திரைப்பார்வை:நூறு சாமி
திரைப்பார்வை:நூறு சாமி
ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சேர்தல்
எஸ் வி வேணுகோபாலன்
காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட
கைம்மையைத் தூர்க்காதீர்!-ஓரு
கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்காதீர்!
– பாவேந்தர் பாரதிதாசன்
கணவனைப் பறிகொடுத்து விடும் பெண்ணின் மனசை யார் அறிவார்….. நூறு சாமி அதற்கான ஓர் அருமையான முயற்சி.
கணவன் மரித்துப் போனால் அவனை எரிக்கும் சிதையிலேயே உயிரோடிருக்கும் மனைவியை சேர்த்து எரிக்கும் சதிக்கு எதிரான சட்டம் வந்தபின்னும் ரூப் கன்வருக்கு நேர்ந்த கொடுமையை நாடு பேசியது. அந்த சதியில் தப்பித்தாலும் ஓர் இளம் விதவை தனது வாழ்க்கை முழுக்க வேறு எத்தனையோ சதிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரே ஒரு மிடறு கூட முழுதாக உறிஞ்சி இராத வாழ்க்கையை ஓர் இளம் விதவை உலர்ந்துபோன உதடுகள் பார்த்திருக்க எச்சிலை விழுங்கியே வாழ்ந்து வெந்து தணிந்துவிட வேண்டுமா, கோரிக்கையற்றுக் கிடக்க வேண்டுமா வேரில் பழுத்த பலா, மறுமணம் என்கிற சொல் என்ன கெட்ட வார்த்தையா என்ற கேள்வியை சமூகத்தின்முன் எழுப்புகிறது நூறு சாமி.
உணர்வுப் போராட்டத்தைக் கூறும் திரைக்கதை
திருமண வயதில் இருக்கும் மகன்கள், தங்களது விதவைத் தாய்க்கு மறு வாழ்க்கை தேவை என்று உணர்கிற இடம் ஒரு போராட்டம், அந்தக் கணத்தில் அப்படியான நினைப்பில் இருந்து விடுபட்டு விட்ட கொதிப்பில் அதை மறுதலிக்கும் தாயின் உளவியல், உணர்வியல் போராட்டம். புறவுலகில் இதற்கு எதிரான குரலை முறியடிக்க வேண்டிய இறுதிக்கட்ட போராட்டம். இவற்றை அருமையான முறையில் திரைக்கதையாக்கி வழங்கி இருப்பது இயக்குநர் சசியின் வெற்றி.
வெளியூரில் படிக்கும் மகனோடு விதவைத் தாய் கிராமத்தில் நடந்து போகையில் எப்போதும் அவள் மீது ஒரு கண் வைத்திருக்கும் உள்ளூர் பிரமுகர் பச்சைப்பெருமாள், ‘ பாஸ்கர், இன்னிக்குத் தான் வந்தியா, நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு உங்க வூட்ல லைட் எரிஞ்சுதே, அதான் கேட்டேன்’ என்கிறார். அந்தப் பேச்சை அருவருத்து நடக்கும் தாயின் ரணத்தை மகன் அப்போது அறிவதில்லை. இரவு உறக்கத்தில் எலி புகுந்து பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு விளக்கு போட்டுப் பார்த்தால், என்னென்ன கேள்வி கேட்கிறாங்க என்று பின்னர் ஒரு காட்சியில் குமுறுகிறாள் அந்தத் தாய்.
எலி பாத்திரங்களை மட்டுமே உருட்டி விட்டுப் போகிறது. ஆனால், சபலத்தோடு இராப்போதுகளில் குடிசைக்கு வெளியே இருந்து அவளை நோக்கி வந்து விழும் ரகசியக் குரல்வழி காம\அழைப்புகள், அவளது நிம்மதியற்ற வாழ்க்கையின் ஒய்வு நேரத்தையும் உருட்டிப் போட்டு அவளது உறக்கத்தையும் பறித்துப் போகிறது.
விதவைக்குத் தான் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கிடைக்கிறதே, என்ன கேடு என்கிறார் பச்சைப்பெருமாள். சாகிற வரைக்கும் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வேறு வாழ்க்கையை யோசிக்காமல் இருக்க வேண்டுமா என்று பதிலடி கொடுக்கிறாள் அவள். எதிர்ப்புற பள்ளிக்கூட ஆசிரியர் தன்னுடைய நண்பர் ஒருவரை மறுமணம் செய்து கொள்ளலாமே என்ற ஆலோசனையை முன் வைத்து, அவளுடைய மூத்த மகனிடம் பேச வீடு திரும்பும் அவனது கோப வெடிப்பில் கருகிப் போய்விடுகிறது அவளது மனத்தின் மூலையில் முகிழ்த்த அந்தக் கனவு.
ஆனால் காலம் அவனைப் பக்குவப்படுத்தி விடுகிறது. அடியும் உதையும் வலியும் அன்புமாகத் தம்பியையும் உணர வைத்துத் தாய்க்கு ஒரு வரன் தேட முடிவெடுக்கும் கட்டம் முக்கியமானது. ஆனால் அவளால் தன்னுள் வாடி வதங்கிப் போய்விட்ட எண்ணத்தை இவர்கள் ஆசைக்கு மீண்டும் துளிர்க்க வைத்துக் கொள்ள முடிவதில்லை. புறச் சூழலின் எதிர்ப்பு பற்றிய புரிதலும் அவளை அலைக்கழிக்க ஒதுங்கி வேறெங்கோ போய்விட எத்தனிக்கும் தருணத்தில் என்னென்னவோ நிகழ்ந்துவிடுகிறது.
ஆனால் தோழமை மிக்க மனுஷி ஒருத்தியைச் சென்றடையும் இவளது அலறல் ஒலி வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுத்துவிட, இப்போது போராட்டம் வேறு திசையில் தொடர்கிறது. அதல பாதாளக் கிணற்றில் இருந்து தன்னை மீட்டெடுத்த பெண்மணியின் மூலமே தனது வாழ்க்கையையும் மீட்டு எடுத்துக் கொள்ளவும் வாய்க்கும் இடத்தில் ஒரு சிற்றூரில் அந்த மறுமணப் புரட்சி சாத்தியமாகி விடுகிறது, எல்லா எதிர்ப்புகளையும் மீறி!
சாதியும் பெண்ணடிமைத்தனமும்
செல்வியுடைய அண்ணனின் குறுக்கீடு கதையில் முக்கியமானது. பூப்பெய்தும் தன்னுடைய மகளுக்குத் தனது தங்கை மகன்களில் ஒருத்தன் தான் மணவாளன் என்று அலைமோதிக் கொண்டிருக்கும் அவருக்கு, தங்கையின் மறுமண ஏற்பாடு தாங்கவொண்ணா ஆத்திரத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களது தாய்க்கும்! நாற்பத்து மூணு வயசாச்சு, அவளுக்கு இன்னும் அடங்கலடி என்று ஒரு தாயே தனது மகளைக் கொச்சையாகப் பேசுவது அதன் உச்சம். அந்தத் தகாத வசவுக்கு உடனடி பதிலடி கொடுத்துவிடுகிறாள் செல்வி. அந்தக் கட்டத்தில் அண்ணன்காரன் முன்னெடுப்பில் ஆணவக்கொலை நோக்கி மொத்தக் குடும்பமும் சீறி எழுவது அதிர வைக்கும் காட்சி. அந்தப் போராட்டத்திலும் தப்பிப் பிழைக்கிறது மறுமண முயற்சி.
கைக்குழந்தையோடு வரும் இளம் விதவை ஒருத்தி தன்னினும் வயது மூத்த விதவையிடம், ‘இதெல்லாம் சமூகம் ஏற்றுக் கொள்ளாது, வேண்டாம்க்கா’ என்று சொல்ல நேர்வது சமூகத்தின் கோர முகத்தின் பிரதிபலிப்பு. பச்சைப்பெருமாள் தன்னுடைய கூட்டாளிகளை அழைத்துவைத்துக் கொண்டு பேசுகையில், சாதி, மரபு எல்லாத்தையும் காப்பாத்தற பொறுப்பை நாம பெண்களிடம் தானே கொடுத்திருக்கோம் என்று சொல்லுமிடம் முக்கியமானது. எல்லாம் மீறி நிறைவாக எல்லாம் நிறைவாக நடந்து முடிந்துவிடுகிறது.
மனைவியை இழந்த ஒருவரை இந்த விதவைத் தாய் நேரில் பார்த்துப் பேசிப் பழகித் தனது விருப்பத்தையும் தெரிவித்து விடும் காட்சிகள் படத்தின் கடைசி கட்டத்தில் இடம் பெற்றாலும் கவித்துவமாக அமைந்து விடுகின்றன. தனது அன்றாடத்தில் ஒற்றை நிமிடம் கூட மகிழ்ச்சியை ருசிக்க வாய்த்திராத அவளுக்கு, வாழ்க்கையை சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் என்கிற அந்த மனிதரே சரியான வாழ்க்கைத் துணை என்று பிடிபட்டு விடுகிறது. இருவரும் ஒன்றாகக் கலந்து வாழும் காதல் வாழ்க்கை இருவரது மனத்திலும் சட்டென்று விரியத் தொடங்குகிறபோதே பழைய கசப்புகள் யாவும் மறந்து இதழ் மலர சிரிக்கவும் கூட வாய்த்துவிடுகிறது அவளுக்கு. அவளது மூத்த மகன் தன்னுடைய தாய் தேர்வு செய்திருக்கும் மனிதரை அப்பா என்று விளிக்கும் இடத்திலும், அவருடைய மகளைத் தன்னுடைய தங்கச்சியாக விரித்துக் கொண்டு பேசும் அந்த நொடியிலும் அவரது சந்தோஷத்தின் அளவு அவரது எதிர்பார்ப்புக்குப் பன்மடங்கு பெருகி வெளிப்படுகிறது.
இது மொத்தமும் ஓர் உண்மைக் கதையைத் தழுவியே படைப்பாக உருவானது என்று உண்மையான செல்வி, ஏழுமலை, பாஸ்கர், விவேக் ஆகியோரை இயக்குநர் நிறைவாகக் காட்சிப் படுத்துகையில் அரங்கில் ஒலித்த உரத்த கரவொலி ரசிகர்களது உள்ளத்தைப் படம் சென்றடைந்து இருப்பதை எதிரொலித்தது போல் இருந்தது. வசனங்களும், காட்சிகளும் பல இடங்களில் கொண்டாட வைக்கின்றன. தாய்க்கும் மகனுக்கும், மகன்களுக்கும் அவரவர் காதலிக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் வலிமையானவை.
பார்வையாளரைக் கவ்விப்பிடிக்கும் இடங்களும், உணர்வு பூர்வமாக சலனப்படுத்தும் தருணங்களும் படத்தில் நிறையவே உண்டு. இந்த வீடு கடனில் இருக்கிறது என்று கடன்காரன் குடிசையின் சுவரில் எழுதிப்போடும் அராஜகமும் சரி, அதற்கு வக்காலத்து வாங்கும் பச்சைப்பெருமாள் மீது பெயிண்ட் வாளியை எடுத்து வீசி எறிந்து வெறுப்பை செல்வி வெளிப்படுத்துவதும் சரி முக்கியமானது.
அசாத்திய நடிப்பும் ஆக்கமும்
விதவைத் தாயாக ஸ்வாசிகா அசாத்திய நடிப்பை வழங்கி இருக்கிறார். கருப்பு படத்தில் ஒரு வழக்கறிஞராகத் தோன்றியவர், ஒரு சிற்றூரின் எளிய உழைப்பாளியாக, எப்போதும் வெப்பப் பெருமூச்சிலேயே வெந்து போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிருப்பவராகப் பாத்திரமேற்று சிறப்பாக நடித்திருப்பது வியக்க வைக்கிறது. பிள்ளைகளிடம் பொழியும் பாசமும், முரண்படும் ஆவேசமும், கயவர்களிடம் அஞ்சாது எதிர்கொள்ளும் வெஞ்சினமும், எதிர்பாராத காதலுக்குள் தன்னை ஒப்புக்கொடுக்கும் நெகிழ்ச்சியுமாக படம் முழுக்க விருதுகளை அள்ளித் தர இருக்கும் அசத்தல் நடிப்பு. கடைசி கட்டத்தில் கதையில் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி, செல்வியின் உள்ளத்தில் இடம்பிடித்துத் தானும் அவள் அன்பிற்கு ஆட்படும் கதாநாயகன் பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். செல்வியைக் கைப்பிடிக்கும் ஏழுமலையாக அந்த மிகச் சுருக்கமான கால வரையறைக்குள் மலரும் காதலைக் கொண்டாட்டமாகக் கடத்தி இருப்பார்.
மகன்களாக நடித்திருக்கும் அஜய் திஷான் (விஜய் ஆண்டனி உறவினர்), சக்தி இருவரும் சிறப்பான பங்களிப்பு.பச்சைப்பெருமாளாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், செல்வியின் அண்ணனாக கருணாஸ், பாஸ்கருக்கு அறிவுறுத்தி வழி நடத்தும் கன்னிகாஸ்திரீயாக லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டு அனைத்துக் கலைஞர்களும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.
பாலாஜி ஸ்ரீராம் இசையில் (அவரது முதல் படம்) மாயக் கனவோ இனிமையாக ஒலிக்கிறது. அம்மா அம்மா தான் உள்ளிட்டுப் பாடல்கள் சிறப்பு. ஒளிப்பதிவும் (தர்ஷன் கிர்லோஷ்), படத்தொகுப்பும் (ஹரீஷ் யுவராஜ்) மிகவும் அருமை. குறிப்பாக, பன்றியின் துரத்தலில் செல்வி கிணற்றில் போய் விழும் காட்சி ஏற்படுத்தும் பதட்டமும், கருணாஸ் கழுத்தை நெரிக்கும் காட்சியின் அழுத்தமும் !
பெருமளவு மிகவும் இயல்பாகவும், கொண்டாடத் தக்க வகையிலும் உருவாக்கியும் படக் குழு பாராட்டுக்குரியது. கதையின் கடைசிக் காட்சியை வழக்கமான ஹீரோயிசம் எல்லாம் வைத்து முடிக்கக் கூடாது என்று நினைக்கும் இயக்குநர் யூ டியூபர்கள் மூலம் ஒரு கலக்கல் கலக்கி முடிப்பதும், அதற்காகவே சில காட்சிகளை முந்தைய பகுதிகளில் அறிமுகப் படுத்தி இருப்பதும் தான் ஒட்டாது தனித்துத் தெரிகிறது. பெண்களே பெண்களுக்கு எதிரி என்கிற வழக்கமான தவறான பார்வையை முன் வைக்காது, அதே கிராமத்தில் செல்வியின் பக்கத்து நியாயத்திற்காக வாதாடும் ஒரு சில பாத்திரங்களை இயக்குநர் பேச வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். செல்வியின் பார்வையிலிருந்து விரியும் படம், இடையே பாஸ்கரின் கதை சொல்லிக் குரல் உள்ளிட்டுக் குறுக்கிடுவது நெருடுகிறது. மகன்களுக்கு ஏற்படும் மனமாற்றத்தை இன்னும் செதுக்கி இருந்திருக்கலாம் என்று தோன்றியது. குடும்பத்திலிருந்தே எதிர்ப்பு புறப்பட்டுவிட்டது, உள்ளூர் பிரமுகரும் கறுவிக் கொண்டிருக்கிறார் என்பது அறிந்தும், அன்றைய இரவில் பாஸ்கர் செல்வியைத் தனியே விட்டுவிட்டுப் போவதை இன்னும் நேர்த்தியாகக் காட்சிப் படுத்தி இருக்கலாம்.
‘சொல்லாமலே’ எனும் வித்தியாசமான படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் சசி, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் படைப்பை முன்வைத்து இயக்கிய ‘பூ’ படம் மிகவும் சிறப்பானது. ‘நூறு சாமி’ நிச்சயம் அவரது சிறப்பான படங்களில் முக்கிய இடம் பெறும்.
‘விதவா மறுவிவாகம்’ பற்றிய தனது சிந்தனைப் பரப்பில் மகாகவி பாரதி தான் பெரிதும் மதித்த காந்தியையும் விமர்சித்து ஆவேசமாக எழுதி இருப்பார். இந்த நூற்றாண்டிலும் கூட நிலைமைகள் மாறிவிடவில்லை என்பதை சமூகத்தின் தலையிலடித்து விவாதிக்கத் தூண்டுகிறது ‘நூறு சாமி’
நன்றி: தீக்கதிர்: ஜூன் 29, 2026

