கட்டுரைகள்

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா ஏன் கொண்டாடப்படுகிறார்? 

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா ஏன் கொண்டாடப்படுகிறார்? 

— முனைவர் திருக்குறள் தாமோதரன்

“அறிவியல் தமிழ்” என்ற சொல் உச்சரிக்கப்பட்டவுடன் அடுத்து நினைவுக்கு வருவது “அறிஞர் மணவை முஸ்தபா” தான்.அறிவியல் தன்மை தமிழ்மொழியில் நிறைந்து இருந்தாலும், நவீன காலத்திற்கு ஏற்ப அறிவியல் கலைச்சொற்கள் தமிழுக்கு ஏராளமாகத் தேவைப் பட்டபோது, அதை உருவாக்கிக் கொடுத்தவர் இந்தப் பெருமகனார்.இஸ்லாமிய சமுதாயத்தில் தோன்றி தமிழ் வளர்ச்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். தன் மூன்று பிள்ளைகளுக்கும் தூய தமிழில் பெயர் சூட்டியவர். அரசியல் அழுத்துங்களால் கல்வியிலும் மக்கள் பயன்பாட்டிலும் தமிழ் நலிவுற்று வரும் இக்காலகட்டத்தில், தமிழ் இளைஞர்கள் இவரைப் போன்ற தமிழ்த் தொண்டர்களை நெஞ்சில் நிறுத்தி நடை போட வேண்டியது
அவசியம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் உள்ள பிலால் கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மணவை முஸ்தபா பிறந்தார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலை பட்டமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றார். இளம் வயதிலேயே தமிழ் மற்றும் அறிவியல் மீது பெரும் நாட்டம் கொண்டிருந்தார். தன் தாய் மொழியான தமிழுக்கு காலத்திற்கு ஏற்ப கலைச் சொற்கள் தேவை என்பதை உணர்ந்தார். அதை செய்து கொடுக்கும் வல்லமை தனக்குள்ளதை அறிந்தார்.

அயராது உழைக்கும் ஆற்றலை இயல்பாகக் கொண்டிருந்த மணவை முஸ்தபா, இது தொடர்பான தீவிர ஆராய்ச்சிகள் மற்றும் களத் தேடல்களில் ஈடுபட்டார். வட்டார மக்களின் புழக்கத்தில் இருந்த அருமையான சொற்களை சல்லடை போட்டு சேகரித்தார். கணினி புரட்சி பெரும் சவாலாக நின்ற போது, தமிழ் இலகுவாக அதை எதிர்கொண்டது. அதற்கு முக்கிய காரணமாக அறிவியல் தமிழறிஞர் முஸ்தபா திகழ்ந்தார். “கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி”என்ற அவரது பெரும் பங்களிப்பு தமிழுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. கூகுள் போன்ற தேடல் இணையத்தளங்கள் அந்த களஞ்சியத்திலிருந்து தமிழ் மொழிக்கான வார்த்தைகளை எழுத்தாள்கின்றன.

கணினி களஞ்சிய பேரகராதி, அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி, மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் போன்ற கலைச்சொல் அகராதிகள் தமிழுக்கு அவர் அளித்த பெரும் கொடைகள் ஆகும். சுமார் 8.5 லட்சம் கலைச்சொற்களை உருவாக்கி வரலாற்றுச் சாதனை படைத்தார் இம்மாமனிதர். சுமார் 4.4 கோடி சொற்களைக் கொண்ட பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை தமிழுக்கு கொண்டுவர அயராது உழைத்தார்.

ஐ.நா.மன்றத்தின் அங்கமான யுனெஸ்கோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ இதழான “யுனெஸ்கோ கூரியர்” தமிழில் வருவதற்கு தீவிர முனைப்பு காட்டினார். மத்தியில் ஆட்சி செய்வோர் பிராந்திய மொழி முக்கியத்துவம் பெறுவதை ஒருபோதும் விரும்பியது இல்லை. வழக்கம்போல, யுனெஸ்கோ இதழ் தமிழில் வருவதற்கு தடைகளை ஏற்படுத்தினர். தமிழக அரசியல் தலைவர்களின் துணையோடு, இவர் எடுத்த முயற்சியின் விளைவாக அந்த இதழ் தமிழில் வெளிவந்தது. வித்தியாசமான வடிவமைப்பால் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் அந்த இதழ் அலங்கரித்தது. மணவை முஸ்தபா 35 ஆண்டுகள் இந்த இதழுக்கு ஆசிரியராக வீற்றிருந்து பெருந் தொண்டாற்றினார்.

ஊருக்கு உபதேசியாக இல்லாமல் தமிழ் நேசிப்பை தன் இல்லத்திலும் செயல்படுத்தினார் முஸ்தபா. தன்னுடைய மகன்களுக்கு அண்ணல், செம்மல் என்றும் மகளுக்கு தேன்மொழி என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார்.
1968 ,1982.1987, 1995 இந்த காலகட்டத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்று தம்முடைய ஏழு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தார்.

“புதிய கண்டுபிடிப்புகளின் வரலாறு”, “ஜெர்மானிய இந்திய இயல் அன்றும் இன்றும்”உள்ளிட்ட பல மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதினார். இன்றைய உலகுக்கு தேவைப்படும் நல்லிணக்க பண்பின் பெட்டகமாக முஸ்தபா விளங்கினார். மிகச் சிறந்த மொழி ஆராய்ச்சியாளராக தாய் மொழியாம் தம் தமிழ் மீது பற்றும் பாசமும் கொண்டவராக இருந்த போதிலும், பிற மொழிகளை பழித்துப் பேசியதும் எழுதியதும் கிடையாது.

இஸ்லாம் மார்க்கத்தின் மீது பிடிப்பு இருந்த போதிலும் பிற மதங்களையும் நேசித்தார். மதங்கள் உருவானதன் அடிப்படையை உணர்ந்து கொண்டால் பிறமொழி மீது காழ்ப்புணர்ச்சி வராது என்பதை நடைமுறையில் புரிய வைத்தார்.

இன்றைய சிறுவர்கள் தான் நாளைய தலைவர்கள் என்பதால் சிறுவர்களுக்கு நிறைய எழுதினார். சிறுவர் கலைக்களஞ்சியம், சிறுவர்க்கும் சுதந்திரம் போன்ற இவருடைய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் அறிஞர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசிடம் இருந்து அதிக விருதுகளை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு காலகட்டங்களில், மொத்தம் ஐந்து விருதுகளை தமிழக அரசு இவருக்கு வழங்கி சிறப்பு செய்தது. இவருடைய உழைப்பும் ஆளுமையும் எத்தகையது என்பதற்கு இந்த விருதுகள் சான்று.

தென்மொழிகள் புத்தக ட்ரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள் பணியாற்றினார் .தமிழ்நாடு அரசு உயர் கல்வி -தமிழ் ஆக்கப் பணிக் குழு உறுப்பினர் பதவி, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க
இணைச்செயலாளர், பாரதிய ஞானபீட குழு தேர்வு குழு உறுப்பினர்,எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகர், தமிழ் மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினர், செம்மொழி தமிழாய்வு நிறுவன உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அழகு சேர்த்தார்.

தமிழ் அறிவியல் கருத்தரங்கை 1986இல் முதன் முதலில் சென்னையில் நடத்தினார். அவருடைய தலைமையில் அவை தொடர்ந்து நடைபெற்று வந்தன. அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவி தம் சொத்தின் ஒரு பகுதியை அதற்கு வழங்கினார். தம் காலத்திற்குப் பிறகும்
தமிழுக்கான தொண்டு தொடர்வதற்கு இவ்வாறு செய்தார்.

திரு‌ வி. க. விருது , கலை மாமணி, தமிழ் தூதுவர் விருது, வளர்தமிழ்ச்செல்வர், அறிவியல் தமிழ் புத்தக தமிழ் மன்றத்தின் சேவாரத்னா விருது, உள்ளிட்ட ஏராளமான விருதுகள் இவரை தேடிச் சென்று சிறப்பு பெற்றன. இவர் எழுதிய நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கி ரூபாய் பத்து லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது. அவரை கௌரவிக்கும் வகையில் அவர் பிறந்த ஜூன் 15 ஆம் நாளில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவியல் தமிழ் வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இவருடைய சாதனைகள் 7 மணி 20 நிமிடம் ஓடும் வீடியோ ஆவணமாக பதிவு செய்யப்பட்டு டெல்லியில் உள்ள மத்திய அரசின் ஆவண பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவியல் தமிழ் மன்றத் தலைவராக செயல்பட்டு வந்த இவருக்கு உடல் நலம் குன்றியபோது இவருக்காகவே அலுவலகத்தை இவர் வீட்டின் அருகிலே அமைக்க தமிழக அரசு முற்பட்டது.இத்தகைய பெருமைக்குரிய, அறிவியல் தமிழ் தந்தை என்று கொண்டாடப்படும் இந்தத் தமிழ் தொண்டர் 2017 ஆம் ஆண்டு தன்னுடைய 82 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் ஒன்று நம் தமிழ். இலக்கண- இலக்கிய செழுமை கொண்ட மொழி. ஆனால் தமிழ்நாட்டிலேயே தமிழின் நிலைமை மிக மோசமாக உள்ளதை ஒத்துக் கொண்டாக வேண்டும். அண்டை நாடான இலங்கையில் தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் உள்ள போது இங்கு ஏன் இல்லை? . மிகவும் போராடி தமிழில் இங்கு பொறியியல் படிப்புகள் வந்தபோது மாணவர்கள் ஏன் சேர விரும்பவில்லை?. பள்ளிக்கூடங்களில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது ஏன்?. இந்தக் கேள்விகளுக்கு விடைமும் தீர்வும் கிடைக்க வேண்டுமென்றால்,
தமிழுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இதுபோன்ற அறிஞர் பெருமக்களை பட்டி தொட்டியில் உள்ள தமிழ் இளைஞர்கள் அறிந்து போற்றிட வேண்டும்.

தம் வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு இடையூறுகளை இடைஞ்சல்களைக் கடந்து அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா உச்சம் தொட்டார். இவரைப் போன்ற ஆளுமைகளைக் கருத்தில் கொண்டு நம் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அருமையான குறள் இது:

“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.”(திருக்குறள் 669)

பொருள்:
முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முடியிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத் துணிவுடனே செய்து முடிக்க வேண்டும்.

(அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா பிறந்த நாள் இன்று(15.06.1935). அவருக்குப் புகழாரம் சூட்டும் வகையில், “பெண்மணி”இதழில் வெளிவந்த கட்டுரை இது )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button