குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் பொருளீட்ட வந்த தொழிலாளர்கள் பிணவறையில் துயில் கொள்ளும் சோகம்!

Vinkmag ad

குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் பொருளீட்ட வந்த தொழிலாளர்கள் பிணவறையில் துயில் கொள்ளும் சோகம்!

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றால்….நிலம், வீடு, நகை, பணம் என்று  சகல வசதிகளோடு   குறுகிய காலத்திலேயே பணக்காரனாகி விடலாம்? என்னும் கனவுகளோடு ஊரிலிருந்து புறப்பட்டு வெளிநாடுகளுக்கு வந்து விடுகின்றனர்.

இப்படி வருபவர்களில் நினைத்தது போல் நடந்து விடும் பாக்கியம் 30% பேருக்கு மட்டுமே சாத்தியமாகலாம்? மீதமுள்ள 70% பேரின் நிலை அந்தோ பரிதாபம் தான்; அதிகாலை எழுந்து வேலைக்கு போய்விட்டு இரவு நேரத்தில் தமது ஓய்வறைக்கு திரும்பும் தொழிலாளர்களின் வாழ்க்கை என்பது இயந்திரமானதே.

வேலை பார்க்கும் இடத்தில் தங்களுக்கு வேலை ஏவும் அதிகாரிகளின் அடாவடித்தனம், பார்த்த வேலைக்குரிய ஊதியம் கிடைக்காதது; வார விடுமுறை நாட்களிலும் கூட வேலை செய்தாக வேண்டிய நிர்பந்தம்; மறுத்தால் சம்பள பிடித்தம் என பல வகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாகும் தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமானதே.

தமது குடும்பத்தின் சூழ்நிலை கருதி இவையனைத்தையும் சகித்துக் கொண்டு பலரும் தங்களின் வாழ்க்கையை வளைகுடாக்களில் கழித்து வருகின்றனர்; இது ஒருபுறம் இருந்தாலும், ஊரில் உள்ள இந்த தொழிலாளர்களின் குடும்பத்தார் இவர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சல் என்பது மிகவும் துயரமான செய்தியாகும்.

பணிபுரியும் இடத்தில் ஏற்படும் மன உளைச்சல்களோடு குடும்பத்தார் கொடுக்கும் மன உளைச்சல்களும் சேர்ந்து கொள்வதால், சில நேரங்களில் தாங்க முடியாத மனச்சோர்வில் சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் சடலம் பல மாதங்களாகியும் கூட பிணவறையிலேயே துயில் கொள்ளும் அவலநிலையே ஏற்படுகிறது.

நடந்த சம்பவம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது போன்ற விசாரணை முடிந்து சடலம் ஊருக்கு அனுப்ப வேண்டுமா? அல்லது இங்கேயே அடக்கம் செய்ய வேண்டுமா? என முடிவுக்கு வர எப்படியும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட ஆகலாம்?

அதுவரைக்கும் சடலங்கள் அரசு மருத்துவமனையின் பிணவறை லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும்; இறந்தவரின் சடலம் புதைக்கப்படாமலோ? அல்லது எரியூட்டப்படாமலோ? பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் காலம் வரை அவரது குடும்பத்தாரின் மனநிலையை யூகித்தால் கடும் சோகமே மிஞ்சும்.

தனது தாய்,தந்தை,மனைவி,பிள்ளைகளின் நலனுக்காக பல்வேறு ஆசைகளை மனதில் சுமந்து வந்து பாலைவன மணலிலும் கொடூரமான வெப்பத்திலும் அலையாய் அலைந்து திரிந்து பொருளீட்டும் ஆண்களை பணம் அனுப்பும் இயந்திரமாய் பார்ப்பது நிறுத்தப்பட வேண்டும்.

“குடும்பத்தை விட்டு,விட்டு தன்னந்தனியாக வெளிநாட்டில் பரிதவிக்கும் தங்களின் ஆண் மக்களிடம் அலைபேசியில் பேசும் போது தேவையற்ற குடும்ப பிரச்சினைகளை சொல்லாமலும், கூடுதல் பொருட்சுமைகளை சுமத்தாமலும், அனுப்பும் பணத்தை வைத்து சிக்கனமாக செலவிடுதலும் போன்ற உயர் பண்புகள் இருந்தால் மட்டுமே தொழிலாளர்களின் மன உளைச்சல் குறைய வாய்ப்புண்டு?”

எண்ணற்ற கனவுகளோடு வந்திறங்கிய தொழிலாளர்களில் சிலர் விபத்தாலும், தற்கொலையாலும், இயற்கை மரணத்தாலும் பல்வேறு தரப்பட்ட மரண சம்பவங்களால் சடலங்களாக பிணவறையில் துயில் கொள்ளும் சோக நிகழ்வுகளை நினைத்தால் நம்மை அறியாமல் கண்கள் கலங்கி விடுகின்றன.

வெளிநாட்டு பிழைப்பு என்பது எல்லோருக்கும் சொர்க்கமாய் அமைந்து விடுவதில்லை; அதிகமானவர்களுக்கு நரகமாய் தான் அமைகின்றன என்பதை இந்த பதிவை காணும் ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளர்களும் தங்களின் மனதில் உள்ளதை பகிரக்கூடும்?

பிழைப்பு தேடி வெளிநாட்டிற்கு வந்த தொழிலாளர்களை கடைத்தெருக்களிலும், நண்பர்கள் அறைகளிலும் காணும் அதே வேளையில் தான் சில தொழிலாளர்களை சடலமாக பிணவறையில் துயில் கொள்ளும் நிலையிலும் காண முடிகிறது!
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

அவள் வருவாளா?

Read Next

விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா?

Leave a Reply

Your email address will not be published.