அண்ணா !

அண்ணா !
விதையைப் போல் விழுந்தவன் நீ !

ஆக்கம் : கவிக்கோ அப்துல் ரகுமான்…
அண்ணா !
அரசியலில் நீயோர் அதிசயம்.
ஒரு
ரத்த நதிக் கரைக்குப்
பூ விதைகளோடு
வந்தவன் நீ.
நீயோர் இசைத்தட்டு;
ஊசிகள் உன்னைக்
கீறியபோதும்
இசை பாடியவன் நீ.
நீ
பாம்பின் பல்லிலும்
பாலைக் கறந்தாய்;
வேம்பின் கிளையிலும்
தேன்கூடு கட்டினாய்.
வசந்தமாக நீ
வந்த போது
கொடிமரக் காட்டிலும்
பூக்கள் மலர்ந்தன.
இறந்த காலத்தை
எழுத்தினால் எழப்பினாய்;
நிகழ்காலத்தின்
நிசங்களைப் படம் பிடித்தாய்;
வருங்காலப் பூக்களுக்கு
வார்த்தை விதை தூவினாய்;
மூன்று வகைக் காலத்தை
முடிச்சிட்டு வைத்திருந்த
வினைத் தொகை நீ!
அண்ணா!
உன் பெயரிலேயே நீ
உறவு கொண்டு வந்தாய்.
அதை
உச்சரித்தவர்கள்
உடன்பிறப்பாய் ஆயினர்.
இடுகுறிப் பேரை நீ
காரணப்பேர் ஆக்கினாய்.
உன்னைப்
பேர்சொல்லி அழைத்தோம்.
எங்கள்
மரியாதை கூடியது.
அழுகின்ற போதும்
மேகம்போல் அழுதவன் நீ !
விழுகின்ற போதும்
விதையைப் போல் விழுந்தவன் நீ !
இன்று செப்டம்பர் திங்கள்
15 ஆம் நாள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள்..
பகிர்வு : காயல் அமானுல்லாஹ்