ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி!
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குடும்பத்தினர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ பின்னணி:
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியைச் சேர்ந்தவர் சைபேராஸ்கான். மீனவரான இவரது மனைவி ஆயிஷாபிவி 47. இவர்களுக்கு முகம்மது பைசல் 17 என்ற மகனும், ஜெஸ்ரா 11 என்ற மகளும் உள்ளனர்.
இவர்களது பகுதியில் ஒரு சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். இது குறித்து சைபேராஸ்கான் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, கஞ்சா விற்றதாக சிலரை போலீசார் கைது செய்தனர்.
பழிவாங்கும் நடவடிக்கை:
இந்நிலையில், புகார் அளித்த சைபேராஸ்கான், அவரது குடும்பத்தினருக்கு கஞ்சா விற்றவர்களின் கூட்டாளிகள் மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்தனர். இதுகுறித்து, மீண்டும் காவல் நிலையத்தில் சைபேராஸ்கான் புகார் அளித்த நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தீக்குளிப்பு முயற்சி:
இதைத் தொடர்ந்து ஆயிஷா பிவி, இவரது மகன், மகள், தம்பி ஜீல் ரகுமான் 40 ஆகிய 4 பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




