மைசூர் வேங்கை திப்பு சுல்தான்!!

Vinkmag ad

மைசூர் வேங்கை திப்பு சுல்தான்!!

( இன்று திப்பு சுல்தான் 225வது நினைவு தினம்)

இந்துக்களிடம் இரண்டு எருமை மாடுகள் இருந்தால் அதில் ஒரு எருமை மாட்டை முஸ்லிம்களிடம் காங்கிரஸ்காரர்கள் வழங்கி விடுவார்கள் என்று தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின் பிரதம அமைச்சரே பிரச்சாரம் செய்யும் அளவுக்கு இந்து முஸ்லிம் துவேஷம் ஆழ விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இந்த விருட்சத்தின் விதை விதைக்கப்பட்டது இன்று நேற்று அல்ல 300 ஆண்டுகளுக்கு முன் இந்த விஷ விதை இந்திய மக்களிடம் விதைக்கப்பட்டது.

எல்கின் பிரபுவுக்கு அரசுச் செயலாளர் வுட் கடிதம் எழுதுகிறார். இந்தியாவில் நாம் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டுமெனில் இந்து முஸ்லிம் பிரிந்து இருப்பது நன்றாக இருக்கும். அதற்குரிய வேலைகளை தொடங்க வேண்டும். வரலாறுகளை திரித்துச் சொல்ல வேண்டும்.

இந்தியாவை 700 ஆண்டுகள் ஆட்சி செய்த முகலாயர்களின் ஆட்சியில் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். கோயில்கள் இடிக்கப்பட்டன என்றெல்லாம் வரலாறு திரித்து சொல்லப்பட வேண்டும்.

அதன் மூலம் முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட வேண்டும். அந்த வெறுப்புணர்வு பிரச்சாரத்தை வெள்ளைக்காரன் திட்டமிட்டே செய்து முடித்தான்…

வரலாற்றை தொடர்ந்து மாற்றி எழுத வேண்டும் என்கிற அந்த திரிபுவாத வரலாறுக்கு முதல் களப்பணி யானவர் மைசூரை ஆண்ட திப்புசுல்தான்.

3000 பிராமணர்களை திப்பு சுல்தான் மதம் மாற வலியுறுத்தினார். அதற்கு இணங்க மறுத்த பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற தகவலை அடங்கிய வரலாற்றுப் புத்தகம் ஒன்று எழுதப்படுகிறது.

இந்த நூலை எழுதியவர் சாதாரணமானவர் அல்ல. கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை தலைவராக இருந்த மகா மகோபாத்தியாய டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்பவர் தான் இந்த தகவலை அடங்கிய நூலை எழுதுகிறார்.!

இந்த வரலாற்று நூல் வட மாநிலங்களில் பெரும்பாலான கல்வி நிலையங்களில் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

ஒரிசாவின் ஆளுநராக இருந்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவருமான வரலாற்று அறிஞர் பி என் பாண்டே தற்செயலாக இந்த நூலைப் படிக்கிறார்.

3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற தகவல் எங்கிருந்து பெற்றீர்கள் என நூலாசிரியரான சாஸ்திரி அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார் பாண்டே.

அதற்கு அவர் மைசூர் கெஜட்டில் இருந்து பெற்றேன் என பதில் கடிதம் எழுதுகிறார். மைசூர் கெஜட்டின் புதிய பதிப்பை தயாரித்துக் கொண்டிருந்த ஸ்ரீ கண்டய்யாவுக்கு இந்த கடிதத்தை அனுப்பி வைத்து உண்மை என்ன? என்கிற விவரத்தை கேட்கிறார் பாண்டே.

மைசூர் கெஜட்டில் எந்த இடத்திலும் எந்தப் பக்கத்திலும் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்த தகவல்கள் இல்லை என்று கண்டய்யா பதில் எழுதுகிறார்.

3000 பிராமணர்களை தற்கொலை செய்ய வைத்தார் என்கிற அண்டப்புழுகு அடங்கிய தகவலை கர்னல் மைல்ஸ் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் மைசூர் என்ற நூலில் இருப்பதாக பலர் என்னிடம் தெரிவித்துள்ளனர். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

அந்த நூல் விக்டோரியா மகாராணியின் தனி நூலகத்தில் உள்ள பாரசீக கையெழுத்துப் பிரதியின் மொழிபெயர்ப்பு என்றும் ஸ்ரீ கண்டய்யா விவரித்து எழுதி இருந்தார். தொடர்ந்து விக்டோரியா மகாராணியின் தனி நூலகத்தில் அந்த கையெழுத்துப் பிரதியினை தேடும் முயற்சியில் ஈடுபட்ட பாண்டே அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அப்படி ஒரு கையெழுத்துப் பிரதியே விக்டோரியா மகாராணியின் நூலகத்தில் இல்லை என்கிற தகவல்கள் உறுதி பட தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவல்களை எல்லாம் திரட்டி அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்லுகிறார் பாண்டே. உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம்,பீகார்,ராஜஸ்தான், மராட்டியம், ஒரிசா வரைக்கும் இந்தத் தவறான தகவல்களைக் கொண்ட வரலாற்று நூல் பாடத்திட்டத்தில் இருக்கிறது. அதனை நீக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்குகிறார். உறுதியான தரவுகளைக் கொண்ட அவரின் கருத்துக்கு மறுப்போர் இல்லை. அந்த வரலாற்று நூல் தடை செய்யப்படுகிறது.!!

திப்பு சுல்தான் மத வெறியர் அல்ல என்பதற்கான ஆவணங்கள் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது. பரசுராம்பாவு என்ற மராத்தியன் சிருங்கேரி மடத்தை கொள்ளையிட்டு அங்கிருந்த கோயிலுக்கும் சேதம் ஏற்படுத்தினான்.

சிருங்கேறியிலிருந்த பிராமணர்களையும் மற்றவர்களையும் அடித்துத் துன்புறுத்தினான். பலரைக் கொன்றான். ஸ்ரீ சாரதா தேவியின் விக்கிரகத்தையும் அகற்றினான்.

சிருங்கேரி மடாதிபதி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். திப்பு மடத்திற்கு வேண்டிய பொருட்களை அனுப்பி வைத்தார். இடிந்த கோயிலையும் புதுப்பித்தார்.
ஸ்ரீ சாரதா தேவியின் சிலை அமைக்கவும் உதவினார் என்கிறது ஆவணக் குறிப்பு.

சிருங்கேரி மடாதிபதி காஞ்சி வந்த போது திப்பு அங்கே இருக்கும் கோயில்களுக்கு அளித்த மானியங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஆவணம் பேசுகிறது.

சிருங்கேரி மடாதிபதிக்கு திப்புசுல்தான் எழுதிய 30 கடிதங்கள் மைசூர் தொல்பொருள் மையத்தில் உள்ளது.

அவற்றுள் ஒரு கடிதத்தில் தமது நலனுக்கும் பிரபஞ்சத்தின் நலனுக்கும் தவம் செய்யுமாறு திப்பு சங்கராச்சாரியாரை வேண்டி உள்ளார்.

ஸ்ரீ வெங்கட்ரமணா, ஸ்ரீநிவாஸ் ஸ்ரீ ரங்கநாதர் பெயர்களில் உள்ள கோயில்கள் மேலும் திப்பு அரண்மனையின் மேற்பார்வையில் உள்ள கோயில்கள், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களுக்கு திப்பு சுல்தான் ஏராளமான நிலங்களையும், ஆடம்பரமான காணிக்கைகளையும் வாரி வழங்கியுள்ளார். இவற்றின் ஆவணங்களும் இன்றைக்கும் உள்ளது.

திப்பு சுல்தான் 1786 ,1790 ஆம் ஆண்டுகளில் மதுரை வந்தபோது அப்போது எழுந்தருளியிருந்த 282 ஆம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரியா சுவாமிகளை தரிசித்து உரையாடியதுடன் ஆதீன பூசைக்குரிய வெள்ளித் தாம்பாளங்கள், தோல்முரசு, வெள்ளித் திருச்சின்னம், புனுகு, ஜவ்வாது, உயர்ந்த வகை அரபு நாட்டு அர்த்தர் வகைகள் வெள்ளி வாள், ஆகியவற்றைச் சமர்ப்பித்தார்.

ஓர் ஆண் யானையையும் தனது அன்புப் பரிசாக அளித்து மகிழ்ந்தார். இது மதுரை ஆதீன வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. (பக்கம் 75) இத்தகைய மாமனிதரைத் தான் ஆங்கிலேய வரலாற்று புரட்டு ஆசிரியர்கள் மதவெறியற் பிராமணர்களைக் கொன்றவர் கோயில்களை இடித்தவர் என்று பொய்களால் திப்புவை புனந்துரைத்தனர்.

வாள் முனையில் மதமாற்றம் கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை இடித்து தள்ளியது என்பது வரலாற்றிலேயே இல்லை என்று சொல்ல முடியாது.

பொதுவாக மன்னராட்சி என்பது தனிப்பட்ட அந்த மன்னனின் மனநிலையை பொறுத்தது. ஆனால் இந்தக் கொடூரங்கள் தொடர்ந்திருந்தால் 700 ஆண்டுகள் இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சி செய்திருக்க முடியாது.

இரண்டு தலைமுறைகள் கூட அவர்களின் ஆட்சி நீடித்திருக்காது.

மாறாக மதச்சார்பற்ற முறையில் மக்களை சுதந்திரமாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வழிபடுவதற்கு ஏதுவாகத்தான் பெரும்பான்மையான இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்தனர் என்பதே உண்மையாகும். டெல்லியை சுல்தான்கள் ஆண்டபோதுதான் நாணயங்களில் முதன் முதலில் லட்சுமி ,சரஸ்வதி போன்ற இந்துக்கடவுள்களின் உருவங்களை பதித்தனர்.

இந்திய சரித்திர பக்கங்களில் மிகக் கொடூரமான படையெடுப்பு என்பது கஜினி முகமது படையெடுப்பு மற்றும் கோரி முகமதுவின் படையெடுப்பு எனலாம். இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்களே கரைபடிந்த வரலாற்றுக் காலம் என பதிவு செய்துள்ளனர்.

கஜினி முகமது படையெடுத்த அதே சமகாலத்தில் இந்து மன்னர் ஒருவர் சோழப்பேரரசர் ராஜராஜசோழன் இந்தியாவின் தென்னகப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி படையெடுத்து கங்கை நதி கடந்து இமயம் வரை சென்று செல்லும் வழிகளில் இருந்த வடநாட்டு இந்து சிற்றரசர்கள் உள்ளிட்ட அனைவரையுமே அடிமைப்படுத்தி அவர்களின் தலையில் கங்கை நீர் அடங்கிய குடத்தை வைத்து இங்கு இழுத்து வந்தார் என்கிறது அவரின் வரலாறு.

மன்னர் ஆட்சியில் தன் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துவது செல்வம் இருக்கும் இடத்தை தேடி கொள்ளையடிக்கச் செல்வது எல்லாம் சகஜமான வீரமான ஒன்றாக நினைத்த காட்டுமிராண்டி காலம் அது.

நாம் இப்போது மக்களாட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மீண்டும் காட்டுமிராண்டிகளாக மாறுவதற்கு மனசாட்சி உள்ள எந்த மனிதனும் ஒத்துக்கொள்ள மாட்டான். திப்புவின் வீரம் போற்றுவோம். அவரவர் வழிபாடு அவரவர்க்கு. இதில் அரசியலைக் கலந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது மோசமான சித்தாந்தமாகும்.

நீ சு பெருமாள்.
giriperumal1964@gmail.com

News

Read Previous

சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்- வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்

Read Next

தென்னகம் போற்றும் வள்ளல் சீதக்காதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *