இராமநாதபுரம்கட்டுரைகள்

இலக்கிய சீதக்காதி ‘நூன்’ எனும் ஷெய்கு அப்துல் காதர்!

இலக்கிய சீதக்காதி ‘நூன்’ எனும் ஷெய்கு அப்துல் காதர்!

Screenshot

தமிழ் இலக்கியத்திற்கு தங்களது அற்புதமான எழுத்துகள் மூலம், மிகப் பெரிய சேவையாற்றிய முஸ்லிம் எழுத்தாளர்களின் எண்ணிக்கை நிறைய உண்டு. எந்தவித பந்தாவும் பகட்டும் இல்லாமல், அமைதியாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு, மறைந்த எழுத்து வள்ளல்களின் எழுத்துகளும் இலக்கியப் படைப்புகளும் மனித சமுதாயத்தை இன்றும் நெறிப்படுத்தும் வகையில் இருந்து வருகின்றன.

தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல், இஸ்லாமிய இலக்கியத்திற்கும் தங்களது ஆற்றல் மிகு எழுத்துகள் மூலம் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர்கள், அவர்கள் மறைந்த பிறகும், இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இலக்கிய சீதக்காதி ‘நூன்’ எனும் ஷெய்கு அப்துல் காதர்.

இவரின் இயற்பெயர் நூ.பீ. ஷெய்கு அப்துல் காதர். இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் நத்தம் கிராமத்தில் 1920-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி பிறந்த இவர், இளமையிலேயே எழுத்துத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், அபிராமம் நத்தம் கிராமத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றவர்.

தனது எழுத்துப் பயணத்தை ‘டெக்கான் டைம்ஸ்’ இதழின் துணை ஆசிரியராகத் தொடங்கி, ஆங்கிலப் பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் மற்றும் அரசியல் ஆக்கங்களை எழுதி வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். பின்னர் ‘கிரஸண்ட்’ வார இதழிலும், அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பதிப்பிலும் ஆரம்பகால துணை ஆசிரியராக இணைந்து தனது எழுத்தாற்றலால் சிறந்த சேவையாற்றியுள்ளார்.

கீழக்கரை தொழில் அதிபர் மர்ஹூம் BSA அப்துர் ரஹ்மான் அவர்கள் நடத்திய ‘நேஷனல் எகனாமிக் ஃபோரம்’ என்ற ஆங்கில மாத இதழின் ஆசிரியராகவும் 1974 முதல் 1980-ம் ஆண்டு வரை N.P. ஷெய்கு அப்துல் காதர் பணியாற்றியுள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதி வந்த இவருக்குத் தமிழில் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் மணிவிளக்கு இதழின் ஆசிரியர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அவர்கள்.

சிங்கப்பூரின் ‘மலாயா நண்பன்’ இதழில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, இவர் எழுதிய தலையங்கங்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, மணிவிளக்கு இதழில் 1971 முதல் 1986 வரை சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார்.

நூ.பீ. ஷெய்கு அப்துல் காதர் அவர்களின் சிறுகதைகள் உணர்ச்சிமிக்கவை; சமூக சிந்தனை கொண்டவை.

‘இரத்த மணல்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய இமாம் ஹுசைன் அவர்களின் தியாக வரலாறு வாசகர்களால் என்றும் மறக்க முடியாத ஒன்று.

1975-ம் ஆண்டு ஆனந்த விகடன் ஹஜ் சிறப்பிதழில் வெளியான இவரது ‘நிறைவு’ என்ற சிறுகதை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்தது. இவை தவிர ‘பவுன் ஹாஜியார்’, ‘கிடைக்காத செல்வம்’, ‘மலராத மொட்டு’ போன்ற பல மறக்க முடியாத சிறுகதைகளையும் அவர் படைத்துள்ளார்.

வரலாற்றுப் புதினங்களிலும் சமய இலக்கியங்களிலும் இவர் தனி முத்திரை பதித்துள்ளார். ‘வெற்றி மேல் வெற்றி’ (தஜ்லா நதியோரம்), ‘அந்தி வானம்’, ‘வெற்றிப் பரிசு’ (வெற்றி நகரம்), ‘வெற்றிப் பிறை’ (நீல நதி), ‘ரஜியா சுல்தானா’ போன்றவை இவருடைய குறிப்பிடத்தக்க வரலாற்றுப் படைப்புகளாகும்.

மணிவிளக்கு இதழில் 66 அத்தியாயங்களாக இவர் எழுதிய ‘அண்ணல் முஹம்மது எனும் அழகிய முன்மாதிரி’ என்ற நபி வரலாறு தொடர் இவரது எழுத்தாற்றலுக்கு ஒரு சிறந்த சான்று. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நபிமார்களின் வரலாற்றைத் தொகுத்து வழங்கிய சிறப்பும் இவருக்கு உண்டு.

எழுத்துப் பணியுடன் நில்லாமல், இரங்கூனில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் இலக்கிய சீதக்காதி நூன். மேலும் சோலியா முஸ்லிம் சங்கத்தின் துணைத் தலைவராகவும் சமூக சேவையாற்றியுள்ளார்.

இளைய தலைமுறை சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது 50 ஆண்டு கால இலக்கியப் பயணத்தின் மூலம் தமிழ் மற்றும் இஸ்லாமிய இலக்கியத்திற்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார்.

1986-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி இவர் மறைந்தாலும், இவமுடைய படைப்புகள் இன்றும் சமுகத்திற்குப் பயனளிக்கின்றன.

(இலக்கிய சீதக்காதி ‘நூன்’ அவர்களின் படைப்புகள் அனைத்தும் இன்ஷா அல்லாஹ் நாணல் பதிப்பகத்தின் மூலம் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது.)

facebook.com/100009252074657/posts/4391894157795610/?rdid=Nhf3VZGAkHICjlOw&share_url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2F1AB9puekdL%2F#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button