‘பொடி’ விஷயம்!

‘பொடி’ விஷயம்!

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்
ஒருமுறை சென்னையிலிருந்து புது தில்லிக்குச்
சந்தனத் தமிழர் அப்துஸ் ஸமத் உடன் வரப்
பயணம் செய்தார்.
அதே இரயிலில் வேறொரு பெட்டியில்
போறிஞர் அண்ணா வருவதாகவும்
அவரைக் கவனித்துக் கொள்ளுமாறும்
அவரை வழியனுப்ப வந்திருந்த
இரா. செழியன் கேட்டுக் கொண்டதற்கு
இணங்க அப்துஸ் ஸமத் அடிக்கடி
இரயில் நிற்கும் நிலையங்களில் கண்டு வந்தார்.
ஓர் இரயில் சந்திப்பில் இரயில் நின்றிருந்த போது அண்ணா தான் கொண்டு வந்த பொடி
தீர்ந்து விட்டதாகத் தெரிவித்தார்.
உடனே அப்துஸ் ஸமத் தனது பெட்டிக்குத் திரும்பினார்.
காயிதெ மில்லத் அயர்ந்து தூங்கிக் கொண்டு
இருந்தார். காயிதெ மில்லத் பெட்டி வைத்திருந்த இடங்களில் பொடி டப்பா இருக்கிறதா என்று
அப்துஸ் ஸமத் தேடியும் கிடைக்கவில்லை.
(காயிதெ மில்லத் பொடி போடும் வழக்கமுடையவர்)
கடைசியாகக் காயிதெ மில்லத் படுத்திருந்த தலையணைக்குள் கையை விட்டுத் துழாவினார்.
அந்த அசைவில் விழித்துக் கொண்ட
காயிதெ மில்லத் என்ன தேடுவதாகக் கேட்கவும்
அண்ணாவின் பொடி தீர்ந்து விட்ட செய்தியை
அப்துஸ் ஸமத் கூறினார்.
உடமையாகப் படுக்கையைவிட்டு எழுந்த
காயிதெ மில்லத் பொடி டப்பாவுடன் அண்ணா இருந்த பெட்டிக்கு விரைந்தார்.
காயிதெ மில்லத்தே வருவதைக் கண்டு
அண்ணா அதிர்ந்து போனார்.
தான் வேறொரு பொடி டப்பா வைத்திருப்பதாகக் கூறி தான் கொண்டு வந்த பொடி டப்பாவை அண்ணாவையே வைத்துக் கொள்ளும்படிக் கூறிக் கொடுத்துவிட்டுத் தனது பெட்டிக்குத் திரும்பினார் காயிதெ மில்லத்!
காயிதெ மில்லத் அவர்களின் இந்த அணுகுமுறை
அவரது எளிமையையும் அண்ணாவின்பால்
அவர் கொண்டிருந்த பேரன்பையும் விளக்கி அவரது ஆளுமைக்குச் சான்றாக இலங்கும்…
‘பொடி’ விஷயம்தான் ஆனால்
பொருள் பொதிந்த விஷயம்!