கட்டுரைகள்

கமுதி நாட்டுப்புலவர்

கமுதி நாட்டுப்புலவர்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி என்னும் ஊரில் வாழ்ந்த ‘கமுதி நாட்டுப்புலவர்’ என அழைக்கப்பெறும் இவரின் பெயர் தெரியவில்லை. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் தெளிவாகக் கல்வி கற்றுப்  புலமையுடன் விளங்கியவர். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மருதுபாண்டியர் காலத்தைச் சார்ந்தவர். மருதுபாண்டியர் சிவகங்கையில் ஆட்சி புரிகையில் சிறுவயல் என்னும் ஊரில் அரண்மனை அமைத்துக் கொண்டு அங்கே தங்கும் பழக்கமுடையவராகத் திகழ்ந்தார். அதனால்  தற்போது அரண்மனைச் சிறுவயல் என அழைக்கப்படுகின்றது. கமுதி நாட்டுப் புலவர் ஒருநாள் கல்லல் என்னும் ஊருக்குத் தன் மனைவியை அழைத்துச் சென்ற போது, கள்ளர்கள் சிலர் கல்லலுக்கு அண்மையிலுள்ள காட்டில் வழி மறித்துப் புலவரிடமும், அவர் மனைவியிடமும் என்ன இருக்கிறது என்று பரிசோதிக்கத் தொடங்கினர். அவர்களிடம் பெரிதாக ஒன்றும் அகப்படவில்லை என்றாலும் புலவரின் மனைவியின் கழுத்தில் தாலி மட்டுமே இருந்தது. உடனே அத்தாலியை வழிப்பறி செய்து கள்ளர்கள் ஓடினார்கள். மனம்தாளாது புலவர் அன்றிரவு கல்லலில் தங்கி மறுநாள் புறப்பட்டு அரண்மனைச் சிறுவயலுக்குச் சென்று மருதுபாண்டியரைச் சந்தித்து. அப்போது,

          “மருவிருக்கும் கூந்தல் மனையாள் கணவன்

          அருகிருக்கத் தாலி அறுமா- இரவுனக்குச்

          செங்கோல் இலையாகித் தேசமெங்கும் கள்ளருக்குப்

          பங்கோ மருதுபூ பா”

எனும் வெண்பாவைப் பாடினார். (தமிழ்ப் புலவர் அகரவரிசை, பகுதி ஒன்று, ப.202)

          புலவரின் பாடலைக் கேட்ட மருதுபாண்டியர் உடனே பொற்கொல்லரை அழைத்து ஆறு பவுனில் தாலிச் சரடும், தாலியும் செய்துவரச் செய்து புலவரின் கையில் கொடுத்து அவர்தம் மனைவியின் கழுத்தில் அணிவிக்கச் செய்தார்.

          மருதுபாண்டியரின் கொடைத் திறனை வியந்து, கமுதிப்புலவர் ‘தாலிக்கு வேலி தமிழுக்குதவிய தார் மனமே’ எனும் பாடலைப் பாடிச் சென்றார். இத்தகு வரலாறு கொண்ட கமுதி நாட்டுப்புலவரின் வாழ்வில்  பாடல் வழி மருதுபாண்டியரின் கொடைத்திறனை அறிய முடிகிறது.

முனைவர் சே.முனியசாமி,

உதவிப்பேராசிரியர்,

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button