உலக குடும்ப தினம்
உலக குடும்ப தினம் -15.05.2025
ஆலமரம் போல அன்னை தந்தை இருக்க ,
அதன் வேர் போல் தாத்தா ,பாட்டிகள் விளங்க
ஆலம் விழுதுகள் போல குழந்தைகள் இருக்க ,
உறவுப்பறவைகள் வந்து உட்கார்ந்து இளைப்பாற
நட்புகள் கூடி அதன்கீழ் அமர்ந்து குதூகலிக்க,
குடும்பம் என்பது இணைந்து இருத்தல் ஒரு வரமே.
ஒருவரை ஒருவர் சுமையாய் நினையாது ,
ஒருவர் சுமையை ஒருவர் பகிர்ந்து சுமப்பதுவும் ,
ஒருவர் வெற்றிதனில் அனைவரும் மகிழ்வதுவும் ,
ஒருவருக்குத் துன்பமெனில்
ஒருங்கிணைந்து தாங்குவதும்,
ஏற்றத்தாழ்வுகளை எண்ணத்தில் கொள்ளாது ,
சமமாய் பாவித்து சந்தோஷம் எய்துவதும்
குடும்பம் என்பதற்கு இலக்கணம், அறிவோமே.
சச்சரவுகள் இல்லாது , சண்டைகள் இல்லாது ,
சங்கடங்கள் இல்லாது, குறை,நிறைகள் இல்லாது இருப்பதல்ல குடும்ப உறவு.
அத்தனையும் இருந்தாலும் அப்போதே அதை மறந்து
அரவணைத்துச் செல்வதுதான்
அறிவான குடும்பமன்றோ.
குடும்பப் பொறுப்புகளை சமமாகப் பகிர்ந்துகொண்டு
ஒன்றாக உட்கார்ந்து உணவைப் பகிர்ந்துண்டு ,
ஒன்று கூடி விவாதித்து , ஒற்றுமையாய் தீர்மானித்து
ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதில்
ஒப்பற்ற ஆனந்தமே.
தவிர்க்க முடியாத நிலையில் தனிக்குடித்தனம் போனாலும்
நல்லது,கெட்டதுகளில் தவறாது கலந்து கொண்டு ,
ஒற்றுமைக்கு இலக்கணமென
ஊர் போற்ற வாழ்தல்தான்
முற்றிலும் பெருமை தரும் ,
முழுமையான இன்பம் தரும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என
கணியன் பூங்குன்றனார் அழகாக சொல்லி வைத்தார். ,
வசுதைவ குடும்பகம் என்று மகா
உபநிடதத்தில் உரைத்துளாளார்.
ஏடுகள் உரைத்ததெல்லாம் எல்லோர்க்கும் நன்மைக்கே.
வீடு நலம் பெற ,நாடு நலம் பெறும்.
நாடு நலம் பெற ,நானிலம் நலம்பெறும்.
குடும்ப உறவுகளை குன்றிலேற்றி வைத்திடுவோம்.
உலக குடும்ப தின வாழ்த்துக்கள்.
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம் .