ஆயிரம் பிரச்சனை — எஸ் வி வேணுகோபாலன்

Vinkmag ad

ஆயிரம் பிரச்சனை எஸ் வி வேணுகோபாலன் 

மிகப் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்துவிட வேண்டும் என்று திடீர் என்று ஏனோ தோன்றிவிட்டது குமாருக்கு. அதற்குக் காரணம் அந்த மருத்துவர் தான். பல நாட்கள் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டவனுக்கு அவர் கொடுத்த மருத்து தான் காரணம். கவனப் பிசகால், மருந்து எழுதிய சீட்டை மேசை மீது வைத்துவிட்டு, அது பறக்காமல் இருக்க மருத்துவர் வைத்திருந்த ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் குமார்.

அன்றிரவு, அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்ததும் தூங்கிவிட்டார்.  அந்தத் தூக்கத்தில் பழைய நண்பர் ராமநாதன்  வந்துவிட்டார். வந்தது மட்டுமின்றி கல்லூரியில் படிக்கும்போது கடனாக வாங்கிய பத்து ரூபாயை இன்னும் திருப்பித் தரவில்லையே நீ எல்லாம் ஒரு நண்பனா என்று கண்டமேனிக்குத்   திட்டித் தீர்த்துவிட்டார். இப்படியான கெட்ட கனா வந்ததும் முழிப்பு தட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்து என்ன செய்வது என்று முழி முழி என்று முழித்தார். 

இப்படியெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே அவருக்குத் தெரியும். அதனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கிய அதே பத்து ரூபாய்த் தாளை அப்படியே ஒரு டிரங்க் பெட்டியில் செலவு செய்யாது பத்திரமாக வைத்திருந்தார். அந்த நண்பரின் முகவரி எழுதிய உறைக்குள் அந்தப் பத்து ரூபாய், ‘எப்போது வேளை வரும், எப்போது உரியவரிடம் போய்ச் சேரலாம்’ என்று காத்திருந்தது. 

குமார் எடுத்துக் கொண்டார். ஓர் உறை அல்ல, மொத்தம் ஏழு உறைகள். அத்தனை பேருக்கு அவர் கடன் பட்டிருந்தார் தனது வாழ்க்கையில்!  மூக்குக் கண்ணாடி முதல் நாள் உடைந்து போயிருக்கவே, இப்போது அவரால் எந்த உறை இந்தக் குறிப்பிட்ட நண்பருக்கானது என்று கண்டுபிடிக்க முடியாது. எனவே ஏழு உறைகளையும் எடுத்து வைத்துக் கொண்டார். முதல் வேலையாக மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டு உறை மீதிருக்கும் முகவரியைப் படிக்க வேண்டும். தனது வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க அவருக்குப் பிடிக்காது. வீட்டை விட்டு வெளியே வந்தார். 

அவருக்குத் தெரிந்த மூக்குக் கண்ணாடிக் கடை இரண்டு மைல்  தொலைவில் தான் இருந்தது. ஆனால் பேருந்து ஏறிப்போக முடியாது. பேருந்து வழித்தட எண் இப்போது கண்ணில் தெரியாது. அதற்காக யாரையாவது கேட்டு ஏறிப்போய் விடமுடியுமா, குமாரா கொக்கா? நடந்தே போவது என்று முடிவெடுத்துப் போய்க் கொண்டிருந்தார். 

பழைய நண்பர் ராமநாதன் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர். யாரிடமும் இரைந்து கூடப் பேசமாட்டார். அவருக்கே இப்படி கோபம் வந்துவிட்டதே என்று தான் புறப்பட்டு விட்டார் குமார். அது தனது கனவில் தான் என்றாலும், உண்மையின் பிரதிபலிப்பு தான் கனவு என்று எப்போதோ எங்கோ படித்த நினைவு குமாருக்கு. முழு வரிகளும் படிக்குமுன் அன்றும் தூங்கி விட்டிருந்ததால் அதற்கு மேல் அந்தக் குறிப்பு என்ன சொல்லிச் சென்றது என்றெல்லாம் கூட அவர் தொடர்ந்து வாசித்தது இல்லை. 

ஏழு உறைகளில் ஒன்று ராமநாதனுக்கானது. இரண்டாவது முன் கோபக்காரர் முனுசாமி. அவரிடம் குமார் பணம் எதுவும் பெற்றுக் கொண்டதில்லை. அவரிடம் சேர்க்கவேண்டிய சீட்டு ஒன்றை முனுசாமியின் உறவினர் ஒருவர் கொடுத்துவிட்டுப் போனது. எப்படியோ கொடுக்க விடுபட்டுப் போனது. இப்போது கொண்டு கொடுத்தால் எப்படி தன்மீது பாய்ந்து பிடுங்குவாரோ என்று அஞ்சியே பெட்டிக்குள் பெட்டிப் பாம்பாக இருந்து வந்தது உறை. மூன்றாவது உறை, மதுரை மீனாட்சி கோயில் விபூதி குங்குமம். குமார் மதுரைக்குப் போகும்போது நண்பர் பழனிச்சாமி கேட்டுக் கொண்டபடி ஞாபகமாக வாங்கி வந்தது, மறந்தே போயிற்று அவரிடம் கொண்டு சேர்க்க. 

நான்காவது உறை, இவர் பெயரிலேயே இருந்த வேறு ஒருவருக்கு வந்த கடிதம் தவறுதலாக அலுவலக உதவியாளர் இவர் மேசையில் வைத்துவிட்டுப் போனது, அந்த வேறொரு குமார் பல நாட்கள் அலுவலகம் வராமல், வேறு இடத்திற்கு மாற்றலிலும் சென்றுவிட்டார். அதை அவரிடம் இன்னும் சேர்க்க நேரம் வரவில்லை. ஐந்தாவது உறை, புது மண தம்பதியினருக்கு அன்பளிப்பு எழுதி வைத்து எடுத்துச் செல்ல மறந்தது, அவர்களது குழந்தைக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்க இருக்கும்போது  சேர்த்துவிடலாம் என்று வைத்திருப்பது. 

ஆறாவது உரை, வீட்டு வாடகை ஏற்றியதற்கு எதிராக நகராட்சிக்கு எழுதிய விண்ணப்பம். நேரமே இல்லாததால் கொண்டு கொடுக்கவில்லை. அதற்குப்பிறகு நகராட்சி மேலும் 3 முறை ஏற்றி விட்டிருந்தனர், இருந்தாலும், முறைப்படி முதல் கடிதம் கொடுக்காமல் அடுத்த கடிதம் கொடுக்கக்கூடாது என்று இன்னும் வைத்திருக்கிறார் குமார்.

ஏழாவது கடிதம், இவரது ஞாபக மறதிக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டு, மறந்துவிடக் கூடாது என்று பத்திரமாக உறையில் போட்டு வைத்திருந்தது. இப்படியாக ஒரே மாதிரி இருக்கும் ஏழு வெள்ளை உறைகளை எடுத்துக் கொண்டு நடந்ததில் மூக்குக் கண்ணாடிக் கடை வந்துவிட்டது.  குமார் அந்தக் கடையை ஞாபகம் வைத்திருந்தது அவரது மறதியை அவரே தோற்கடித்திருந்த பெருஞ்சாதனை. நேரே கடைக்குள் சென்று கண்ணாடியை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், கண்ணாடியைக் கையோடு கொண்டுவர மறந்து விட்டார். கடைக்காரரிடம் தலையை சொரிந்தார். 

ஆனால், கடைக்காரர் சிரித்துக் கொண்டே சட்டென்று கண்ணாடியை எடுத்து நீட்டினார். 

“என்ன சார், நேற்று தானே கொண்டு வந்து ரிப்பேர் செய்யக் கேட்டிருந்தீர்கள்…அப்புறம் உங்க கிட்டயே தேடினா எப்படி கிடைக்கும்..இது தான் உங்க கண்ணாடி..போட்டுப் பாருங்க, நல்லாத் தெரியுதான்னு..” என்று சிரித்தவாறே கண்ணாடியை நீட்டினார்.

முதலில் உறைகளை எல்லாம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தார் குமார்.  ராமநாதன் பெயருள்ள உறையை எடுத்தார். 

“இந்த அட்ரஸ் எங்கே வரும் சொல்லுங்க”  என்று கடைக்காரரிடமே சீட்டை நீட்டினார்.

அவரோ அதை வாசித்து அதிர்ந்துபோய், “சார்…இது எப்போது எழுதிய முகவரி…அந்தத் தெருவே இப்போது இல்லை…” என்றார்.

குமார் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, “சுனாமியில் அடித்துக் கொண்டுபோய் விட்டதோ…ராமநாதன் என்ன ஆகியிருப்பான் ?” என்றார்.

கடைக்காரர் எரிச்சலோடு, “சார்…வாயைக் கழுவுங்க…நம்மூர்ல ஒரு ஆறு கூடக் கிடையாது…கடலா இருந்தது சுனாமி வந்து அடிச்சுட்டுப் போறதுக்கு…” என்றவர் தொடர்ந்து, “நீங்க எழுதி வச்சிருக்கறது ஒரு சாதி பெயரில் இருந்த தெரு. அப்புறம் தான் சாதியெல்லாம் பலகையில் எடுத்துட்டாங்களே…வெறும் தெருன்னு தான் நீங்க தேடணும். அதுகூடப் பரவாயில்லை…வீட்டு நம்பர் எழுதாம, பேங்க் எதிரில்னு எழுதி வச்சிருக்கீங்க”

“ஆமா..அது அருமையான அடையாளம் ஆச்சே…”

“என்ன அருமையான அடையாளம்…அந்த பேங்க் அதே தெருவிலேயே இருக்குமா…அந்த பேங்க் வேறு ஒரு தெருவுக்கு மாறி பதினஞ்சு வருசமாச்சு…”

“அய்யய்யோ…”

“இன்னொரு அய்யய்யோ சொல்லுங்க…அந்த பேங்க் இப்போ இல்லவே இல்ல…வேற ஒரு பேங்க் கூட அதை இணைச்சு அஞ்சு வருசமாச்சு…”

“வேப்ப மரம் அருகில்னு போட்டிருக்கேனே…”

“சார்..விளையாடாதீங்க…நம்ம ஏரியாவுல எந்த மரத்த யாரு விட்டு வச்சிருக்காங்க….எல்லாம் வெட்டிப் போட்டாச்சு ” என்று அலுத்துக் கொண்டார்.

“வாட் அபவுட் ஃபோன் நம்பர்?” என்று ஆங்கிலத்தில் ஸ்டைலாகக் கேட்டார் குமார்.

ஓங்கி மண்டையில ஒண்ணு வச்சேன்னா..என்று கேட்பதுபோல் பார்த்த கடைக்காரர், “அஞ்சு டிஜிட்ல குப்தர் காலத்து நம்பர் எழுதி வச்சிருக்கீங்க சார்…அதெல்லாம் மாறி எத்தனையோ காலமாயிருச்சு…நம்ம ஊர்ல லேண்ட்லைன் வச்சிருக்கற ஆளு விரல் விட்டு எண்ணிறலாம்” என்றார். 

“அப்போ இன்னிக்கு ராத்திரி எனக்கு திரும்பவும் தூக்கம் வராது…” என்று அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார் குமார்.

“இதுக்கும் தூக்கத்திற்கும் என்ன சார் சம்பந்தம்?” என்று கடைக்காரர் கேட்க,”தூங்கினா, கனவுல ராமநாதன் இன்னிக்கும் வந்து திட்ட ஆரம்பிச்சான்னா எங்கதி என்னாகும்?” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார்.

கடைக்காரர் குமாரின் கண்ணாடியை ரிப்பேர் செய்திருக்க வேண்டாமோ என்று இப்போது யோசிக்கலானார்.

“சார்…என் கஸ்டமர் ஒருத்தர் ராமநாதன்னு இருக்கார்…அவரா உங்க நண்பருன்னு பார்க்கறேன்” என்று அலைபேசியை எடுத்து டயல் செய்து பேச ஆரம்பிக்க, அவர் முகத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பரவ ஆரம்பித்தது. 

“குமார் சார்…சரியாப் போச்சு…உங்க பக்கத்துத் தெரு தான் ராமநாதன் இருக்கறது…கேட்டுட்டேன்…உங்க நண்பர் தான் அவரு…சரியான முகவரி எழுதித் தரேன்..கண்ணாடி போட்டுக்கிட்டு பஸ் ஏறி ஒழுங்காப் போய்ச் சேருங்க” என்றார். 

குமாருக்கு அப்பாடா என்று இருந்தது.  

பேருந்து பிடித்து அவர் வீட்டருகே நினைவாக இறங்கி, ராமநாதன் வீட்டை சரியாகக் கண்டுபிடித்துப் போய் காலிங் பெல் அடித்தார்.

“வாடா…வா…குமார்..இப்போது தான் வர வழி தெரிந்ததா?” என்று வரவேற்றார் ராமநாதன். 

“ஏன் நீ வந்திருக்கலாமில்ல, பக்கத்துல தானே என் வீடு?” என்று கேட்டார் குமார். 

“டேய்…நான் ஊர்லயே இருக்கறது இல்ல…என் பெரிய பெண் கனடாவுல இருக்கா….அங்கே ஆறு மாசம் போய் இருப்போம். அடுத்தவ ஆஸ்திரேலியா…அங்கே ஒரு ஆறு மாசம். பையன் சிங்கப்பூர்…”

“ஓ…அடுத்தது நேரே சிங்கப்பூர் போயிருவீங்களாக்கும்…”

“இல்ல..இல்ல…அவனோட கொஞ்சம் மனஸ்தாபம்…அவன் கூப்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கான்..நாங்க போறதில்ல…” என்றார் ராமநாதன். 

“சரி, விஷயத்துக்கு வர்றேன்…நமக்குள்ள ஒரு கொடுக்கல் வாங்கல்…ரொம்ப நாளா தள்ளிப் போயிட்டே இருக்கு ” என்று ஆரம்பித்தார் குமார்.

அப்போது ராமநாதன் முகம் ஒரு மாதிரியாக ஆனது.  

“ஏம்ப்பா…பழைய பாக்கிய எல்லாம் இவ்ளோ சீரியஸா நீ மனசுல வச்சிருப்பன்னு எதிர்பார்க்கல …கோவிச்சுக்காதே” என்றார்.

“நீ தான் கோபமா வந்து கேக்கற…நான் இல்ல உங்கிட்ட கோபப்படாதேன்னு கேக்கணும்” என்று குமார் சொல்ல, ராமநாதன் மேலும் குழம்பிப் போனார்.

குமார் மெல்ல ராமநாதனிடம் அவர் தனது கனவில் வந்து கொடுத்த காசு எப்போ தருவேன்னு கேட்டதை மென்று விழுங்கி ஒருவழியாகச் சொல்லி முடிக்கவும், வீடே அதிர்கிற மாதிரி ஒரு சிரிப்பு சிரித்தார் ராமநாதன். 

“ஆக்சுவலி, நீ என்கிட்ட எதுவும் கடன் பட்டிருக்கல …. ” என்று ராமநாதன் ஒரு குண்டு எடுத்துப் போட்டார்.

உடனே, குமார் அந்த உறையை எடுத்து நீட்டினார்.

“:அய்யோ இது கே பி ராமநாதன்…அவர் அடுத்த உலகம் போய் அஞ்சு வருஷம் ஆச்சு…நான் ஜேபி ராமநாதன்” என்றார். 

“அப்போ. அவருக்காக நீ என் கனவில் வந்து குடைச்சல் கொடுத்தியா, இதெல்லாம் நியாயமா?” என்று கேட்டார் குமார். இப்போது அவர் முகம் இரட்டிப்பு அப்பாவியாக மாறிப் போயிருந்தது. 

“இந்தக் கனவு சமாச்சாரம் எல்லாம் என் டிபார்ட்மென்ட் இல்லப்பா…நான் உன் கனவுல ஏன் வரப்போறேன்…நீ என்னிக்காவது நேர்ல வந்து நிக்கப்போறியோன்னு நான் பயந்துட்டு இருக்கேன்” என்றார்.   இது ராமநாதன் போட்ட அடுத்த குண்டு. 

குமார் இல்லாத தலை முடியை எல்லாம் பிய்த்துக் கொண்டார். 

“கொஞ்சம் இரு வர்றேன்..அதுக்குள்ளே காபியைக் குடி” என்று மனைவி கொண்டுவந்த கொடுத்த டபரா தம்ளரை குமாரிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.

அறைக்குள் இருந்து வெளிப்படும்போது அவர் கையில் ஓர் உறை இருந்தது. 

“என் பையன் படிப்புக்காக அவசர கைமாத்தா ஆயிரம் ரூபாய் வாங்கி இருந்தேன்…அவனுக்கே இப்போ கல்யாணம் முடிஞ்சு சிங்கப்பூர்ல இருக்கான். இருந்தாலும், அந்தப் பணத்தை நான் செலவு பண்ணத் தேவை ஏற்படல, ஸ்காலர்ஷிப் கிடைச்சுது, அட்ஜஸ்ட் ஆயிருச்சு…உன் கிட்ட வாங்கின பணத்தை அப்பவே ஒரு கவர்ல போட்டு உன் பேரை எழுதி என்னிக்கு உன்னைப் பார்த்தாலும் கொடுக்கணும்னு வச்சிருந்தேன்…அதுக்கு இன்னிக்கு தான் வாய்த்தது” என்று சொல்லி அந்த உறையை நீட்டினார்.

குமார், மிகுந்த பரவசம் அடைந்தார். ‘பத்து ரூபாய் கையை விட்டுப் போகும்னு வந்தால் ஆயிரம் ரூபாய் நமக்கு வருதா.!’ என்று ஒரு நிமிஷம் சிலிர்த்துக் கொண்டார். எழுந்து நின்று அந்த உறையை வாங்கிக் கொண்டார். மெல்லப் பிரித்து எடுத்தார். ஒரே ஒரு ஒற்றை காகிதம். ஆயிரம் ரூபாய் நோட்டு. அதாவது அரசாங்கம் செல்லாது என்று எட்டு வருஷத்திற்கு முன்பே அறிவித்த ஆயிரம் ரூபாய் நோட்டு. 

மயக்கம் போட்டு சோபாவில் விழுந்தார் குமார். 

News

Read Previous

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Read Next

முதுமை நட்பு

Leave a Reply

Your email address will not be published.