புண்ணியம் சேர்க்கும் புன்னகை
புண்ணியம் சேர்க்கும் புன்னகை.
வட்டியில் தன் சுவாசத்தை
கட்டியிருக்கும்
வங்கிகளின் இரும்புப்பெட்டிகளிலும்
வாழும் வீட்டின் இருட்டு அறைகளிலும்
உயிரற்று இருக்கும்
வெற்றுக்காகிதங்களின் கூட்டுத்தொகைகளையும்
மலட்டுத்தரையின் சதுர அடிகளையும்
அளவெனக் கொண்டு அறியப்படும்
பணம் படைத்தோரே |
செல்வங்களில் சிறப்புற்றோரே!
உங்களில் சிலர் நினைப்பினை
போன்ற தன்று –
அல்லாஹ்வின் நினைப்பு
செல்வம் என்பது வரமும் அல்ல…
ஏழ்மை என்பது சாபமும் அல்ல…
உங்கள் விருந்துகளில்
வெளியே நிற்பது
சொல்லிவராத கூட்டம் மட்டுமல்ல.
நீங்கள் ஆசைப்பட்டு அழைத்தாலும்
வராத ஒளியினால் ஆனவர்கள்
கூட்டமும் தான்.
உங்களின் விமானங்களுக்கு
இன்னும் நேரம் மீதமிருக்கின்றது.
உங்கள் இருக்கைகள் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
உங்களின் இருக்கைகளில்
எவரும் அமர்ந்துவிடமுடியாது.
பின் நீங்களும்.
உங்கள் பயணத் தேதி
உங்கள் உறவினர்களிடம்
பின்னர் தெரிவிக்கப்படலாம்.
ஆகையால்
அவசரம் வேண்டாம்.
இல்லாத நிலை தந்த இயலாத நிலையில்
தள்ளாத வயதில்
தானம் கேட்பதற்கும் தயக்கம் கொண்டு
பள்ளிவாயிலின் ஓரங்களில்
அமர்ந்திருக்கலாம்.
கடைத்தெருவில் உங்கள்
கடைக்கண் பார்வைக்கு
காத்திருக்கலாம்.
திறக்கப்படாத உங்கள் வாயில்களில்
திறந்துவிடாதா என ஏக்கம் சுமந்து
நின்றிருக்கலாம்.
அவர்கள் எல்லோரும்
உங்களிடம் பொருள் கேட்டு
வந்தவர்களல்ல..
அவர்களில் சிலரின் சிலர்
உங்களுக்கு அருள் சுமந்து வந்தவர்கள்..
அழகிய முகத்துடன்
அருளிய மனத்துடன்
ஏழைகளுக்கும் ஸலாம் சொல்லுங்கள்
உங்களின் ஏதாவது – ஒரு
பாவம் – வறியவர்களின்
புன்னகைக் கொண்டு அழிக்கப்படலாம்.
நீங்கள் அல்லாஹ்வின் சோதனை வளையத்துக்குள் சிக்கியிருக்கும்
அதே வேளையில்
அவர்கள் அல்லாஹ்வின் அருளுக்காக
காத்திருக்கிறார்கள்
புரிந்து கொள்ளுங்கள்…
அவர்களின் முகங்களில்
அவர்களின் மனங்கள் மிளிர்கின்றன.
ஒருமுறை நீங்களும்
உங்கள் மனம் கொண்டு
புன்னகையுங்கள்……
உங்கள் ஒற்றைச் சிரிப்பில்
அவர்களின் சந்தோசம்
நீட்டப்படும்.
உங்களின் நோய்களில் ஒன்று
நீக்கப்படும்
புகழ் போதையில் – கொடுத்த
வாக்கை மறந்து விடாதீர்கள்.
சந்தோசக் களிப்பில்
முடியாத வாக்குகளை
கொடுத்து விடாதீர்கள்.
பயம் தவிருங்கள்
சொத்துக்களை எல்லாம்
சொந்தம் கொண்டாட மாட்டார்கள்.
வீட்டின் அறைகளில்
விருந்தும் விரும்பமாட்டார்கள்.
அதிகபட்ச எதிர்பார்ப்பே
உங்களின் ஒற்றைப் புன்னகைத்தான்
எப்படியாவது – ஏழைகளின்
இதயத்தில் உங்கள் புன்னகையை
இருத்துங்கள் …
நீங்களே அறியாத – ஒரு பாவம்
அவர்களின் புன்னகைக் கொண்டு
அழிக்கப்படலாம்.
உங்கள் உதிரத்தின்
சந்ததிகளின் சந்தோச சரித்திரம்
ஏழைகளின் புன்னகைக் கொண்டு
எழுதப்படலாம்.
ஆக,
புன்னகைத்து விடுங்கள் .
கவிஞர் முஸ்தாக் அஹ்மத்-