கலைஞர் மு கருணாநிதி
ஒற்றைச் சொல்லில் உன்பெருமை
..உரைக்கச் சொன்னார் என் நண்பர்.
முற்றும் இயலா தென்றுரைத்தேன்
…முடிவில் சொல்ல முயலுகிறேன்
கற்ற வனில்லை நீதானே
..கவிதைத் தமிழில் கற்பித்தாய்
பெற்றோம் ஞானம் அரசியலில்
..பெரிதும் பாடம் நடத்திவந்தாய்
தமிழாய்ச் சொல்வேன் அரசியலோ
…தன்னை மறந்தால் துடித்துவிடும்.
இமைக்கும் பொழுதில் இறங்கிவந்தே
எல்லாப் பந்தும் ஆறடியே
சமைத்தாய் உணவை பிள்ளைக்காய்
…சுவைத்த நாங்கள் சமுதாயம்
அமைந்த எழுத்தும் அற்புதமே
…அதனின் ஈடாம் எழுத்தாகும்
ஆளும் திறனில் ஒளிர்ந்திட்டாய்
…அதையும் பார்த்தால் காவியமே
தோளின் உயரம் அறிந்திட்டாய்
…தமிழம் தாண்ட மறுத்திட்டாய்
வாளும் போல அமைந்திட்டாய்
…வாய்ப்பில் எங்கள் கேடயமும்
வாழும் உந்தன் சாதனைகள்
…வற்றா நதியாய் வழிகளிலே
எல்லாத் திறனும் ஒருசொல்லில்
…ஏற்கச் சொன்னால் எந்தமிழும்
இல்லை என்றே உரைத்துவிடும்
…இருந்தும் உன்னை வியந்தபடி
சொல்லாய்ச் சுருக்கும் உன்பெயரை
…சுகமாய் கலைஞர் எனவிளிக்கும்
நெல்லில் அரிசி இருப்பதுபோல்
….நினைவில் நீயே கலைஞரென
—- கவிஞர் இப்னு ஹம்தூன்