இராமநாதபுரம்கட்டுரைகள்

பரமக்குடி எமனேசுவரம் சேதுகவி ஜவாதுப் புலவர் 

பரமக்குடி எமனேசுவரம் சேதுகவி வாதுப் புலவர்  (பகுதி-1)

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேசுவரம் என்னும் ஊரில் 1745 ஆம் ஆண்டு இசுலாமியக் குலத்தில் பிறந்தவர். ரகுநாத சேதுபதியின் மக்களுக்கு ஆசிரியராய் இருந்த தம் மாமனாரிடம் கல்வி பயின்று பின்பு தமிழ்மொழியின் மீது தீராத பற்றால், திருவாவடுதுறை ஆதினம் சென்று ஆதீன கர்த்தா சோமசுந்தரத் தம்பிரானிடம் இலக்கிய இலக்கணங்களைப் பயின்று, திருமூலரின் திருமந்திரம் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று ஒலிக்கக் கண்டு, இசுலாமியத்தின் ஏகத்துவக் கொள்கையும், சைவசித்தாந்தமும் ஒன்றே எனக் கண்டு தெளிந்துள்ளார்.  கிழவன் ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் சேது நாட்டின் அவைக்களப் புலவராக இருந்தமையால் இவர்  சேதுகவி’ எனவும் அழைக்கப்பட்டார்.

புலவரின் திறத்தைப் பறைசாற்றும் முகமாக “வண்தமிழின் எண்ணோ, எழுத்தோ, இசையோ, இயற்புலவர் கண்ணோ” எனச் சவாதுக் கவியை ஒரு தமிழ்ப்புலவர் பாராட்டுகிறாரென்றால், அவரின் பெருமையை நாம் தெளிவாக உணர்கிறோம்” என ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். (தமிழ் இலக்கிய வரலாறு, ப.266)

ஜவாதுப் புலவரின் நூல்கள் அனைத்தும் தனித்தனியாகக் கிடைக்க வில்லை.  அவரது வம்சா வழி வந்த எம்.கே.ஜமால் முஹம்மது என்பவர் சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர் (2006), சேதுகவி ஜவாதுப் புலவர் (2013) ஆகிய இரு நூல்களையும் குறிப்புரையுடன் வெளியிட்டுள்ளார்.  

சவாதுப் புலவர் எண்ணற்ற தனிப்பாடல்களும், ஆறு நூல்களும் படைத்துள்ளார். அவையாவன: முகையதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ், இராஜராஜேஸ்வரி பஞ்சரத்தினம், சந்திர சேகர வண்ணம், நாகைக்கலம்பகம், கொடுமளூர் முருகன் பதிகம், மதீனத்து அந்தாதி ஆகியன.

கொடுமளூர் முருகன் பதிகம்

           முதுகுளத்தூர் அருகே கொடுமளூர் எனும் சிற்றூரில் முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அக்கோவிலில் வீற்றிருக்கும் முருகன் பற்றிப் பாடியதே இந்நூல். சவாதுப் புலவர் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தவர் என்பது வெள்ளிடைமலை. இருப்பினும் அவர் முருகனைப் பற்றிப் பதிகம் பாடியிருப்பது வியப்பளிக்கிறது.

நூல் எழுந்த சூழல்

           சிவகங்கை மாவட்த்தில் பழனியப்பனுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்ததால் பழனியப்பன் செட்டியார் சவாதுப் புலவரைக் கண்டு குழந்தைப் பாக்கியம் உண்டாக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என முறையிட்டார். அவரது கோரிக்கையை ஏற்று சவாதுப் புலவர் பாடியதே கொடுமளூர் முருகன் பதிகம்.

           கொடுமளூர் முருகன் பதிகத்தில் முதலாவதாக அமைந்த பாடல் ஒன்றைச் சான்றாகக் கீழே காணலாம். “பூமேவு சண்முகம் விலாசமும் ஈராறுபுருவமும் கீரிட முடியும்/ பொட்டுநுத லும்கனக குண்டலமும் அருண்மாரி/ பொழியும் ஈராறு விழியும்/ மாமேவு செம்பவள வாய்மந்த காசமும்/ மாலை யணியும் கழுத்தும்/ எனும் பாடல்  முருகனின் தோற்றத்தையும் அவரது சிறப்பையும் விளக்குவதாக அமைகின்றது. (சேதுகவி ஜவாதுப் புலவர், ப.76)

          கொடுமளூரில் அமைந்திருக்கும் முருகன் கோவில் சுவரில் கொடுமளூர் முருகன் பதிகம் முழுதும் மதுரையைச் சேர்ந்த மாணிக்கம் பிள்ளை உபயமாகக் கல்வெட்டில் வடித்து வைத்துள்ளார்.  

          கொடுமளூர் முருகன் கோவிலில் இசுலாமியப் புலவரான ஜவாதுப் புலவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது எனும் செய்தி இங்கே கவனிக்கத்தக்கது. முதலாவது, ஒரு இசுலாமியப் புலவர் முருகக் கடவுள் மீது பதிகம் பாடிய செயல் போற்றத்தக்கது. இரண்டாவது முருகக் கடவுள் மீது இசுலாமியப் புலவர் பதிகம் ஒன்று பாடிவிட்டார் என்பதை அறிந்து அக்கோவிலில் அவரது சிலை வடித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மதம் எனும் நிலையைக் கடந்து சமய நல்லிணக்கத்தோடு இவர்கள் செயல்பட்டுள்ளனர் என்பதை அறியும்போது இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த சான்றாகவும் இந்நிகழ்வு அமைதுள்ளமை கவனிக்கத்தக்கது.  

முனைவர் சே.முனியசாமி, உதவிப்பேராசிரியர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button