கட்டுரைகள்

ஊடகமே இந்த உலகம்

ஊடகமே இந்த உலகம் 

எஸ் வி வேணுகோபாலன் 

ழுத்தாளர் ஜே எம் சாலி அவர்களை அத்தனை நெருக்கத்தில் பார்க்க முடியும் என்று நான் அன்று எதிர்பார்த்திருக்கவில்லை.  1970களின் பிற்பகுதியில் ஆனந்த விகடன் இதழில் மாணவர் பக்கத்தில் எனது சிறுகதை பிரசுரம் ஆனது.  என் அண்ணன் எஸ் வி ரங்கராஜனோடு  நேரே விகடன் அலுவலகம் சென்று, ஆசிரியரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, உதவி ஆசிரியராக இருந்த ஜே எம் சாலி அவர்கள் வெளியே வந்து எளிமையாக அமர்ந்து பேசி, கதையைப் பாராட்டி நிறைய எழுதுங்கள் என்று வாழ்த்தினார்.  கதைக்கான சன்மானமாக அறுபது ரூபாய்க்கு ஒரு காசோலையும் தந்து வழியனுப்பி வைத்தார். 

பத்திரிகை அலுவலகங்களுக்குச் செல்வது, வங்கிப் பணியில் சேர்ந்து தொழிற்சங்க இயக்கப் பணிகளில் ஈடுபட்ட காலத்தில் கூடுதலானது. தொழிற்சங்க அறிக்கைகளை நேரில் சென்று சேர்ப்பது மிகவும் பிடித்தமான வேலை.  யூ என் ஐ, பி டி ஐ இரண்டும் முக்கிய செய்தி நிறுவனங்கள்.  பிறகு ஆங்கில, தமிழ் நாளேடுகளில் கொண்டு சேர்ப்பது.  பெரும்பாலும், பத்திரிகை அலுவலகங்களில் பாதுகாப்பு பொறுப்பில் இருப்பவர்களே தடுத்து நிறுத்திக் கடிதங்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவார்கள்.  அதையும் மீறி உள்ளே சென்று செய்திப் பிரிவில் அல்லது ஆசிரியர் குழுவில் இருப்பவர்களை சந்திப்பது, விவாதிப்பது மிகவும் சுவாரசியமான விஷயம்.

பத்திரிகை செய்தியை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும்  நேர்த்தியாக எழுதுவதிலும், அதை உத்தரவாதமாக அடுத்த நாள் நாளேடுகளில் வெளிவரச் செய்வதிலும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக இயங்கிய அ.ரெங்கராஜன் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.  இதழாளர்கள் பலரோடு மிகுந்த தோழமை நேயமும் பாராட்டி வந்தவர்.  பத்திரிகையாளர் சங்க முக்கிய நிர்வாகியான ஜே ஸ்ரீராமன், அணு ஆயுதங்களுக்கு எதிரான பத்திரிகையாளர்கள் எனும் (JOURNALISTS AGAINST NUCLEAR WEAPONS) அமைப்பை நிறுவியபோது அதன் கூட்டங்களை வங்கி ஊழியர் சம்மேளனம் இயங்கிவரும் நரேஷ் பால் மைய அரங்கிலேயே நடத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்வார் ரெங்கராஜன்.  தி இந்து மூத்த உதவி ஆசிரியர் கரிமெல்லா சுப்பிரமணியன், தி இந்து மூத்த செய்தியாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரோடும் நெருக்கமாக இருப்பார் ரெங்கராஜன்.  

இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்களிடம் இசை பயின்றவர்  கரிமெல்லா சுப்பிரமணியன். பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழுக்காக அவரோடு நிகழ்ந்த சந்திப்பு மறக்க முடியாதது.  மாற்று திறனாளி என்ற சொல்லாக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர் அவர்.  கண் பார்வையற்றவன் என்றே என்னைக் குறிப்பிடுங்கள், எனது ஊனத்தை மறைத்துச் சொல்லும் எந்தப் பதமும் இந்த சமூகத்திற்கு எனது பிரச்சனைகளை உணர்ந்து கொள்ள உதவாது என்று கூறுவார்.  ஓவியர் வின்ஸி எனும் இரா.குமரகுருபரன் அவர்களுக்கு மிக நெருக்கமான நண்பர் அவர்.  கண் பார்வையற்று இருப்போர் இசை போன்ற கவின்கலைகளில் சிறந்து விளங்குவார்கள் என்று ஒரு சோதிடர் சொன்னார் என்பதை மறுப்பதற்காகவே, பொருளாதாரம் எடுத்துப் படித்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிலையத்தில் பட்டம் பெற்றவர், அங்கே அவரது முயற்சியால் அறிமுகமான பேசும் கணினியை (SPEAKING COMPUTER) முதன்முதலாகப் பயன்படுத்தியவர் அவரே.  

ஆர் ஜி என்று இதழாளர்கள் மத்தியில் அறியப்பட்டு இருந்த திரு ஆர் கோபாலகிருஷ்ணன், தொழிற்சங்க செயல்பாடுகள் குறித்து தீர்க்கமான விமர்சனப் பார்வையைத் தயக்கமின்றி எங்களிடம் கூறும் அதே வேளையில், தொழிற்சங்க இயக்க செய்திகளை முன்னுரிமை கொடுத்து நாளேட்டில் எழுதியும் வந்தவர்.  ஜூலை 19 வங்கிகள் நாட்டுடைமை தினத்தை வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டாட வேண்டும் என்று தோழர் ரெங்கராஜன் முன்னெடுப்பு மேற்கொண்டபோது தி இந்துவில் மிக அருமையான செய்திக் கட்டுரை வரைந்திருந்தார் ஆர்.ஜி..  அவரது அசாத்திய பொறுமையும், திறமையும், அன்பும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. 

எஸ் விஸ்வநாதன் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் பத்திகள் எழுதி வந்தபோதே (YES WE என்ற பெயரில் எழுதுவார்) வாசித்ததுண்டு, பிறகு அவர் ஃபிரண்ட்லைன் இதழில் பணியாற்றுகையில் நெருக்கமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது.  அவரது பணி நிறைவுக் காலம் தி இந்து நாளேட்டில் வாசக ஆசிரியர் (READERS’ EDITOR) ஆக அமைந்தது சிறப்பான ஒன்று.  அருமையான பத்திகள் எழுதி வந்தார்.  வலதுசாரிகள் கிளப்பிய அவதூறுகளுக்கு அவரது பதில்கள் சான்றாதாரங்களோடு நெத்தியடியாக அமையும். 

தீக்கதிர் ஆசிரியர் குழுவின் பேரன்பு விவரிப்புக்கு அப்பாற்பட்டது.  தோழர் சு பொ அகத்தியலிங்கம், மயிலை பாலு, அ.குமரேசன், வி பரமேஸ்வரன், இப்போதைய ஆசிரியர் எஸ்.பி ராஜேந்திரன் என எல்லோருமே அன்போடு அரவணைத்துப் படைப்புகளை அனுப்பி வைக்கத்  தூண்டிக் கொண்டிருப்பவர்கள். 

ஊடக அலுவலகங்களில் சில நெகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்பட்டது உண்டு.  2002 ஜூன் 12 அன்று தஞ்சை பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி எனும் சிற்றூரில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் (தமிழ்நாடு) சங்கத்தின் IBEA பள்ளிக்கூடத்தை விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் என் சங்கரய்யா அவர்கள் திறந்து வைக்க, மேனாள் துணை வேந்தர் ச முத்துக்குமாரசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.  இதற்கான அழைப்பிதழை எடுத்துக் கொண்டு முதல் நாள் பல்வேறு பத்திரிகை அலுவலகங்களில் கொண்டு சேர்த்துவிட்டு, தினமணி அலுவலகம் சென்றவன், ஆசிரியரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். 

தினமணியின் ஆசிரியர் பொறுப்பில் அப்போது இருந்தவர் திரு இராம சம்பந்தன் அவர்கள். எந்தப் பரிச்சயமும் இல்லாது அவரை நேரில் சென்று பார்க்கையில் அத்தனை அன்போடு வரவேற்று, அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்து மிகுந்த உற்சாகத்தோடு பாராட்டி, நிச்சயம் நிருபர் வருவார் உறுதி கூறி அனுப்பி வைத்தார்.  அவ்வண்ணமே பள்ளியின் திறப்பு விழாவை அருமையான புகைப்படச் செய்திக் கட்டுரையாக மாநிலப் பாதிப்புகள் அனைத்திலும் வெளியிட்டது தினமணி.

1990களில் வேலை இன்மைக்கு எதிரான பிரச்சார இயக்கம் ஒன்றை (CCAU) சிஐடியு தலைமையில் பல்வேறு துறை வாரி சங்கங்கள், சம்மேளனங்கள் ஒன்றிணைந்து நாடு முழுவதும் வலுவாக முன்னெடுத்தனர்.  சென்னை மெரினா கடற்கரையில் வைத்து நடைபெற்ற போராட்ட இயக்கத்தின் நிறைவு பேரணியில்  மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரால் வர இயலவில்லை.  சிஐடியு தலைவர் ஆர் உமாநாத் அற்புதமான நிறைவுரை ஆற்றினார்.   

பேரணி நிறைவு பெற்றதும் செய்தியை எடுத்துக் கொண்டு பறந்தோம். யூனியன் வங்கி ஊழியர் சங்க செயலாளரான தோழர் ஏ பி விஸ்வநாதன் என்னைத் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல, நேரே தொலைக்காட்சி நிலையத்திற்குச் சென்றோம்.  செய்தி ஆசிரியராக அப்போது இருந்தவர் எழுத்தாளர் திரு. சமுத்திரம். அவரது அறைக்கு வெளியே காத்திருந்தோம், செய்திப் பிரிவில் இருந்த அவர் எங்களைப் பார்த்ததும் தானே அருகே வந்து உறையைப் பெற்றுக் கொண்டு வேகமாக செய்தியை வாசித்து, உரிய முறையில் சொல்வோம் என்று கூறினார்.  

அவருக்கு நன்றி சொன்னோம், அதற்கு அவர் சொன்ன பதில் தான் சிறப்பானது:  செய்தியைக் கொண்டு வந்து தருவோருக்குத் தான் நிறுவனம் நன்றிக் கடன் பட்டு இருக்கிறது, செய்தி வராவிட்டால் சண்டை போடணுமே தவிர, நீங்கள் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சொல்லி வழியனுப்பி வைத்தார். 

(காற்று வரட்டும்…..)

நன்றி: புதிய ஆசிரியன் (மே 2025)

ReplyForwardYou received this via BCC, so you can’t react with an emoji

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button