காசிக்கு நடைபயணம் சென்று வந்த முதுகுளத்தூர் மதுரகவி சுப்பையாபிள்ளை

காசிக்கு நடைபயணம் சென்று வந்த முதுகுளத்தூர் மதுரகவி சுப்பையாபிள்ளை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தெய்வப்புலமை பெற்றவராக விளங்கிய நல்ல வீரப்பப்பிள்ளை என்பவருடைய பெயரனாகத் தோன்றியவர் சுப்பையாபிள்ளை என்ற வித்தியானந்த சுவாமிகள் ஆவார். இவர் காலம் கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டாகும். இவரது தந்தை இராமசாமிப் பிள்ளை. துவாத்திரிம் தசாவதானி சரவணப்பெருமாட் கவிராயருக்கு இவர் மருமகன். ஆதிநல்லவீரப்பபிள்ளை எனும் பெயரில் அழைக்கப்படுபவர் இவரது தந்தையின் தாத்தா ஆவர். இவர் எழுதிய நூல் கொடுமளூர் குறவஞ்சி. இவரது காலத்தில் தமிழிலக்கியத்தில் குறவஞ்சி இரண்டே. குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்துத் தோன்றிய குறவஞ்சியைப் பாடியவர் ஆதி நல்லவீரப்பபிள்ளையே என்பது சிறப்புக்குரியதாகும். இவ்வாறு கவிபாடும் புலவர் குடியில் பிறந்த சுப்பையாபிள்ளை செந்தமிழில் செய்யுள் பாடி ‘மதுரகவி’என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
சேதுபதி மன்னர்களது பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற தமிழ்ப் புலவர்களில் சுப்பையாபிள்ளையும் அடங்குவர். மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1911-1929) தனிப்பாடல்கள் பாடிப் பரிசில் பெற்றுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. (சேதுபதி மன்னர் வரலாறு , ப,196)
புவனேந்திர காவியம்
முத்துராமலிங்க சேதுபதியின் பொருளுதவியால் மதுரைத் தமிழ்ச் சங்க அச்சு இயந்திர சாலையில் 1908 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. ஐம்பத்து மூன்று (53) படலங்கள், மூவாயிரத்துத் தொண்ணூற்றாறு (3096) பாடல்கள் கொண்டு அமைக்கப்பட்டு முந்நூற்றுஅறுபது (360) பக்கங்களுடன் திகழ்கின்றது.
காவியம் – பா வகையும் அமைப்பு முறையும்
இக்காவியத்தில் காணலாகும் அனைத்துப் பாக்களும் விருத்தப்பாவால் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இக்காவியத்திற்குச் சாற்றுக்கவி பாடிய ஏழு புலவர் பெருமான்களில் இரு புலவர்களைத் தவிர ஏனைய புலவர்கள் விருத்தப்பா வகையில் பாடியுள்ளனர்.
சாற்றுக்கவியும் பாடியோரும்
இக்காவியத்திற்குத் தசாவதானி சரவணப்பெருமாள் கவிராயர், சோடசாவதானி வேலாயுதக் கவிராயர், அட்டாவதானி கல்யாண சுந்தரம்பிள்ளை, சித்திரகவி எம்.தெய்வநாயகம்பிள்ளை, வெண்பாச்சிலேடைப்புலி வேம்பத்தூர் பிச்சுபாரதியவர், சர்க்கரை ராமசாமிப் புலவர், தமிழ்ச்சங்க கவிவித்துவான் சதாசிவம்பிள்ளை ஆகியோர் சாற்றுக்கவியும், நான்காம் தமிழ்ச் சங்க வித்வான் சோதுகுடி எம்.கே. அப்துல் காதிறு ராவுத்தர் சிறப்புப் பாயிரமும் இயற்றியுள்ளனர்.
முதுகுளத்தூரைச் சேர்ந்த எம். தெய்வநாயகம் பிள்ளை தமிழ்ச் சங்க வித்துவான் ஆவார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்ற இவர் சித்திரகவிகள் இயற்றுவதில் வல்லவர். சுப்பையாபிள்ளையவர்களை வாதங்களைத் தீர்க்கவந்த தீர்க்கதரிசி எனவும், விருத்தங்களைப் பாடுவதில் சிறந்தவரெனவும் அவர் பாடிய காவியத்தைப் பெருமிதப் படுத்தி தம் சாற்றுக்கவியில் உரைத்துள்ளார்.
“சேதுசமஸ் தானத்தைச் சேர்ந்த முதுகுளத்தூர்/
ராதிக்கிரா மாந்தர்களின் விவாதங்/
களைத்தீர்க்கா நின்றதர்ம கர்த்தாவிருத்தங்/
களைப்பாடு வதிற்கவி”
எனும் அடிகளில் கூறப்படுகின்றது.
சுப்பையாபிள்ளையின் இறுதி வாழ்க்கை
காசிக்கு நடைபயணம் சென்று காசி குருநாதரிடம் தீட்சை பெற்றுள்ளார். காசியிலிருந்து படிக லிங்கத்தைக் கொண்டு வந்து தனது பிறந்த ஊரான முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள இடத்தில் மடம் ஒன்றை ஏற்படுத்தினார். 1918 ஆம் ஆண்டு மடத்தைப் புனரமைத்தல் தொடர்பாக கைப்பிரதி அடிக்கப்பட்டு, அதன்பின்னர் 1920 ஆம் ஆண்டில் அவரது குடும்பத்தார் குருபூஜை நடத்தியுள்ளனர். அதன் பின்னர் இறந்திருக்கலாமென யூகிக்கப்படுகின்றது. மதுரகவி சுப்பையாபிள்ளையின் வம்சாவளியினரான மு.நடராசபிள்ளை தற்போது முதுகுளத்தூரில் வசித்து வருகின்றார்.

1908 ஆம் வெளிவந்த புவனேந்திர காவியம்

முனைவர் சே.முனியசாமி,
உதவிப்பேராசிரியர்,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை