தமிழ்நாடு

நாகம்பட்டி கல்லூரியில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா

நாகம்பட்டி கல்லூரியில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. தமிழ்நாடு முழுவதுமுள்ள பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக (ISBN) வெளியிட்டனர். பதிப்பாசிரியர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் இரா. சேதுராமன் வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குநர் மற்றும் கல்வியியல் துறைத்தலைவர் அ. வெளியப்பன் தலைமையுரை ஆற்றினார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வாணையர் உ. பாலசுப்ரமணியன் நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அவர் உரையாற்றுகையில், காலத்தின் தேவையறிந்து இந்நூல் வெளிவருவது மிகவும் பாராட்டுக்குரியது. கல்வித் துறையில் மாணவர்களின் அறிவையும், திறனையும், அவர்களின் ஆற்றலையும் மேம்படுத்துவது ‘கற்றல் கற்பித்தல்’ என்னும் பயில்முறைதான். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மொழியைப் பிழையின்றி ஆளுமை செய்வதற்கும், தங்களின் படைப்பாற்றலைத் தேர்வுகளில் தனித்துவமாக வெளிப்படுத்துவதற்கும் இந்நூலில் உள்ள வழிகாட்டுதல்கள் சிறந்ததொரு அடித்தளமாக அமையும் என நம்புகிறேன். கற்பித்தல் என்பது வெறும் தகவல்களைத் தருவதோடு முடிந்துவிடுவதில்லை; அது மாணவர்களின் சிந்திக்கும் திறனைத் தூண்டி, உலகியல் வாழ்விற்கும் ஒருசேரத் தயார்படுத்த வேண்டும் என்று பேசினார்.

சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் சீதா லட்சுமி நூலிலைப்பெற்று சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் தமிழ்மொழியை ஆழமாக கற்றல் என்பதைவிட எழுத்துப்பிழைகள் இன்றி எழுதுதல், வாக்கியங்களை சரியான முறையில் அமைத்தல், ஒற்றுப்பிழைகள் இன்றி எழுத பழகிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நூல்களும், மொழிப் பாடத்தை மனப்பாடம் செய்யும் முறையாக மாற்றாமல், சிந்தனையைத் தூண்டும், படைப்பாற்றல் மிக்க முறையாக மாற்றுவதற்கான மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பேசினார்.
கல்லூரி முதல்வர் மா. முருகானந்தம், தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் மற்றும் மாவட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் வே. செல்வி, கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவன தாளாளர் வெ.மு. லட்சுமணப்பெருமாள், உடற்கல்வி இயக்குநர் செ. கணேசன் வாழ்த்திப் பேசினர்.
சென்னை, கோயம்புத்தூர், சிவகாசி, சங்கரன்கோவில், பூம்புகார், மார்த்தாண்டம், காயல்பட்டினம், மதுரை, திருச்சி, சிதம்பரம் போன்ற ஊர்களில் உள்ள பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகள் குறித்து பேசினர். கோவிந்தப்பேரி ம.சு.ப. கல்லூரி, திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி, ராணி அண்ணா கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி, கீழ ஈரால் டான் போஸ்கோ கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நூலும், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன. இணைப்பதிப்பாசிரியர் மு. பவானி நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button