கவிதைகள் (All)

மழை

மழை

எல்லோருக்கும் நன்மையே எல்லோருக்கும் செய்யும் மழை
கத்தியைப் போல
கச்சிதமாய் பயன்படுத்த வேண்டும்
மனிதர்

குளிர்ந்த வெண் மேகங்கள்
உருமாறி
கருமை ஏறி
இருப்பு கொள்ளாத
செலவாளி போல
சொத்தென விழும் பூமியில்

வெற்றி பெற்ற
பிள்ளையைப் பார்த்த
தாயின் கண்ணீர் கன்னத்தில்
வழிவது போல
வீதிக்குள் ஓடும் சிற்றோடைகள்

அதில்,
குழந்தைகள் ஓடவிடும்,
காகிதக் கப்பல்கள்

மழைக்கு முன்
இடி, இடிப்பது போல

மழை கீழே விழும் முன்
ஓலைப் பட்டாசாக
ஓலைக் கூரை,
முரசு கொட்டும்
மழையின் வருகையை

வீட்டிற்குள் ஒழுகும் நீரைப்
பாத்திரங்கள் பிடித்து வைக்கும்,
மண் தரை
சேறு ஆகாதவாறு

வெயில் அடிப்பதை
ஓட்டை வழியே
வெளிச்சம் போட்டுக்காட்டும்

ஓட்டு வீட்டிற்கு
மழை வரும் போதெல்லாம்
நீரை அங்கங்கே
சொட்டிக் காட்டும்
சுட்டிக் காட்டும்

சிமெண்ட் கட்டிடங்களில்
மொட்டைத் தார்சுகளின்
குப்பை மேனியை
சுத்தமாக்கிக் கழுவும்
வேலையாளாக

உழைப்பாளரின் வியர்வையைக்
காய வைக்கும்
இலவசக் காற்றாடியாக
காற்றுடன் மழை

வீதி எங்கும்,
ஊரெங்கும்
வீசும் காற்றில்
வாசல் கூட்டித் தெளித்து
மழைத்துளிகள் போடும்
புள்ளிக் கோலம்
அழித்து அழித்து
முதலில் மண் மீதும்
பின்பு, தேங்கிய நீர் மீதும்

வயலில் பெய்த மழையில்
பயிர்களும், பயிரோடு சேர்ந்து
களைகளும்
துளிர்த்துத் தலை எடுக்கும்
நீதி, யாருக்கும் சமம் என்பதாக

ஆழியில் பெய்யும் மழை
கடலில் கரைத்த
பெருங்காயமாகும்

அழகுப் பெண்
அரிதாரம் பூசி
மேலும் பேரழகு
ஆவது போல

வனத்தில் பெய்யும் மழையில்
இன்னும் செழிக்கும்
தன் இனம் கொழிக்கும்

மலையில் பெய்த மழையால்
எண் திசையிலும்
நீர், கீழே இறங்கி
ஏரி குளங்களில்
வைப்பு நிதி சேர்க்கும்

மீதமான நீர் மிதமான ஆறுகளாகி
வழி எங்கும்
விநியோகிக்கும்
நீர்ப் பிரசாதம்

மழை அதிகம் பெய்தாலோ
காட்டாறு வெள்ளமென
ஊரை, உயிர்களை அழிக்கும்

பெய்யாது
பொய்த்தாலோ
உயிர்களின் உடல் நீரை
உறிஞ்சிக்கொள்ளும்,
உறிஞ்சிக் கொல்லும்

மழை தனக்கு
மாரி என்றும்
பெயர் வைத்து

ஆக்கவும் அறியும்
காத்தும் காட்டும்
அழித்தும் ஒழிக்கும்

மழை இல்லையேல்
மலைக்கு மரியாதையில்லை

மழை இல்லையேல்,
மலைத்து இருந்து
இறந்து போகும்
மன்னும் உயிர்கள்.

ஓமலூர் பாலு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button