‘ஹைக்கூ முற்றம்’ ஆண்டு விழாவில் சிறந்த ஹைக்கூ நூல்களுக்குப் பரிசு

‘ஹைக்கூ முற்றம்’ ஆண்டு விழாவில் சிறந்த ஹைக்கூ நூல்களுக்குப் பரிசு

சென்னை.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் (2026 ஆகஸ்ட் 2) சென்னை கோட்டூர்புரம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் இரண்டாம்
ஆண்டுத் தொடக்க விழாவில், 2025-ஆம் ஆண்டு வெளியான சிறந்த ஹைக்கூ நூல்களுக்கு
விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவிற்கு ஹைக்கூ முற்றம் அமைப்பாளர் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம்
தலைமையேற்றார். கவிஞர் சா.கா.பாரதி ராஜா அனைவரையும் வரவேற்றார்.
‘ஹைக்கூ முற்றம்’ கவந்து வந்த பாதை’ எனும் தலைப்பில் கவிஞர் வ.ரகுநாத். ‘ஹைக்கூ
முற்றம் மின்னிதம் ஒரு பார்வை’ எனும் தலைப்பில் கவிஞர் கா.பாபு சசிதரனும்
உரையாற்றினர்.
‘ஹைக்கூ முற்றம்’ ஆண்டு மலரை முனைவர் கி.ரா.சிதம்பர குமாரசாமி வெளியிட,
இயக்குநர் சுப்ரமணியபாரதி பெற்றுக்கொண்டார். 33 ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்ற
‘முற்றத்தில் உறங்கும் முழு நிலா’ கூட்டுத்தொகுப்பு நூலை இயக்குநர் என்.லிங்குசாமி வெளியிட,
கவிஞர் கவிமுகில் பெற்றுக்கொண்டார்.
2025-ஆம் ஆண்டு வெளியான ஹைக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூலுக்கான முதல் பரிசினை காவல்
துறை கண்காணிப்பாளர் மணி சண்முகம் எழுதிய ‘சற்றே நெளியும் மிதிவண்டி’ நூலும் இரண்டாம் பரிசினை
இயக்குநர் சரண் எழுதிய ‘நீர் மேல் எழுத்துகள்’ நூலும், மூன்றாம் பரிசினை வழக்கறிஞர் சேலம்
பொ.செந்திலரசு எழுதிய ‘மலரத் துடிக்கும் சாக்ய நெருஞ்சி’ நூலும் பெற்றன. சிறந்த கவிதை நூலைப்
படைத்த கவிஞர்களுக்கான விருதுகளையும் பரிசுத் தொகையையும் தமிழக அரசின் மேனாள்
தலைமைச் செயலாளரும் எழுத்தாளருமான வெ.இறையன்பு வழங்கி பேசுகையில், “தமிழ் இலக்கியத்திற்கும்
ஜப்பானிய இலக்கியத்திற்குமுள்ள நெருக்கமான உறவே ஹைக்கூ கவிதைகளின் மூலமாக மீண்டும்
உறுதியாகியுள்ளது. ஹைக்கூ என்பது உணர்ச்சி கவிதையாகும். வெறும் சொற்களை மட்டும் கொண்டு
ஹைக்கூ எழுதிவிட முடியாது. ஹைக்கூ என்பது நம் மனதில் கவிதையாகி அதுவே தன்னை
வெளிப்படுத்திக்கொள்ளும். செறிவான மொழியும் காட்சியழகும் சேரும்போது சிறந்த ஹைக்கூ
கவிதைகளைப் படைத்திட முடியும்” என்று பேசினார்.
பின்னர் நடைபெற்ற ‘ஹைக்கூ வாசிப்பரங்கத்தை’ கவிஞர் சீ.பாஸ்கர் ஒருங்கிணைத்தார். நிறைவாக,
‘ஹைக்கூ முற்றம்’ ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ் நன்றி கூறினார்.
விழாவில், ‘கவிதை உறவு’ ஆசிரியர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், இயக்குநர் பிருந்தாசாரதி, கவிஞர்
இளம்பிறை, முனைவர் ஆதிரா முல்லை, ‘பொதிகை மின்னல்’ ஆசிரியர் வசீகரன், ‘வளசரவாக்கம் செய்தி
மடல்’ ஆசிரியர் தொடுவானம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

படக்குறிப்பு:
1. விழாவில் சிறந்த நூலுக்கான விருது பெற்ற கவிஞர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்
2. ‘முற்றத்தில் உறங்கும் முழுநிலா’ ஹைக்கூ நூல் வெளியீடு




