சுதந்திரம்…
சுதந்திரம்…
வெள்ளைக் கொடி பிடித்து
வெறும் வஞ்சக வார்த்தை உரைத்து..
பெருஞ்சமூக மதம் பிடித்து
பித்து மனங்களில் நஞ்சை விதைத்து…
கள்ளை உண்ட மயக்கமுறும்
கல்வியில்லா வறுமை கொண்ட
பிள்ளை உள்ள மாந்தரின்
முல்லையொக்கும் வாக்கு பறித்து…
கொள்ளை கொள்ளும்
கொடுமதி ஆட்சிக்கு
கொடுத்த அதிகாரம்
தடுக்கும் எல்லை
தரணியில் இல்லையெனில்..
தொல்லையாகாதா? உயிர்
தொலைத்து பெற்ற சுதந்திரம்?
துன்பமாகாதா? சிறையில் உடல்
இளைத்து பெற்ற சுதந்திரம்?
விரும்பியதை உண்ணவும்
வேண்டியதை உடுக்கவும்
இயலாத சுதந்திரமெனில் அதை
ஏற்புடை சுதந்திரம் என்போமா??
ஆணவக் கொலைகாரனுக்கும்
அதிகார கொள்ளைக்காரனுக்கும்
அத்துமீறி அபகரிப்பவனுக்கும்
கெத்து காட்டும் போக்கிரிக்கும்
கிடைக்கும் சுதந்திரம்
பொற்புடை சுதந்திரம் என்போமா??
மனுநீதி நடை உயிரில் தாங்கி
உயர்நீதி உடை உடலில் தாங்கி
உரைக்கும் நீதியில் சமூக
சமநீதி இருக்குமா ? உயர்
சாதி நீதி திளைக்குமா? அதில்
சந்ததிகள் உயர்வதற்கு
சாமானியன் உயிர்
ஈந்து பெற்ற சுதந்திரம் நிலைக்குமா? சாகும்வரை உடல்
வீழ்ந்து பெற்ற சுதந்திரம்
பிழைக்குமா??
அடிமைகளை இன்னும்
அடிமையாக்கவும்..
ஆணவத்தை இன்னும்
அதிகமாக்கவும்..
ஆட்சியை அவலக்
காட்சியாக்கவும்…
அலங்கோலத்தை அதிமிகு
மாட்சியாக்கவும்..
மனிதத்திற்கொவ்வா மதவெறிக்கும்..
மானிடத்திற்கொவ்வா
சாதிவெறிக்கும்..
மட்டில்லா சுதந்திரம்
மாநிலத்தில் கிடைக்குமெனில்..
பெற்ற சுதந்திரம் வீணென்று
பெருங்குரல் உயர்த்துவோம்..
சமத்துவமாய் குழந்தைகள்
சந்தோஷமாய் இசைக்கும்
சங்கீத சுதந்திரம்..
உண்ணவும் உடுக்கவும்
உயர் கருத்தை அச்சமின்றி
உலகிலே உரைக்கவும்
சமூக நீதியை உயர்த்திடவும்
சாதி நீதியை உடைத்திடவும்..
ஆணவத்தை அழித்திடவும் சர்வ
அதிகாரத்தை ஒழித்திடவும்..
சமாதானத்தை அளித்திடவும்
சந்ததியை வளர்த்திடவும்..
அனைவருக்கும் கல்வியை
அளவின்றி அளித்திடவும்..
அன்புகொள்ளும் அகவுணர்வை
அரும்புகளிடம் புகுத்திடவும்..
அறவழி செல்லாத
ஆட்சியை அகற்றிடவும்
அன்புவழி நில்லாத
ஆணவத்தை அழித்திடவும்..
பொல்லாதவரை புவியில்
இல்லாமல் ஆக்கிடவும் – பொருள்
இல்லாதவரை திரு
உள்ளோராக மாற்றிடவும்..
வல்லோரென்றில்லாமல்
எல்லோரும் இன்பமுற
எல்லாமும் செய்யும்
வல்லாண்மை சுதந்திரம்
வையகத்தில் வாய்க்குமெனில்…
உயிரீந்து பெற்ற
உன்னத சுதந்திரம்
உயரத்தில் வானென்று
வானளாவ வாழ்த்துவோம்…
இனிய சுதந்திர தின வாழ்த்துக்களுடன்…
கமல. அருள் குமார்.