கவிதைகள் (All)

வள்ளுவம் வளர்ப்போம்

வள்ளுவம் வளர்ப்போம் .

வள்ளுவம்  என்பது வாழ்க்கை நெறிமுறை
வள்ளுவம் என்பது  தமிழின் திருமறை
வள்ளுவம் என்பது  உலகப் பொதுமறை
வள்ளுவர்  தந்தது  எளிய நடைமுறை.

வள்ளுவம் என்பது  தமிழன் உடைமை.
வள்ளுவம் என்பது  தமிழின் பெருமை  
வள்ளுவம் கூறும் கருத்துக்கள் அருமை.
வள்ளுவம்  காப்பது  தமிழன் கடமை.

வள்ளுவம் கற்றோர் மதியுளராவார்
வள்ளுவமறிந்தார் வல்லவராவார்
வள்ளுவ நெறியினர்  நல்லவராவார்
வள்ளுவம் உணர்ந்தோர் வாழ்வியல் .உணர்வார்

அறத்தின் பெருமை உணர்த்திடும்  ஒருபால்
பொருளின்  சிறப்பை புகழ்ந்திடும்  ஒருபால்
இன்பத்தின் பொருளை இயம்பிடும் ஒருபால்  
முழுமை பெற்றிட வைக்கும் முப்பால் .
தமிழன் என்ற தனிப்பெரும் பிறப்பால்
தமிழன்னை நமக்குத் தரும் தாய்ப்பால்  
தலைநிமிர்ந்து வாழ அளித்திடும் வாய்ப்பால்  
தரணி போற்றிடும் அதன் தனிச்சிறப்பால்.

இல்லந்தோறும்  இது இருந்திடல் வேண்டும்
பள்ளிகள் தோறும்  பயிற்றுவிக்க வேண்டும்
வீதி உலாக்கள் நடத்திடவேண்டும்
மன்றங்களிலே  மலர்ந்திட வேண்டும்.
அலுவலகங்களில்  இடம்பெற  வேண்டும்.
பூங்காக்களிலும்  பயின்றிடவேண்டும் .
கவிதைகள்   மூலம் பரவிடவேண்டும்
கருத்தரங்கங்கள் நடத்திடவேண்டும்.
ஒவ்வொரு அடிநாம் வைத்திடும்போதும்
ஈரடி கண்ணில்  தென்படவேண்டும்.

ஈரடி  தன்னில்  ஈடில்லாக்  கருத்துக்கள்
ஏற்று நடந்திடின் எண்ணிலாப் பயன்கள்
வேற்று மொழியினர் அவரவர்  மொழியில்
மாற்றியதனை  மனமுவந்தேற்றார்  .

திருக்குறளமுதம்  தினமும் அருந்து  
திருக்குறள் என்றும் திகட்டா விருந்து
தீயவை விலக்க  அதுவே  மருந்து
நீயதை உணர்ந்து நிற்பாய் நிமிர்ந்து .

வள்ளுவம் வாழ்வில்  கடைபிடித்திடுவோம்.
வள்ளுவம் வளர்க்க சூளுரைத்திடுவோம்.

வாழ்க  வள்ளுவம் , வாழ்க வள்ளுவர்  
வாழ்க தமிழ் மொழி , வாழ்க    தமிழினம் , .

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button