கவிதைகள் (All)

நொடியில் மறைந்த நோன்பு பிறை

நொடியில் மறைந்த நோன்பு பிறை
——————————-
அகண்ட இருண்ட வானம்
அலையும் முகில்கள் காணோம்
விண்மீன்கள் மெலிதாய் மின்னின
மின்னல் கோடுகள் கிறுக்கி மறைந்தது

அமாவாசையில் அற்புத நிகழ்வு
ஆர்ப்பரிக்கும் கடலில் அமைதி
அலைகள் கரையில் தவழவில்லை
நண்டுகள் இரை தேடிவரவில்லை

தென்றலும் தூறலும்
கைகோர்த்தன
பனித்துளிகள் பூக்கள் தெளித்தன
மாலையும் இரவும்
மயங்கும்
அந்திவானில் ஆரத்தழுவிய ஆலிங்கணம்

தூக்கணாம் குருவி கூட்டில்
தூங்காமல் இரு உயிர்த்
தேடல்கள்
தேன் கூட்டில் ரீங்காரம் இல்லை
கட்டுபாடற்ற கானகம் கட்டுண்டது
மலர் மொட்டில் மயங்கிய வண்டு
மகரந்த சேர்க்கை நடை பெறவில்லை

எங்கும் இனம்புரியா அமைதி
ஏனோ இந்த ஆழ்ந்த மௌனம்
எல்லாமும் எதைத் தேடுகின்றன
தேடல்கள் முற்றுப் பெற

தேடிய நோன்பு பிறை
நொடியில் மின்னி மறைந்தது
நந்தவனத்தில் பூக்கள் பூத்தன
உலகில் சோபனம் நிறைந்தது
அமைதி கலைந்து ஆரவாரம்

ஓ ! ரமழான் பிறந்து விட்டதோ
ஓ ! ரஹ்மத்தின் வாசல்கள்
திறந்து விட்டதோ

வானுலகம் அலங்காரம் கொண்டது
வல்லோன் அல்லாஹ் கட்டளையோடு
வானவர்கள் பூமியில் இறங்கினர்
வரும் ஆண்டின் வரவு செலவுகளோடு

நரகத்தின் தீ அணைந்தது
நரக வாயில்கள் அடைபட்டன
மனித எதிரி சைத்தான் கைதானான்
மலக்குல் மாலிக் விடுப்பில் சென்றார்

இரவில் நின்று வணங்குவோம்
இறுதிப் பத்தில் இக்ஃதிகாப் இருப்போம்
எல்லோரும் எல்லாமும் பெற
இறைவனிடம இருகரம்
ஏந்துவோம்

அல்குர்ஆன் இறங்கிய மாதம் இது
அறிவுக்கண் திறந்த மாதம் இது
அல் தவ்ஃபா அறுபதில் சொன்ன
அனைவர்க்கும் அழகிய முறையில்
அள்ளித் தந்து அன்பால் இணைவோம்

கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button