தமிழ்நாடு

விதைப்பந்து புரட்சி

விதைப்பந்து புரட்சி விதைப்பந்துகள்  செய்து வீசுவது பற்றி ஒரு பழமை வாய்ந்த பள்ளியில் பேசிக் கொண்டிருந்தேன. 5,000 மாணவர்கள் திரண்டி ருக்கும் பள்ளியில் பேச்சு ஒரு மாதிரி இருக்கும். வெறும் 100 பிள்ளைகள் அமர்ந்திருக்கும் சமயத்தில் பேச்சு வேறு மாதிரி இருக்கும். விறுவிறுப்பு வித்தியாசப்படும். கருத்துக்கள் மாறுபடும். குரல், தொனி வேறுபடும் என்பதை சொல்லவா வேண்டும்.  சொற்ப எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்த அந்த பள்ளியில் விதைப்பந்துகள் உருட்டும் முறை, எத்தனை விதைகள் வைக்க வேண்டும்,  என்னென்ன விதைகள் வைக்கலாம், உருட்டிய பந்துக்களை எப்படி காய வைக்க வேண்டும், உள்ளிருக்கும் விதைகள் எப்போது, எப்படி முளைக்கும், உருண்டை பிடிக்க களிமண் ஏற்றதா செம்மண்ணா? கரிசக்காட்டுமண்ணா? என்றெல்லாம் விலா வாரியாக விளக்கிக் கொண்டிருந்தேன.

 மாணவ மாணவிகளுக்கு சொல்ல வந்த விஷயம் பிடிக்க வேண்டுமே என்பதற்காக நகைச்சுவையை தூவுவது வழக்கம். காரம், இனிப்பு என சுவைகளை சாமர்த்தியமாக கலக்காவிட்டால் பிள்ளைகள் நாம் பேசும்போது கைதட்டி விடுவார்கள்.  எதற்கு கைதட்டு என்றால் முடிக்கச் சொல்லி தான்.

 குறைவான குழந்தைகள் இருந்ததால் வகுப்பறை பாடம் போலவே அன்றைய விதைப்பந்து கூட்டம் அமைந்திருந்தது. சின்ன ப் பிள்ளைகள் தானே என ஒரு கேள்வி கேட்டேன்.

 ஒரு சின்ன விதைக்குள்ளே இத்தனை பெரிய மரம் எப்படி இருக்கிறது ? இந்த விதைக்குள்ளே இப்படி ஒரு மரத்தை பு ரோக்ராம் (Programme) செய்தது யார் என்று கேட்டேன். ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கின்ற சிறுவன் சார் அது கடவுள் செய்த புரோக்ராம் சார் என்றான். அதிலும் குறிப்பாக அவன் ஆராதிக்கின்ற, நம்புகின்ற ஒரு பெயரைச் சொன்னான். எனக்கு பெரிய ஆச்சரியம்.  உடன் வந்திருந்த நண்பர் ஜவக ருக்கும் ஆச்சரியம். அது பணம் கட்டி படிக்கின்ற பணக்கார பள்ளி அல்ல.  பையனும் வசதியான வீட்டுப் பிள்ளை இல்ல. எவ்வளவு பெரிய பதில். எப்பேற் பட்ட சிந்தனை.  எவ்வளவு பெரிய நம்பிக்கை. சின்னதாக எனது தலைக்குள் ஏதோ நொறுங்கியது போன்ற உணர்வு. அது மீதமிருந்த மிச்சம் இருந்த எனது மமதையாக இருக்கலாம். செல்லாக் காசை விட பயனற்ற செறுக்காக இருக்கலாம். அந்த சிறுவனுக்கு கல்விக் கண் கொடுக்கும் ஆசிரியர்கள் திசை நோக்கி தான் என்னால் வணங்க முடிந்தது. அன்றுதான் எனக்கு மூன்றாம் வகுப்பு தேறி யது போன்ற உணர்வு.

பூ. திருமாறன்

“ஒரு கோடி விதைப்பந்துகள் திட்டம்”)

 வெங்காடம்பட்டி

 தென்காசி மாவட்டம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button