை.

மேலும், அரிச்சந்திர வெண்பா எனும் நூலை கையொப்பமிட்ட ஒவ்வொருவருக்கும் இலவசமாக அனுப்பி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.  இந்நூலை வாங்க விரும்புவோர் மணியாடர் மூலம் பணத்தை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம் எனும் செய்தியையும் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி கையொப்பக்காரர்களின் பெயர், ஊர், எத்தனை நூல்கள் என்பதனை அட்டவணையிட்டு பதிவு செய்துள்ளார். அந்த அட்டவணையில் சுமார் 174 பேர்கள் வெளியிட்டுள்ளார். அதில் 73 பேர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக இராமநாதபுரம், முதுகுளத்தூர், இளஞ்செம்பூர், இதம்பாடல், மேலக்கொடுமளூர், அபிராமம், பெருநாழி, அருப்புக்கோட்டை, மதுரை போன்ற ஊர்களைச் சேர்ந்த வித்துவான்கள். மீதமுள்ள 100 பேர் இரங்கோனைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இரங்கோன் என்பது பர்மா மாகாணத்தின் தலைநகர் ஆகும்.        

தமிழகத்திலிருந்து பர்மாவுக்கு குடியேறிய தமிழர்கள் அதிகமான நூல்கள் வாசித்து வந்துள்ளனர். பர்மா இரங்கோனைச் சேர்ந்த வித்துவான்களுக்கும்  முதுகுளத்தூர் பூ.ஆறுமுகம்பிள்ளைக்கும் எவ்வாறு தொடர்பு கிடைத்தது என்பது தனியொரு ஆய்வுக்குரியதாகும். இருப்பினும் 19 ஆம் நூற்றாண்டில் 174 நூல்கள் பெறுவதற்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த வியப்பளிக்கின்றது.                                                                                                       

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button