அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Vinkmag ad

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (29.10.2018)

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும்; அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான்; (ஆகவே) அவன் நாடியவர்களுக்குப் பெண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்; அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்.(42:49)

அல்லது, ஆண் மக்களையும், பெண் மக்களையும் கலந்தே கொடுக்கின்றான்; அன்றியும், அவன் நாடியவர்களுக்கு குழந்தை இல்லாமலும் ஆக்கி விடுகிறான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; (தான் விரும்பியதைச் செய்ய) மிக்க ஆற்றலுடையவன்.(42:50)

@சுப்ஹானல்லாஹ்…இன்றைய மனிதர்களின் பல்வேறு கேள்விக்கும், கவலைகளுக்கும் உரிய பதிலாகவும் ஆறுதலாகவும் மேலே உள்ள இரண்டு வசனங்களின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்.

இன்று சமூகத்தில் நிலவி வரும் கணவன்,மனைவிக்கு இடையிலான பல்வேறு பிரச்சினைகளில் குழந்தை பாக்கியம் என்பது மிக முக்கியமானதாக உள்ளது.

மனிதன் எப்படி வேண்டுமானாலும் ஆசைப்படலாம்; ஆனால் அவனுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு; அதனடிப்படையில் தான் பெண் குழந்தை என்றும் ஆண் குழந்தை என்றும் அல்லது ஆண்,பெண் என இரட்டை குழந்தை என்றும் அல்லாஹ் தீர்மானிக்கிறான்.

எந்தக் குழந்தையானாலும் அது அல்லாஹ்வின் அருட்கொடை என்பதில் மட்டும் நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்.சிலருக்கு குழந்தை பாக்கியமே இல்லாமலும் போகலாம்; அதுவும் அல்லாஹ்வின் நாட்டம் தான்; குழந்தையை கொடுத்து சோதிப்பதும் குழந்தையை கொடுக்காமல் சோதிப்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.

எதுவானாலும் குழந்தை பிரச்சினையில் மனிதர்கள் தேவையற்ற கவலை கொள்வதையோ அல்லது அதன் மூலம் கணவன்,மனைவிக்கிடையே சண்டையிட்டுக் கொள்வதையோ அல்லாஹ் விரும்பவில்லை என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும்.

யா அல்லாஹ்! எங்கள் குழந்தைகளைக் கொண்டு எங்களுக்கு நன்மையை ஏற்படுத்தி வைப்பாயாக, குழந்தை இல்லாத உனது அடியார்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பாயாக என்ற பிரார்த்தனையை நாம் அதிகம் அதிகம் செய்வோமாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

2,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகள் செய்த தமிழர்கள்… குண்டுரெட்டியூர் ஆச்சர்யம்!

Read Next

சூடேறும் பூமி

Leave a Reply

Your email address will not be published.