சன்னாசி பகழிக்கூத்தர் -17 ஆம் நூற்றாண்டு

சன்னாசி பகழிக்கூத்தர் –17 ஆம் நூற்றாண்டு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள சன்னாசி கிராமத்தில் பிறந்தவரே பகழிக்கூத்தர். அருணகிரிநாதரால் ‘திண்டிமகவி’ என அழைக்கப்பட்டவர். “இவர் சேது மன்னர் அரசாட்சிக்குள்ளாகிய செம்பி நாட்டைச் சேர்ந்த சன்னாசி கிராமத்தில் பிறந்தவர். இது சதுர்வேத மங்கலம் என்றும் அழைக்கப்படும் காமங்கோட்டைச் சேகரத்தைச் சார்ந்துள்ளது” (திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ், முன்னுரை)
பகழிக்கூத்தரின் தந்தை தர்ப்பாதனர் ஆவார். இவர் வைணவப் பார்ப்பன மரபைச் சேர்ந்தவர். வேதாகமங்களை உணர்ந்து உண்மைப் பொருள் அறிந்து, தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பிழையின்றிக் கற்று, பெரும்புலவராக பகழிக்கூத்தர் சிறந்துள்ளார். இவர் ஒருமுறை வயிற்றுவலி கொடுமை தாங்காமல் மிகவும் வேதனைப்பட்டார். பின் திருச்செந்தூர் முருகனிடம் தம் வயிற்றுவலி நோயைக் குணமாக்க வேண்டி பிள்ளைத்தமிழ் பாடினார். பாடி முடித்ததும் வயிற்று வலியும் நீங்கியது. உடனே திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு, கோவிலில் புலவர்கள், அடியவர்கள், திரிசுந்தரங்கள் (முக்காணிகள்) கூடியிருக்க, தன் நூலை அரங்கேற்றி மகிழ்ந்தார்.
முருகனுக்கு கவி செய்த நிலையினை வாழ்த்தும் முகமாக திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழில்,
“செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங்
கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான் – அந்தோ
திருமாது சேர்மார்பன் தேர்ப்பாகற் கன்பு
தருமால் பகழிக்கூத் தன்”
-(திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் ப.1)
என நேரிசை வெண்பாவில் சிறப்புப்பாயிரம் பாடியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சேதுபதி மன்னர் கல்வெட்டு’ எனும் நூலில், “போகலூர் கிராமத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சேது நாட்டின் ஆட்சியை கி.பி.1603-ல் தொடக்கியவர் உடையான் சடைக்கன் சேதுபதி. இவரது நான்கு மக்களில் முதலாமவர் கூத்தன் சேதுபதி ஆவார். இவரது ஆட்சிக் காலத்தில் சேதுநாட்டில் பல சமுதாயப் பணிகளுடன் தெய்வீகத் திருப்பணிகளும் நடைபெற்று வந்திருப்பதை அவரது கல்வெட்டுக்களின் வாயிலாக நாம் அறிய முடிகிறது. இங்குள்ள விநாயகர் கோயிலின் அருகில் உள்ள ஐயனார் கோயிலில் இந்தக் கல்வெட்டு உள்ளது. வாசகத்தின் படி அந்த அய்யனாரின் பெயர் பகழிக் கூத்த ஐயனார் என்பதாகும். இந்தக் காவல் தெய்வத்தின் பெயர் அந்தக் காலத்தில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபல்யமானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த ஊருக்கு வடக்கே பத்து மைல் தொலைவிலுள்ள சன்னாசி சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்தில் பிறந்த புலவர் ஒருவரது இயற்பெயராக இந்தப் பகழிக்கூத்தர் என்ற சொல் அமைந்து இருந்தது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்றிய வேறு நூல்கள்
பகழிக்கூத்தரின் எழுதிய திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழை 1957 ஆம் ஆண்டு மூலப்பதிப்பாக திருநெல்வேலி சைவச் சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. சீவக சிந்தாமணி சருக்கம் எனும் நூலும் பாடியுள்ளார். மேலும், இவர் இயற்றிய சிந்தாமணிச் சருக்கத்துப் பாயிரத்தில், “செம்பிநாட்டு வீரநா ராயணச் சதுர்வேதி மங்கலம்/ விளங்கவே வந்த நெடுமால், வேதியர் குலாதிபதிதர்ப்பாதனன்/ புதல்வன் மிக்க பகழிக் கூத்தனே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (பிற்காலப் புலவர்கள்ப.317)
“மதுரத் தமிழை இகழ் தீயோர் மணி நா அறுத்துக் கனலில் இட” என்று பாடிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் செய்த புலவர் புராணத்தில் பகழிக்கூத்தர் பற்றி, “பூமாது போற்றும் புகழ்ப்பகழிக் கூத்தாவுன்/ பாமாலை கேட்கயாம் பற்றோமோ எனும் பழம்பெரும் பாடல் பகழிக்கூத்தரின் பெருமையைப் பறைசாற்றும்.

பகழிக்கூத்தர் பற்றிய கல்வெட்டுச் செய்தி

முனைவர் சே.முனியசாமி, உதவிப் பேராசிரியர்,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
