இராமநாதபுரம்கட்டுரைகள்

வசைமொழிகளின் வல்லோன் முதுகுளத்தூர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர்

வசைமொழிகளின் வல்லோன் முதுகுளத்தூர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர்   

 முதுகுளத்தூர்ப் புலவர் என்றாலே உடனே நினைவுக்கு வருவது சரவணப்பெருமாள் கவிராயரே. (பெரிய) அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர் (தாத்தா), (சிறிய) சதாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர்(பேரர்) என இருவர் உண்டு. இவரது மகன் அருணாச்சலக் கவிராயர். இவர்கள் சேது நாட்டுப் புலவர் பரம்பரையின் வழி வந்தவராவார்கள். சரவணப்பெருமாள் கவிராயர் அட்டாவதானம் செய்பவராதலின் அச்சொல்லை இவர் பெயருக்குமுன் வைத்து வழங்குவதுண்டு. அட்டாவதானம் என்பது ஒரே சமயத்தில் எட்டு விதமான வெவ்வேறு செயல்களில் கவனம் செலுத்தும் கலை. (அட்டம்-எட்டு). இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்.  நகைச்சுவை நயம் விளங்கக் கற்பனை அமைத்துத் தனிப்பாடல்கள் பாடுவதில் மிக்க வல்லவர். 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரைப்பற்றி “வசைமொழிகளைத் தொகுத்துரைப்பதில்  இவரைவிட வல்லவரில்லை; தமது செருக்குத் தோன்றப் பாடுவதிலும் அங்ஙனமே. இவர் உலக வழக்கிலுள்ள மொழிகளையே அமைத்துத் தட்டுத் தடையின்றிப் பாயியற்றும் திறமுடையவர்” எனக் கா.சு.பிள்ளை குறிப்பிடுகின்றார். (தமிழ் இலக்கிய வரலாறு,ப.442).  சிவஞான முனிவரின் மாணவர்கள் பன்னிருவரில் ஒருவரான சோமசுந்தர பிள்ளையின் மாணவராகத் திகழ்ந்தவர் சரவணப்பெருமாள் கவிராயர். சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர், வெண்பாப்புலிப் புலவர், பாலசிங்கக் கவிராயர் ஆகியோர் சரவணப்பெருமாள் கவிராயரின் சமகாலப் புலவர்கள் ஆவர்.
  இதே நூற்றாண்டில் இலக்கண வரம்பு மீறுதலின்றியும், சொல்லழகும், பொருளழகும் குறைவின்றியும் பாடல்களை இயற்றுவதில் தனித்தடம்  பதித்தவர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர். இவரின் கவிச்சிறப்பினைப் போற்றும் முகமாக  “பல தெய்வங்களைப் பற்றிய துதிகளோடு தமது ஆற்றல் தெரியாதாரிடம் சரவணப் பெருமாட் கவிராயர் போலத் தற்புகழ்ச்சியை அழகாகப் பாடுமுறை, உலகியலைப் படமெடுத்துக் காட்டுவது போன்ற லோபிகளின் இயல்பு, வறுமையின் அல்லல், மாதர்களி னியற்கை நுட்பங்கள், கள், ஊனுண்பாரது இயல்பு, கால மழையின் கபடம், துறவிகளின் வஞ்சக வொழுக்கம், அகத்துறை நயங்கள், மனித வியற்கை நுட்பங்கள் முதலிய அரும் பல பொருள்களின் வருணனை இயற்கையை இற்றெனக் கிளக்கும் சிறப்பு வாய்ந்திருப்பன” எனச் சிறப்பித்து கா.சு. பிள்ளை கூறுகின்றார்.   (பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற்றிரட்டு, முன்னுரை)
மேலும் இவரை,  ‘வண்டமிழ்நா வலர் பலருட் சிறந்தசர வணப்பெருமாள் வலவன் முன்னே’’ என முதுகுளத்தூர்ப் புலவர் சுப்பையா பிள்ளை இயற்றிய புவனேந்திர காவியத்திற்கு சிறப்புப்பாயிரம் பாடிய எம்.கே.எம். அப்துல்காதிறு ராவுத்தர் இவரின் தமிழ்ப் புலமையைச் சுட்டுகின்றார். (சுப்பையாபிள்ளை,புவனேந்திர காவியம், ப.3) சேதுநாட்டு அவைக்களப் புலவராயிருப்பினும் ஒரேயிடத்தில் தங்கியிராமல் பல இடங்களுக்குச் சென்று, தனது கவித்திறனை வெளிக்காட்டிப் பல பரிசில்கள் பெற்று வாழ்க்கை நடத்தியுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது
             இவர் முப்பது தனிப்பாடல்களும், எட்டு நூல்களும் செய்துள்ளார். இவர் இயற்றிய தனிப்பாடல்கள் தவிர வேறு நூல்கள் எதுவும் அச்சேறவில்லை. இவரைப் பற்றிய கூடுதல் செய்திகளை இவரின் தனிப்பாடல்களின் வழி அறியமுடிகிறது. இராமேசுவரம் இராமலிங்கேசர் பேரில் பணவிடு தூது, தருமர் அசுவமேதயாகப் புராணம், விநாயகர் திருமுக விலாசம், முத்தளகுசாமி மீது தூது, முத்திருளப்பபிள்ளை மேல் காதல், விஜயரகுநாதத் தொண்டைமான் பேரில் தூது, அம்மைநாதன் வண்ணம், ஆப்பனூர்க் குறவஞ்சி முதலியவை இவருடைய நூல்களாகும்.
கவிப்பெருமை
இவர்தம்  கவித்திறத்தால் பல்வேறு பாடல்கள் பாடிப் பரிசு பெற்றதோடு மட்டுமின்றி பல பட்டங்களைப் பெற்றுப் பிறரால் கவரப்பட்டுள்ளார். இவர் சென்னை சென்று திரும்பிய போது சென்னை முதல் இராமநாதபுரம் வரையுள்ள சுங்கக் காவலர்க்கு ‘அவதானியருள’ என்ற பாட்டினைப் பாடி சுங்கவரி செலுத்தாது பொருளுடன் ஊர் வந்து சேர்ந்துள்ளார். (எச்.வைத்தியநாதன், (ப.ஆ), பிற்காலப்புலவர்கள், ப.150). திருமலைராயன் பட்டினத்திற்கு வந்து அவ்வூரார் மீது ‘யெளவன மனோமணி’ என்னும் சீட்டுக்கவி பாடி அவ்வூரார் வேண்டுகோளுக்கிணங்க அங்கு அட்டாவதானம் செய்து தம் கவித்திறத்தால் ஆயிரம் பொன் சம்மானம் பெற்றார். (எச்.வைத்தியநாதன், (ப.ஆ), பிற்காலப்புலவர்கள், ப.150). கேரள நாட்டிற்குச் சென்று ஆதிகேரள இராமராஜர் மீது ‘மாதுபதி’, ‘நீதிபதி’ என்ற பாடல் இயற்றினார். அம்மன்னன் அப்பாட்டில் குறித்தபடி அகத்திய முனிவரைக் கண்டு வந்த பிறகு தன்னைக் காணலாமென்று கூறிப் பின்பு பேட்டி கொடுக்கவில்லை. இவர் மாலை வரை காத்திருந்து பின்பு அட்டாவதானம் செய்து தந்தப் பல்லக்கும் மற்றும் பல பொருள்களும் பரிசு பெற்றுள்ளார்.  மேலும் சரவணப்பெருமாள் கவிராயர் சேதுபதி அவையில் பிரதானியாக விளங்கிய முத்திருளப்பப்பிள்ளை மீது காதல் பிரபந்தமொன்று பாடியுள்ளார். இப்பாடலில் முத்திருளப்பப் பிள்ளையின் சிறப்பைப் பற்றி எடுத்துரைக்கும் விதமாக கடாட்சமானவர், நற்குணமுடையவர் எனக் கூறுகின்றார்.  
சரவணப்பெருமாள் கவிராயர் எவருக்கும் அஞ்சாத துணிச்சலுடையவராகவும், தம் கவித்திறத்தால் அனைவரின் மனதில் இடம்பிடித்தவராகவும் விளங்கியுள்ளார். இவரால் எழுதப்பட்ட எட்டு நூல்கள் மற்றும் தனிப்பாடல்கள் முழுவதும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும்  பல்வேறு நூல்களில் ஆங்காங்கே உதிரிப்பூக்களாக தனிப்பாடல்கள் மட்டும் சிறிதளவு கிடைத்துள்ளன. இவருடைய பரம்பரையினர் தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகின்றனர். இப்பேற்பட்ட புலவர் பிறந்த ஊர் முதுகுளத்தூர் என்பது ஊரிற்குப் பெருமை அளிக்கின்றது.

முதுகுளத்தூர்ப் புலவர் ஆராய்ச்சியாளர்
முனைவர் சே. முனியசாமி
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button