பிணியிலிருந்து மக்களை பாதுகாப்பது என்பது முக்கிய சமூகக் கடமை “மக்கள் ஊழியர்” புத்தக வெளியீட்டு நிகழ்வில் கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் ஷைலஜா டீச்சர்

பிணியிலிருந்து மக்களை பாதுகாப்பது என்பது முக்கிய சமூகக் கடமை “மக்கள் ஊழியர்” புத்தக வெளியீட்டு நிகழ்வில் கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் ஷைலஜா டீச்சர்

தொற்று நோய் உள்ளிட்டு மக்களைத் தாக்கும் பல்வேறு பிணிகளில் இருந்து அவர்களை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது ஆட்சியில் இருப்போரது முக்கிய சமூகக் கடமை என்ற கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் கே கே ஷைலஜா, மிகவும் சவாலான கட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இயங்கும் பொறுப்பை எதிர்பார்ப்புகளோடு மார்க்சிஸ்ட் கட்சி தனக்கு வழங்கியது, அதை மிகுந்த மன நிறைவோடு கூட்டாக நிறைவேற்ற முடிந்தது என்று குறிப்பிட்டார்.
பிரக்ருதி ஃபவுண்டேஷன் நிறுவனம் காலச்சுவடு பதிப்பகத்தோடு இணைந்து புதன்கிழமை (டிசம்பர் 17) அன்று சென்னை இதழியல் கழகத்தில் நடத்திய அவரது சுய சரிதை நூலின் தமிழ் வடிவமான ‘மக்கள் ஊழியர்’ புத்தக வெளியீட்டு நிகழ்வின் கலந்துரையாடலில் பங்கேற்ற ஷைலஜா, சமூகத்தினரது ஒத்திசைவான தன்மையோடு செயல்பட்டதால், பல்வேறு சவால்களை சந்திக்க முடிந்தது, குறிப்பாக, மகப்பேறு காலத்தில் குழந்தை இறப்பு விகிதம் தான் பொறுப்பேற்ற போது 1000 பிறப்புக்கு 12 என்று இருந்தது, ஐந்தாண்டு முடிவில் 5 ஆகக் குறைந்தது என்றார். எல்லா விதத்திலும் ஒப்பிட்டுக் கொள்ள முடியாது என்றாலும், இந்த விகிதம் அமெரிக்காவிலேயே 5.6, ஆனால் கேரளத்தில் 5 என்பது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்பதை குடும்ப சுகாதார நிலையம் என்று பெயர் மாற்றம் செய்தோம் என்றும் தெரிவித்தார்.
கேரள முதலமைச்சராக 1957இல் பொறுப்பு ஏற்றுக் கொண்டவுடன் இ எம் எஸ் நம்பூதிரிபாடு அவர்கள் கையெழுத்திட்ட முதல் அவசர சட்டம், வாழ்விடத்தில் இருந்து யாரையும் அப்புறப்படுத்தக் கூடாது என்பதாகும். அந்த ஆண்டில் பிறந்தவள் நான். அரசியல் பணி என்பது ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழ்மையில் தவிப்போருக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவாக அமைய வேண்டும் என்று இளவயதிலிருந்தே உறுதி ஏற்பட்டது. பாட்டியுடன் இளவயதிலேயே பொது இயக்கங்களில் சென்று பங்கேற்கத் தொடங்கி விட்டேன் என்றார் ஷைலஜா டீச்சர்.
பொது வாழ்க்கைக்கு அர்ப்பணிப்போடு இயங்குவதற்குத் தனக்கு ஆதர்சமாக இருப்பவர் தனது பாட்டி தான் என்றார் ஷைலஜா டீச்சர். தனது குடும்பத்தினர் பெரிய அரசியல்வாதியாக உருவெடுக்காவிட்டாலும், தன்னலமற்ற முறையில் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு விதத்தில் பங்காற்றிக் கொண்டிருந்தவர்கள், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கூட என்றார் அவர்.
அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பு பற்றிய கேள்விக்குத் தனது முத்திரை புன்னகையோடு பதிலளித்த ஷைலஜா, தான் பொறுப்பேற்றபோது சுகாதார செயலாளராக இருந்த ராஜீவ் சதானந்தன் மிகவும் அழுத்தமானவர், அமைச்சர் சொல்லுக்கெல்லாம் பிடிகொடுக்க மாட்டார் என்று பலவும் சொல்லப்பட்டு இருந்தாலும், முதல் சந்திப்பிலேயே நேர்படப் பேசிக் கொண்டதில் பணிக்காலத்தில் மிகச் சிறந்த முறையில் இணைந்து பணியாற்ற முடிந்தது, அவரது முன் மொழிவுகளையும் கட்சியில் கலந்தாலோசித்து ஏற்புடைமை உள்ளவற்றை நிறைவேற்ற முடிந்தது, சுகாதாரத் துறையில் மின்னணு முறையை (இ ஹெல்த்) மெல்ல அறிமுகப்படுத்தியது அப்படித் தான் என்று விளக்கினார்.
அதிகார வர்க்கத்தை எப்படி அணுகுவது என்பதற்கு மாமேதை லெனின் வழிகாட்டி உள்ளார் என்று சொன்ன ஷைலஜா, புரட்சிக்குப் பின் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், முந்தைய அரசின் அதிகார வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட வேண்டியது தானே என்று சக தோழர்கள் கேட்டபோது, அது தேவையில்லை, அவர்களது அனுபவம் நமது ஆட்சிக்கும் முக்கியமானது, அவர்களைக் கொண்டே நமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது எப்படி என்கிற வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று லெனின் குறிப்பிட்டதை நாங்களும் கடைப்பிடிக்கிறோம் என்றார் ஷைலஜா. தங்களது கோரிக்கைக்காகப் போராட்டத்தில் இறங்கிய மருத்துவர் சங்கத்தோடு அமர்ந்து பேசி அவர்களது அன்பையும் ஒத்துழைப்பையும் பெற்று சுகாதாரத் துறையில் மக்களுக்கான பணியைச் சிறப்பாக ஆற்ற முடிந்தது என்றார் அவர்.
கோவிட் விஷயத்தில் தொற்று பரவலைத் தடுக்க வேண்டியது முக்கியம் என்ற அணுகுமுறையே பெரிய பலன் அளித்தது என்ற ஷைலஜா, நெருக்கடி ஏற்படுத்திய பல தருணங்களில் ஒன்றைக் குறிப்பிடுகையில், இத்தாலியில் இருந்து தொற்று பாதிப்போடு வந்திறங்கிய ஒரு குடும்பத்தினர் மூலம் அவர்கள் சென்ற ஊர்களில் எல்லாம் பரவிய தொற்று, பத்தனம்திட்டா பகுதியில் முதலில் வெளிப்பட்டதும் வேகமாகக் காரணங்களைக் கண்டறிந்து நடத்திய விசாரிப்புகளில் 3 ஆயிரம் பேர் வெவ்வேறு மாவட்டங்களில் இதனால் பாதிப்புற்றதை அறிந்து தனிமைப்படுத்தி மருந்துகள் அளித்து மேற்கொண்டு யாருக்கும் பரவாமலும் சேதம் விளையாமலும் பார்த்துக் கொண்டோம் என்றார். அறியாமல் அவர்கள் செய்த தவறுக்காக அந்தக் குடும்பத்தை சமூக ஊடகங்களில் தாக்கக் கூடாது என்றும் தான் முக நூலில் பதிவு செய்ததையும் குறிப்பிட்டார்.
இதழியல் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்த ஷைலஜா, கேரளத்தில் உச்ச நீதி மன்றமே தீர்ப்பு அளித்தபிறகும் இந்துத்துவ வெறி சக்திகள் சபரிமலைக்குப் பெண்கள் சென்று வழிபட முடியாதபடி மறித்து சமூகத்தில் கலவரம் விளைவிக்கவே அதை இடது ஜனநாயக முன்னணி அரசு நேர்த்தியாகத் தான் கையாள வேண்டி வருகிறது, உலகளாவிய அளவிலும், இந்தியாவிலும் பழமைவாத சக்திகளின் முயற்சியால் அடையாள அரசியல் ஏற்படுத்தும் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார். உடலில் ஏற்படும் நோய்களை போலவே எண்ணங்களில் ஏற்படும் தவறான போக்குகளைக் களையவும் முற்போக்கான விஷயங்களை உயர்த்திப் பிடிக்கவும் போராடத்தான் வேண்டும் என்றார்.
தனது இணையர் பாஸ்கர், அன்பான மாமியார், தனது பெற்றோர் என்று குடும்பம் முழுவதும் தனது பொது வாழ்க்கைக்கு நல்கும் அரவணைப்பு தான் புன்னகையோடு பணிகளை முன்னெடுக்க உதவுகிறது என்று குறிப்பிட்ட ஷைலஜா, அமைச்சர் பொறுப்பில் இருந்துதான் செயலாற்ற வேண்டும் என்பதில்லை, கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற அமைப்புக்குள்ளும் வெளியேயும் மக்கள் பணியை கட்சி பணித்தபடி திறம்பட நிறைவேற்ற முடியும், அவரவருக்கான இடம் எல்லோருக்கும் உண்டு என்றும் பதில் அளித்தார். மொழி பெயர்ப்பாளர் சீனிவாசன் மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, “மக்கள் ஊழியர்” நூலை வெளியிட்டுப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மிகுந்த சவாலான காலத்தில் சுகாதார அமைச்சர் பொறுப்பை ஏற்று, கொடிய நிபா தொற்று பாதிப்பு, அதை எதிர்கொண்டு பெருமளவில் மக்களைத் தற்காத்து முடிப்பதற்குள் இயற்கை பேரிடர், அதிலிருந்து மீள்வதற்குள் உலகளாவிய கோவிட் தொற்று, இரவு பகலாகக் கடுமையாக சுகாதாரத்துறை பணிகளை ஒருங்கிணைத்து தேசிய அளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உயிரிழப்பு என்று கேரள மக்களை பாதுகாத்த பெரும்பணியில் அவர்களது பங்களிப்பு மகத்தானது என்று பாராட்டினார். தனது சொந்த வாழ்க்கையை விவரிக்கும் தனது புத்தகத்தில் பின்தங்கி இருந்த கேரள சமூகத்தில் நடைபெற்ற சீர்த்திருத்தங்களின் விளைவாக விதவைகள் மறுமணம் உள்பட ஏற்பட்ட மாற்றங்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறார், மொழி பெயர்ப்பு என்று சொல்ல முடியாத அருமையான வாசிப்பு அனுபவம் வழங்கும் இந்த நூலை எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன், சமூகத்திற்கு நற்பணி ஆற்றும் இலட்சியம் இருந்தால் போதும், பதவிகள் தேவை என்பது இல்லை, எல்லோரும் சிறப்பான பங்களிப்பைச் செய்ய முடியும் என்று வாசகருக்கு உணர்த்தும் புத்தகம் இது என்று குறிப்பிட்டார்.
நிகழ்வை பிரக்ருதி ஃபவுண்டேஷன் ரன்வீர் ஷா ஒருங்கிணைத்தார். சென்னை இதழியல் கழகத்தின் இயக்குநர் ஏ எஸ் பன்னீர்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதழியல் மாணவர்கள் உள்ளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர்.




