சேதுபதி மன்னர்களும் தமிழ்த் தாத்தாவும்

சேதுபதி மன்னர்களும் தமிழ்த் தாத்தாவும்

கி.பி.17 ஆம் நூற்றாண்டுக்குப்பின் சேதுபதி மன்னர்களின் காலத்தில் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக விளங்கியது.
இதற்கு முக்கியக் காரணம் சேதுபதி மன்னர்கள். இவர்கள் புவியரசர்களாக
மட்டுமின்றி, கவியரசர்களாகவும் வலம் வந்துள்ளனர். தமிழ்மொழிமீது தீராதப்
பற்றுடையவர்களாக இருந்துள்ளனர். இவர்களது ஆட்சியின்போது பல்வேறு
புலவர்களை ஆதரித்துள்ளனர். அவ்வகையில் சேதுபதி மன்னர்களின் அவைக்களப் புலவர்கள், ஆதரவு பெற்ற புலவர்கள் என இருவகையில் பிரிக்கலாம்.
புலவர்கள் சேதுபதி மன்னர்களின் அவைக்களத்திற்கு நேரிடையாக
வந்து தம் கவிப்புலமையை வெளிக்காட்டி பரிசுப் பெறுவதைப் பெருமையாக
எண்ணியுள்ளனர். தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் ஆகிய இடங்களிலிருந்து
பரிசில் பெற்றுச் சென்றுள்ளனர். குறிப்பாக, சாமிநாததேசிகர்,
பூலாறுசாமிப்பிள்ளை, கல்போது பிச்சுவையர், பரிதிமாற் கலைஞர்,
மு.இராமசாமிக்கவிராயர், மு.ரா.கந்தசாமிக்கவிராயர், அரஞ்சண்முகனார்,
சபாபதிநாவலர், சாமக்குளம் வேங்கடரமணதாசர் ஆகியோர் அடங்குவர்.
அவ்வரிசையில் தமிழ்த்தாத்தா என அழைக்கப்பெறும் உத்தமதானபுரம்
வேங்கடசுப்பையர் சாமிநாதன் என்ற உ.வே.சாவும் இடம் பெறுவார்.
உ.வே.சா பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ்க்கல்வி ஆசிரியராகப்
பணியாற்றியபடியே, பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு,
தமிழ்க்கல்வியின் எல்லையை விரிவுபடுத்தினார். தமிழுக்கு பெருங்கொடை
உ.வே.சா என்றால் அது மிகையாகாது. பல்வேறு நூல்களைப் பதிப்பித்துத்
தமிழுக்கு அணி சேர்த்துள்ளார்.
பாஸ்கரசேதுபதி, மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி, சண்முக
ராஜேஸ்வர சேதுபதி, பாண்டித்துரைத் தேவர் ஆகியோரின் ஆதரவு பெற்று பல்வேறு
நூல்களை உ.வே.சா பதிப்பித்துள்ளார். இராமநாதபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி
விழாவில் பங்குபெற்றுப் பாஸ்கரசேதுபதியிடம் பரிசில் பெற்றிருப்பதை
உ.வே.சா எழுதிய ‘என் சரிதம்’ எனும் நூலில் பதிவு செய்துள்ளார்.
மதுரைத் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்த
உ.வே.சா அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தார். தமிழ்ச்சங்க
உறுப்பினர் பதவியுடன் செயல்பட்டது மட்டுமின்றி, ஆண்டுதோறும் நடைபெறும்
தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டு தலைமையேற்றும் அறிவுரையும்
வழங்கியுள்ளார். இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி, நான்காம் தமிழ்ச்சங்கம்
5000 ரூபாய் பண முடிப்பை வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழ்ச்சங்கத்
தலைவரான மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி ‘தங்கத்தோடா’ அணிவித்துச்
சிறப்பித்துள்ளார். பாஸ்கர சேதுபதியின் முடிசூட்டு விழாவிற்கு வரமுடியாத
உ.வே.சா மனம் வருந்தி கடிதப் பாடல்களை எழுதி அனுப்பியுள்ளார். அதனை,
“இயல்மிகுத்த முகவையிற்பாஸ் கரசேது/ பதியரசே! யானின் றோதும்/ மயல்மிகுத்த மொழிவினவி மனமகிழ/ எனக்கபயம் வழங்கு வாயால்” என வேண்டிப் பாடியுள்ளார். (சேது மன்னர்களின் தமிழ்ப்பணி, ப.116).
தான் பதிப்பித்த திருவிளையாடற் புராணப் பதிப்புரையில், “நான் கவலையுறா
வண்ணம் பல வருடங்களாக மாத வேதனமளித்து ஆதரித்து வரும் சேதுபதி” என தனக்கு உதவிய மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதியை நன்றியதலோடு
குறிப்பிடுகின்றார். (சேது மன்னர்களின் தமிழ்ப்பணி, ப.196). “என்னை
இப்புத்தகங்கள் மூலமாயும் கெளரவித்தற்கு என்று நன்றி பாராட்டும்
கடமையிடையேன்” எனக் குறிப்பிடுகின்றார். (சேது மன்னர்களின் தமிழ்ப்பணி,
ப.197).
தக்கயாப் பரணியை பரிசோதித்து வெளியிட சண்முக ராஜேஸ்வர சேதுபதி பொருளுதவி செய்துள்ளார். பாண்டித்துரைத் தேவரின் பொருளுதவியால், புறப்பொருள்
வெண்பாமாலை மூலமும் உரையும் வெளியிட்டார். இதனைப் பதிப்பித்தமைக்குப்
பாண்டித்துரைத் தேவர் ஐந்நூறு ரூபாய் அனுப்பி அதனை ஏற்றுக் கொள்ளுமாறு
17.12.1894 ஆம் ஆண்டு ஒரு செய்யுட் கடிதம் எழுதியுள்ளார். சங்க இலக்கிய நூல்களை நமக்கு அச்சு வடிவத்தில் அளித்த தமிழ்த் தாத்தாவை ஆதரித்து பாராட்டிய நிலையானது, சேதுபதி மன்னர்கள் தமிழ்மீது வைத்திருந்த பெரும்பற்றைப் பறைசாற்றுகின்றது.
முனைவர் சே.முனியசாமி, மதுரை.

