‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீடு மற்றும் ஹைக்கூ நூல்கள் அறிமுக விழா

‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீடு மற்றும்

ஹைக்கூ நூல்கள் அறிமுக விழா
சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்றது
சென்னை.
சென்னையில் நடைபெற்று வரும் 49-ஆவது
புத்தகக் காட்சியில் அமைந்துள்ள சிற்றரங்கில்
அகநி வெளியீடு மற்றும் ‘ஹைக்கூ முற்றம்’ இணைந்து
நடத்திய ‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் 3 வெளியீடு மற்றும்
ஹைக்கூ நூல்கள் அறிமுக விழா கடந்த ஜனவரி 11-ஆம்
தேதியன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஓவியக் கவிஞர் அமுதபாரதி தலைமையேற்றார்.
‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர்
மு.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார்.
‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் 3-ஐ ’கவிதை உறவு’ ஆசிரியர்
கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் வெளியிட, ‘பொதிகை
மின்னல்’ ஆசிரியர் கவிஞர் வசீகரன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற ஹைக்கூ நூல்கள் அறிமுக விழாவில்,
ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் எழுதிய ‘கருவானிலொரு சிறுகீறல்’
நூலை முனைவர் ஆதிரா முல்லையும், அனுராதா செளரிராஜன் எழுதிய
‘துளித்தேன்’ நூலைக் கவிஞர் குடியாத்தம் குமணனும், சக்திமான் அசோகன்
எழுதிய ‘ஆகாயத்தின் அந்தப்புறம்’ நூலை முனைவர் ஜோ.பிரேமா கிறிஸ்டியும்,
மு.முருகேஷ் எழுதிய ‘புத்தருக்குப் பொய் சொல்லத் தெரியாது’ நூலைக் காவல்
துறை கண்காணிப்பாளர் கவிஞர் மணி சண்முகமும், புதுகை ஆதீரா எழுதிய
‘காலம் தப்பிய மழை’ நூலைக் கவிஞர் அனுராஜூம், வ.ரகுநாத் எழுதிய ‘யானையின்
தும்பிக்கையும் புத்தரின் கரமும்’ நூலை எழுத்தாளர் பா.ஆனந்தகுமாரும் அறிமுகம்
செய்து உரையாற்றினார்.
விழாவின் நிறைவில், ‘கவிதை உறவு’ ஆண்டுதோறும் நடத்திவரும் இலக்கிய
நூல்ப்போட்டிகளில் இனி ஹைக்கூ நூல்களுக்கும் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்
என்று ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அறிவித்தார். அந்தப் பரிசுத்தொகையை
ஆண்டுதோறும் வழங்குவதாக கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் தெரிவித்துக்கொண்டார்.
விழாவில், தினந்தந்தி நாளிதழின் மேனாள் செய்தி ஆசிரியர் தனசேகரன், எழுத்தாளர்
யுஎஸ்எஸ்ஆர் நடராசன், தினமணி தலைமைச் செய்தியாளர் ஜெயபாண்டி, பேராசிரியர்
இளையராஜா கண்ணன், கவிஞர்கள் கா.ந.கல்யாணசுந்தரம், நந்தவனம் சந்திரசேகரன்,
அன்புத்தோழி ஜெயஸ்ரீ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிறைவாக, ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பாளர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.
படக்குறிப்பு:
சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற விழாவில், ‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் 3-ஐ
கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் வெளியிட, கவிஞர் வசீகரன் பெற்றுக்கொண்டார்.
அருகில், கவிஞர்கள் அமுதபாரதி. சா.கா.பாரதி ராஜா, ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம்,
மு.முருகேஷ் ஆகியோர் உள்ளனர்.




