2,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகள் செய்த தமிழர்கள்… குண்டுரெட்டியூர் ஆச்சர்யம்!

Vinkmag ad

https://www.vikatan.com/news/tamilnadu/140733-gundureddyur-excavation-how-an-ancient-civilization-is-found-near-tirupattur.html?

2,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகள் செய்த தமிழர்கள்… குண்டுரெட்டியூர் ஆச்சர்யம்!

சந்துரு சு

2,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகள் செய்த தமிழர்கள்… வட தமிழகத்தின் கீழடி, குண்டுரெட்டியூர்!

2,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகள் செய்த தமிழர்கள்... குண்டுரெட்டியூர் ஆச்சர்யம்!

துரை அருகே, சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள வைகை ஆற்றங்கரையில் பழைமையான தமிழர் நகரம் இருந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. மண்பானைகள், இரும்புக் கருவிகள், முத்துகள், பளிங்குக் கற்கள் என சுமார் 5000 பொருள்களை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்த பல்வேறு துறை சார்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

கீழடி போலவே குண்டுரெட்டியூர்

கீழடியைப் போலவே, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள குண்டுரெட்டியூரில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் `இரும்பு உருக்கும்தொழில்நுட்பம்’ தெரிந்த மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும், பல அரிய பொருள்களும் கிடைத்துள்ளன. இதை, தூய நெஞ்ச கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

“ஆய்வின்போது என்னென்ன பொருள்கள் கிடைத்தன. அங்கே தொழிற்சாலை இருந்தது உண்மையா… கீழடி போலவே குண்டுரெட்டியூரும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமா?’’ என்று பேராசிரியர் ஆ.பிரபுவிடம் கேட்டோம்.

“திருப்பத்தூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது குண்டுரெட்டியூர். இது ஏலகிரி மலையின் பின்பக்கச் சரிவின் அடிவாரத்தில் உள்ளது. இதற்குப் `புழுக்கூர்’ என்ற பெயரும் உண்டு. இங்கு, கி.பி. 10 மற்றும் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் உள்ளன. அவற்றில் 4 நடுகற்கள் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு நடுகல்லை ஆய்வு செய்யச் சென்றோம். அப்போது, மலையடிவாரத்தில் சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மண்பானை ஓடுகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தோம். அதைச் சேகரித்துச் சுத்தம்செய்து பார்த்தபோது, அவை பழைமையான ஓடுகள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து 8 நாள்கள் மேற்கொண்ட களஆய்வின் முடிவில் அரிய பொருள்கள் பலவற்றைச் சேகரித்தோம். சுடுமண் ஊது குழாய்கள், கறுப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், தடிமனான சிவப்புப் பானை ஓடுகள், சிவப்பு வண்ணப்பூச்சு கொண்ட பானை ஓடுகள், உடைந்த கெண்டிகள்,  இரும்புத் தாதுகள், கழுத்தில் அணியும் ஆபரணத்தின் மணி, புதிய கற்காலக் கருவிகள், கருமையான எலும்புத் துண்டுகள், சுட்ட  செங்கல்லின் பெரிய பகுதி உள்ளிட்டவை கிடைத்தன.

கற்கால கருவிகள்

மேலும், மனிதர்கள் வாழும் சூழல் நிறைந்த பல கற்குகைகளையும் கண்டறிந்தோம். அதில் இரு குகைகளை ஆய்வு செய்தோம். ஒன்று மலையடிவாரத்தின் நிலப்பரப்பில் உள்ள குகை. இங்கே 10 பேர் வசிக்கலாம். குகையின் முன் உள்ள பெரிய கல்லில் உணவுப்பொருள்களை அரைத்த தடம் காணப்படுகிறது. குகையின் முகப்பில் புருவ அமைப்பு (Cave Eyebrow) செதுக்கப்பட்டு, அதில் பழைமையான தமிழ் பிராமி எழுத்துகளைப் போலத் தோற்றம் கொண்ட குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் குகையை `கெவிகல்’ என்று மக்கள் அழைக்கின்றனர். `கெவி’ என்றால் பள்ளம், கற்குகை என்று இரு பொருள்படும். குகைக்கு சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பாறையில் விளையாடுவதற்குப் பயன்படும் கட்டங்கள் கீறப்பட்டுள்ளன.

பொதுவாக, மனிதர்களின் வாழ்விடம் நீர்நிலைக்கு அருகேதான் இருக்கும். குகையின் ஓரத்தில் `எகிலேரி’ என்ற மிகப் பெரிய நீர்நிலை இருக்கிறது. ஏலகிரி மலையிலிருந்து வரும் காட்டாறுகள் பல இந்த ஏரியில்தான் வந்து சேர்கின்றன. குகைக்கு அருகே உள்ள புதர் மண்டிய மேட்டுப்பகுதியில், இரும்பினை உருக்கும் உலை இருந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. மேட்டுப் பகுதியைச் சுற்றிலும் இரும்புத் தாதுகள் காணப்படுகின்றன. இரும்பை உருக்கப் பயன்படும் சுமார் 7 சுடுமண் ஊதுகுழாய்கள் கிடைத்துள்ளன. இவையெல்லாம், இரும்பு உருக்கு உலையில் காற்றைச் செலுத்தப் பயன்படுபவை. குழாய்களில் இரும்புச் சுவடுகள் காணப்படுகின்றன. மலையடிவாரத்தில் 10 புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 குத்துக் கற்கள், 5 அரவைக் கற்கள், 6 கற்கோடாரிகள் அடங்கும். தடிமன் குறைந்த மண்பானை ஓடுகள் புழங்கு பொருள்களாகவும், சற்றுத் தடிமனான ஓடுகள் தானியங்கள் சேகரிக்கவும் பயன்பட்டிருக்கக் கூடும்.

பேராசிரியர் பிரபுதுளையிடப்பட்ட சிவப்பு நிறத்திலான மணி ஒன்றும் கிடைத்துள்ளது. இங்குக் கிடைத்த பொருள்கள் குறித்து ஆய்வாளர்கள் பலரிடம் கேட்டோம். இவையாவும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் நாகரிக வாழ்க்கையுடன் தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளது. ஆகவே, இரும்பு உருக்குத் தொழில் நுட்பம் அறிந்த மக்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் வேளாண் கருவிகள், பாதுகாப்புக் கருவிகள் செய்ய இரும்பைப் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்பதும் தெளிவாகிறது.

இங்குச் சேகரிப்பட்ட பொருள்கள் அனைத்தும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் அகழாய்வு செய்தபோது கிடைத்த சான்றுகளுடன் ஒப்பிடத்தக்கவையாக உள்ளன. நிலத்தின் மேற்பரப்பிலேயே இவ்வளவு சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே, முறையான அகழாய்வு செய்தால், இது `வட தமிழகத்தின் மிக முக்கியமான நாகரிக வாழ்வின் மையம்’ என்பதை நிறுவ முடியும்.

கி. பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி இருந்ததற்கான சான்றாக, வட்டெழுத்துப் பொறிப்புடன் கூடிய கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இதைத் தொல்லியல் துறை உதவி இயக்குநர் பூங்குன்றன் உறுதி செய்துள்ளதால், கற்காலம் தொடங்கி பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த நாகரிக மக்கள் இங்கே வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி காலக்கணிப்பு செய்யும் முயற்சிகளை எடுத்துள்ளோம். தொல்லியல் துறையினர் உரிய ஆய்வுகளை இங்கே மேற்கொள்ளவும் கடிதம் எழுதவுள்ளோம். குகைகளில் பாறை ஓவியங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறோம்” என்கிறார் ஆ.பிரபு.

கற்கால கருவிகள்

இதுபற்றி அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் சாமிநாதன் கூறும்போது,

“பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். மலையடிவாரத்திலுள்ள நிலத்தை உழும்போது நிறைய பானைகள், மண் விளக்குகள், பெரிய தாளிகள், மணிகளால் ஆன ஆபரணங்கள் வெளியே வரும். ஆனால், அதன் மதிப்பு தெரியாமல் இருந்தோம். அண்மைக்காலமாகத்தான் இந்தப் பொருள்களின் மதிப்புகள் தெரிகின்றன. தொல்லியல் துறை இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டால் இன்னும் பல அரிய உண்மைகள் வெளிவரலாம்” என்கிறார்.

அரிய வரலாற்றுத் தடயங்களைப் பதுக்கி வைத்திருக்கும் குண்டுரெட்டியூரில் தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தொல்லியல் துறையினர் கவனிப்பார்களா?

News

Read Previous

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Read Next

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *