கவிதைகள் (All)

மீட்பு – சிறுகதை

மீட்பு எஸ் வி வேணுகோபாலன்

ழக்கமாக  ஒரு வாரத்திற்கு முன்பே களைகட்டும் லட்சுமி பூஜையின் எந்தச் சுவடும் இன்றி இருந்தது பன்வாரிலால் வீடு.  

தீபாவளி ஒரு பெருங்குதூகலம்.  வீட்டுப் பெரியவர்களைப் பாதம் தொட்டு வணங்குவது அன்றாடக் கடமை என்றாலும் பண்டிகைக் காலம் பல தலைமுறை முன்னோரை கண்ணுக்கருகே கொண்டுவந்து நிறுத்துவது போல.  ஆண்டுக் கணக்கு தீபாவளி ஒட்டித் தான் புதிதாகத் தொடங்கும்.  ஒரு நாளைக்குப் பத்து தடவை வங்கிக்குப் போவதும், கணக்கு பரிவர்த்தனைகளை வேகப்படுத்தி சீர்ப்படுத்துவதும் இந்தக் காலத்தின் முக்கிய ஓட்டமாக இருக்கும்.  

பன்வாரிலால் வங்கிப் பக்கம் போய் முழுதாக மூன்று நாள் ஆகியிருந்தது. புதுத்துணி வாங்கவில்லை.   சமையலறைக்கும் முன்கட்டுக்கும் நடந்தபடி இதையும் சேர்த்துக்குங்க, அதையும் வாங்கிக்குங்க என்று ஜமுனா, கணவர் திட்டிக் கொண்டே இருக்க அதைக் கண்டுகொள்ளாமல் பலகாரங்களுக்காக மளிகைப் பொருள் பட்டியல் மாற்றி மாற்றி ஏற்றி ஏற்றிச் சொல்லிக் கொண்டிருப்பது, இந்த முறை நடக்கவில்லை.  பட்டாசுப் பட்டியல் எழுதி முடிக்க வேண்டிய மகள் ரூபா அந்த எண்ணமே இராது ஒடுங்கி உட்கார்ந்து இருந்தாள். 

புதுத்துணியோ, பலகாரமோ, பட்டாசோ யாருடைய ஆசைக்கு….யார் எடுத்துக் கொண்டாடுவதற்கு……வீடே ஒளியிழந்து இருளில் மூழ்கி இருக்க, தீபாவளியை யார் சிந்தித்துக் கொண்டிருப்பது….பன்வாரிலால் – ஜமுனா தம்பதியினரின் செல்ல மகன் மோட்டு எனும் தீபக் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்து விட்டிருந்தது.

போலீசில் போய்ச் சொல்வதற்கு அவர் துணியவில்லை.  பணத்திற்காக யாராவது கடத்திப் போயிருப்பார்களோ என்ற அச்சம் அவரை ஆட்கொண்டிருந்தது. வரும் அலைபேசி அழைப்பு ஒவ்வொன்றிலும் எதிர்முனையில் கடத்தல்காரன் குரல் ஒலிக்குமோ என்றே நடுங்கி மொபைலை எடுத்துக் கொண்டிருந்தார்.  அவருக்கு எதிரிகள் இல்லை. மாநிலம் விட்டு மாநிலம் வந்து தொழில் செய்து கொண்டிருக்கும் மூன்றாவது தலைமுறை அவர்.  சென்னை அவருக்கு சொந்த ஊர் போலத்தான்.  தொழிலில் பொறாமை இருக்க வாய்ப்புண்டு.  அண்ணா நகர் அருகே இரண்டரை ஏக்கர் பூமியில் ஒரு பெரிய வீடு எழுந்துகொண்டிருக்கிறது.  மகள் பிளஸ்  2 முடிக்க இருக்கிறாள். பையன் இரண்டாம் வகுப்பில்.  பள்ளிக்கூடம் சென்றவன் திரும்பவில்லை. யாராக இருக்கும்…..யார் கடத்தி இருக்கக் கூடும்… மோட்டு …மோட்டு ….கண்ணா எங்கே போய்விட்டாய் நீ… தனது அலுவலக அறைக்குள் அமர்ந்து கேவிக் கேவி அழுதார். 

தீபக் காணாமல் போன அன்று காலை வழக்கம்போல் தந்தையின் காரில் உற்சாகமாகத் தான் பள்ளிக்கூடம் போய் இறங்கி இருந்தான்.  அவருக்கு ஆயிரம் வேலை இருந்தாலும் காலையில் பள்ளிக்கு மகனைக் கொண்டுபோய் விடுவது தவிர்க்கக் கூடாத அன்றாட அலுவல். முதல் நாள் ஏதாவது சண்டை போட்டு இருந்தாலும்…..ஆமாம், அவருக்கு இப்போது இலேசாக நினைவுக்கு வந்தது.  முதல் நாள் இரவு அவர் தாமதமாக வீடு திரும்பியபோது மோட்டு முகத்தைக் கொடுத்துப் பேசவில்லை. அன்று பிற்பகல் 3 மணிக்கு அவரை அவன் பள்ளியில் எதிர்பார்த்து இருந்தான்.  அவரும் வருகிறேன் என்று சொல்லி இருந்தார்.  விளையாட்டுப் போட்டிகளில் அவனது சுட்டித்தனத்தைப்  பாராட்டிப் பரிசு அறிவித்திருந்தனர்.  அவர் முன்னிலையில் அதை வாங்கக் காத்திருந்தான். அவர் வேலை மும்முரத்தில் மறந்துவிட்டிருந்தார். பரிசே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் பள்ளியில் இருந்து அழுதபடி திரும்பி இருந்தான்.  ஆனால் இவர் ஏதோ சமாதானம் செய்து பத்து நிமிடத்தில் அவனை சிரிக்க வைத்திருந்தார்.  இவர் மடியில் உறங்கிப் போயிருந்தான்.  ஆனால், கோபத்தை உள்ளூர வைத்துக் கொண்டு மறுநாள் எங்கேனும் போய்விட்டானோ…

கடையில் மூத்த ஊழியர் விசுவநாதன் கண்டுபிடித்துவிட்டார்.  முதலாளி வழக்கம்போன்ற நிலையில் இல்லை என்பதை அவரது முகமும் பேச்சும் காட்டிக் கொடுத்து விட்டது. 

“சார்…. என் தம்பியோட கிளாஸ்மேட் ஐஜி ஆபிசில் இருக்கிறான்.  விவரம் சொல்லித் தேடிப் பார்க்கச் சொல்லலாமா…ஃபோட்டோ மட்டும் கொடுங்க சார், வாட்ஸ் அப்ல பக்குவமா கேட்டு விடலாம் … நாள் போய்கிட்டே இருக்கு…சட்னு பிடிச்சிருவாங்க சார், தமிழ்நாடு போலீஸ் பத்தி என்ன நினைக்கிறீங்க!” என்றார்.

இவர் தடுத்துவிட்டார்.  சொந்தக்காரங்க கிட்ட கூட அவர் மூச்சு விடவில்லை…அவருக்குத் தெரியும், அப்புறம் அது ராஜஸ்தான் வரை போய்விடும்…. ஆனால், எப்படி கண்டுபிடிப்பது…. பேப்பர் எடுத்துப் பார்க்கவே பயமாக இருந்தது… முதல் நாள் கூட மெரினாவில் பத்து வயது பையன் சடலத்தைக் கண்டெடுத்த செய்தி பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டார்.  இருக்காது…மோட்டு அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டான்.  அவனுக்குச் சரியாகப் பேசக் கூட வராது….ஆனால் எங்கே போயிருப்பான்…

முனாவால் அப்படி உட்கார்ந்திருக்க முடியவில்லை.  மாளாமல் ரொட்டி தேய்த்துப் போட்டுக் கொண்டிருக்கவும், அதில் வெண்ணெய் தடவி எல்லோருக்கும் போட்டுவிட்டுக் கடைசியில் தனியே உட்கார்ந்து சாப்பிடவுமான காலமெல்லாம் அவளுடைய தாயாரோடு முடிந்து போயிருந்தது.  ஜமுனா கல்லூரிப் படிப்பு முடித்திருந்தாள்.  சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியும்  அவளது கல்லூரித் தோழிகள் வட்டம் பெரியது.  ஷீலாவை அழைத்து ஜாடைமாடையாக விஷயத்தைச் சொல்லி ஆலோசனை கேட்டாள். 

“அய்யய்யோ … என்னடி இது சாதாரணமா சொல்ற… என்னோட நட்ராஜ் அங்கிள் பூக்கடை ஸ்டேஷன் இன் சார்ஜ்… நேர போய்ப் பாத்துருவோமா…உன் ஹஸ்பண்டை அழைச்சுட்டு வந்திரு” என்றாள்.

தூக்கி வாரிப் போட்டது ஜமுனாவுக்கு…இந்த மனிதன் கல்லு மாதிரி உட்கார்ந்திருக்காரு…எப்படிப் போய்ப் பேச அவரிடம்?

“யேய் …ஷீலு அதெல்லாம் அவ்வளவுக்கு வேண்டாம்…நானே கூப்பிடறேனே…” என்று போனை வைத்துவிட்டு அழத் தொடங்கிவிட்டாள். 

மோட்டு அவளின் உயிருக்கு உயிர்.  எப்படி சொல்லாமல் எங்கோ போய்விட்டான்….யாராவது அவனை…? அய்யோ அப்படி நினைக்கவே அவளுக்கு நெஞ்சு நடுங்கியது.  ஈஷ்வர் அத்தனை சோதனை தனக்கு வைக்க மாட்டார் என்று நம்பினாள்.  காலையில் அரை தம்ளர் தேநீர் அருந்தியது, எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கும். மனத்தின் இரைச்சல்கள் இரைப்பைக்கு எப்படி புரியும். மயக்கம் வருவது போல் இருந்தது. மெதுவாக சோபாவில் சரிந்து உட்கார்ந்து கொண்டாள். 

கொடைக்கானல் சென்ற கொண்டாட்ட நாட்கள் நினைவுக்கு வந்தது.   ரூபாக் குட்டி தான் அந்த டிரிப் போயே தீர வேண்டும் என்று தந்தையோடு சண்டைபோட்டு உறுதி செய்திருந்தாள்.  காரிலேயே புறப்பட்டுப் போயிருந்தனர்.  மூன்று நாட்கள்.  பன்வாரிலால் அலுவலகக் கவலைகள் கொஞ்சம் மறந்து குடும்பத்தோடு உற்சாகமாக இருந்தார்.  ஊர் திரும்பிய அடுத்த மாதமே அந்த அன்பு தன்னுள் உருப்பெறத் தொடங்கியதை நாணத்தோடு மாமியாரிடம் சொன்ன தருணம் கூட ஜமுனாவுக்கு நினைவிருக்கிறது.  எட்டாவது மாதம் அவளது வயிற்றைத் தடவிப் பார்த்துப் பார்த்து மகள் ரூபா, மோட்டுதானே  இங்கே உதைக்கிறது … என்று கேட்டது, பின்னர் மகன் பிறந்தவுடன்  அவனது பெயராக    நிலைத்தது.  பள்ளியில் தீபக்!

மோட்டுக் கண்ணா….ஏன்…ஏன்….என்னை விட்டுப் போனாய் என்று உருகினாள் ஜமுனா.  முந்தைய வாரம், கோபத்தில் அவனை அடிக்க கை ஓங்கிவிட்டாள்.  பாப்ரே… அதனால் தானோ கோபித்துக் கொண்டு போய்விட்டாயா, செல்லம்….

அம்மா விழுந்துவிடப் போகிறாள் என்று ஓடிவந்த ரூபா, அவளைப் பிடித்து உலுக்கி, ‘நோ மா…நோ… மோட்டு வந்துருவான்’ என்றாள்.  டைனிங் டேபிள் மீதிருந்த தண்ணீர்க்  குவளையில் இருந்து ஒரு தம்ளரில் நிரப்பி அம்மாவிடம் நீட்டினாள். 

அம்மாவுக்கு ஆறுதல் சொன்னாலும், ரூபாவுக்கு நம்பிக்கை வலுவிழந்து போய்க் கொண்டிருந்தது.  மோட்டு இல்லாத ஒரு வீட்டை அவளால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.  அவன் பிறந்த அன்றைக்கு  மூன்று பாக்ஸ் சாக்லேட் கொண்டு போயிருந்தாள் பள்ளிக்கு.  அப்பாவை அரித்து எடுத்து மருத்துவமனையில் போய் நெருக்கமாக நின்று பார்த்துக் கொண்டே நின்ற நாள் இன்னும் அவளுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.  ‘என்னை ரூபான்னு கூப்பிடுமா தம்பி, இல்ல அக்கான்னு சொல்வானா..’ என்று கேட்டாள். தாய் சிரித்துக் கொண்டு, ‘தீதின்னு தான் உன்னைக் கூப்பிடுவான்….நீ தான் அவனுக்கு உலகம்’ என்று சொல்லி இருந்தாள்.

மோட்டு வீட்டுக்கு வந்திறங்கிய பிறகு, பள்ளிக்கூட லஞ்ச் நேரத்தில் வகுப்புத் தோழிகளிடம் மோட்டு புராணம் தான் அவளுக்கு.  ‘அந்தப் பெயரே நான் சொன்னது தான்.. அவன் இப்போது தவழ ஆரம்பித்துவிட்டான்… சுவரைப் பிடித்து நிற்கப் பார்க்கிறான்…ஷெல்ஃபில் இருந்து என் பாவாடையை இழுத்து மூத்திரத்தில் போட்டுப் புரட்டி விட்டான்….ம்மா..ம்மா என்கிறான்…பேச்சு வர்ற மாதிரி தெரியுது….’ 

‘ஏன் மோட்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ போய்விட்டான்…. ஒரு வேளை அந்த இங்க் புட்டி விஷயம் தான் காரணமாக இருக்குமோ.  ‘ மோட்டு காணாமல் போவதற்கு இரண்டு நாள் முன்பு ரூபா ஆசை ஆசையாக தாஜ்மகால் வரைந்து பெயின்டிங் செய்து முடித்திருந்தாள்.  மோட்டு கோபமாக வந்து ஏதோ இரைந்து பேசினான்.  முதல் நாள் அப்பா வாங்கி வைத்திருந்த ஐஸ்கிரீம் கப்களில், அவனுக்குப் பிடித்தமான சாக்லேட் ஐஸ்கிரீம் காணவில்லை. வெண்ணிலா இருந்தது, அவனுக்கு அது பிடிக்காது.  ரூபா தான் எடுத்து முடித்திருக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியும்.  

“ஆமாம்…நான் தான் சாப்பிட்டேன்..உன் பேர் அதிலே எழுதி இருக்கா என்ன…போடா போ…” என்று தனது வேலையின் அவசரத்தில் சொல்லிவிட்டாள். அவ்வளவு தான், ஸ்டேஷனரி ஷெல்ஃபில் இருந்து இங்க் புட்டி எடுத்துவந்து தாஜ்மகால் ஓவியத்தின் மீது கவிழ்த்துக் கதையை முடித்துவிட்டான். … தாங்க முடியாத ஆத்திரம் ரூபாவுக்கு. பளார் என்று ஓர் அறை விட்டாள்.  மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு அறைக்குள் போய்க் கதவை அடைத்துக் கொண்டான். பிறகு தந்தை வந்ததும் ஒருவழியாக சமாதானம் ஆகிக் கதவைத் திறந்து வெளியே வந்தான். 

‘நூறு தடவை வரையலாம் தாஜ்மகாலை…அய்யோ மோட்டு உன்னை இனி பார்க்கப் போகிறேனா இல்லையா…ஸாரிடா குட்டி…அக்கா தப்பு பண்ணிட்டேன்….திரும்பி வா…இனிமே கையை ஓங்கவே மாட்டேன் அக்கா…’

லுவலகத்தில் விசுவநாதன் மீண்டும் முதலாளி அறைக்குள் நுழைந்தார்.  பன்வாரிலால்   கண்களை இறுக்க மூடி அமர்ந்திருந்தார்.  உறக்கமா கலக்கமா என்று தெரியவில்லை.   

கொஞ்ச நஞ்ச பாவங்களா….என்று நினைத்துக்கொண்டார்  விசுவநாதன் .  ஆரம்பத்தில் ஹையர் பர்ச்சேஸ் என்று ஆரம்பித்தனர். வங்கியில் ஒன்றரை வட்டிக்கு வாங்கி, நான்கு  வட்டி வரை கொடுத்துக் கொண்டிருந்தார்  பன்வாரிலால்  தந்தை.  ஃபைனான்ஸ் கம்பெனி வாசலில் காத்திருப்பார்கள் டிராக்டர் வாங்குபவர்கள், ஆட்டோ ரிக்ஷா வாங்குபவர்கள், பெரிய வேன் புக் செய்யத் துடிப்பவர்கள்.  கண்களாலேயே அளப்பார் பெரியவர்.  அவர் சைகை காட்டினால் தான் பத்திரங்களில் கையெழுத்து வாங்குவது நடக்கும். பணப்பெட்டி திறக்கும். 

கோட்டூர் சுரேஷ் என்பவன் அப்படி இவர்களிடம் வந்து பைனான்ஸ் கேட்டு ஆட்டோ வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தவன், ஒன்பது தவணைகள் தவறாமல் கட்டிவந்தான்.  அப்பாவுக்கு லிவர் பிரச்சனை என்று மருத்துவமனையில் சேர்த்த நாள் தொடங்கியது அவனது வீழ்ச்சி.  அப்புறம் ஒரு பைசா செலுத்த முடியவில்லை.  நான்கு மாதங்கள் விட்டுப் பார்த்தார் பன்வாரிலால்.  அப்புறம் கம்பெனி ஆட்கள் ஆட்டோவை சீஸ் செய்யப் புறப்பட்டனர்.  பாவம், திருவான்மியூரில் இருந்து ஒரு பெரியம்மாவையும் அவரது மருமகனையும் அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கம் மருத்துவரிடம் கொண்டு சேர்க்கப் போய்க் கொண்டிருந்தான். தி நகர் பாண்டி பஜாரைக் கடக்கும்போது இவர்கள் பாய்ந்துபோய் நிறுத்தி ஆட்டோ சாவியைப் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.  அந்தப் பெரியம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் சுரேஷ், இறங்கிடுங்கம்மா, இவனுங்க வண்டியை எடுத்துட்டுப் போயிருவாங்க…வேற ஆட்டோ பிடிச்சுக் கொடுக்கிறேன்…எனக்கு நீங்க காசு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றான்.  அவர்கள் காசு எடுத்துக் கொடுத்தபோதும் வாங்க மறுத்துக் கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி விட்டான்.  நேரே கம்பெனி வாசலில் வந்து நின்று கத்திய நாள், விசுவநாதன் நினைவில் இருக்கிறது.  அடித்து விரட்டிவிட்டார்கள் கம்பெனியின் காவல் படை. 

இப்படி எத்தனை சுரேஷ், எத்தனை ரமேஷ்…ஆனால், சினிமாவில் வருவதுபோல் இப்படியான ஆட்கள் யாரும் மோட்டுவைக் கடத்திப் பழி தீர்த்துக் கொள்ள மாட்டார்கள். யாராக இருக்கும்…என்று யோசித்துக் கொண்டிருந்தார். 

பன்வாரிலால் கண்களைத் திறந்து, “விசு…என்ன பாவம் செஞ்சேன்….ஏன் இப்படி நடக்குது?” என்று கேட்டார்.

“நீங்க புண்யாத்மா சார்…அந்தக் கடவுளுக்குத் தான் கண்ணில்லை” என்றார் விசுவநாதன்.

பன்வாரிலால் அதைக் காதில் வாங்காதவர் போல், “நம்ம புது வீட்டுக்கு எதிரே கட்டிடம் வருதே….அங்கிருந்த கூர்க்கா லால் ஞாபகம் இருக்கா, எங்கே இருக்கான் இப்போ?” என்றார். 

தூக்கி வாரிப் போட்டது விசுவநாதனுக்கு….ஆமாம்…இது நமக்குத் தோன்றவே இல்லையே…லால் செய்திருப்பானோ…ஆனால் அவன் மென் சுபாவி ஆயிற்றே. அப்பழுக்கற்ற விசுவாசம் மிக்க தொழிலாளி.  ஊரில் இருக்கும் குடும்பம் உறவு எல்லாம் முக்கியம் அந்த நேபாளிக்கு.  ஆனால், லால் குடும்பத்திற்கு  பன்வாரிலால்   குடும்பம் செய்த தீங்கு சாதாரணமானதா என்ன…

அண்ணா நகரில் சிதிலமடைந்திருந்த பழைய வீடு ஒன்றை வாங்கி இடித்துப் போட்டு அங்கே புதிய வீட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்  பன்வாரிலால்.   ஆனால் அது மூன்றாண்டுகளின் கதை.  கொரோனா காலத்தில் திடீர் என்று வேலைகள் பாதியில் நின்று இப்போது முடியும் கட்டத்திற்கு வந்து விட்டது.  அந்த இடத்திற்கு நேரெதிரே ஒரு பெரிய அபார்ட்மெண்ட் வந்து கொண்டிருந்தது.  அங்கே தான் லால் செக்யூரிடியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.  மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு லீவு என்று மனைவியும் அவருடைய ஒரே மகனும் வந்து இணைந்தார்கள்.  லாலின் மனைவி கட்டுமான வேலையில் தானும் ஓர் உழைப்பாளியாகி விட, பையன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.  ஒரு நாள் தங்களது இல்லக் கட்டுமான வேலைகளைப் பார்வையிட சைட்டுக்கு வந்த பன்வாரிலால் மனைவி ஜமுனாவின் கண்களில் பட்டான். 

யாரு என்ன ஏதென்று விசாரித்த ஜமுனா, ‘பையன் எப்படியும் திரும்ப பள்ளிக்கூடம் போகப் போவதில்லை, வீணா இங்கேயும் அங்கேயும் திரியறதுக்கு கொஞ்ச நாள் எங்க வீட்டுல வேலை பார்க்கட்டுமே, உனக்கும் கொஞ்சம் காசு கிடைக்கும்’ என்று லாலிடம் சொன்னாள்..  லால் கொஞ்சம் யோசித்தார். லாலின் பெண்டாட்டி முடியவே முடியாது, கூடவே கூடாது என்றாள்.  அவளது நகை இன்னும் அடகு மீட்கப்படாது இருந்தது. லாலின் வாழ்க்கை பள்ளத்தை விட்டு அரையடி கூட மேலே தலை தூக்க முடியாது ஓடிக் கொண்டிருக்கவே, மனைவியை எப்படியோ சரிக்கட்டி முதலாளி வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அடுத்த நாளே புது சட்டை, டிராயர் போட்டுக் கொண்டு வந்து  பன்வாரிலால்  காரில் இருந்து இறங்கிய பையனைக் கண்டதும், லாலின் பெண்டாட்டியும் தலையை இரண்டு பங்குக்கு ஆட்டி அனுப்பி வைத்தாள். 

அடுத்த இரண்டு மாதங்கள் லால், பையனைக் கண்கொண்டு பார்க்கவில்லை.  இங்கே வேலை கடுமையாக இருந்தது.  லாலின் பெண்டாட்டி தொந்திரவு செய்தாள். போய் அழைத்து வா என்று பிடுங்கி எடுத்தாள்.  நேரே பன்வாரிலால் வீட்டுக்குப் போனால், வாசலிலேயே தடுத்து நிறுத்தி விட்டார்கள். இவன் குரல் கொடுத்தான். கம்பெனி உதவியாள் ஒருவன் வெளியே வந்து, “என்னடா யாரு நீ இங்க வந்து வம்பு பண்ற…?” என்று இரைந்தான்.   

லால் தனது பையனை ஒரு நிமிடம் வெளியே அனுப்பினால் போதும், பார்த்துவிட்டுப் போய்விடுவேன் என்றான்.  

“இங்கே யாரும் வேலைக்கே இல்லையே…போடா வெளியே…” என்று பதில் வந்தது. 

பகீர் என்றது லாலுக்கு.  அதிர்ச்சியோடு அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் குரல் கொடுத்தான்.  “சாப்…நல்ல பாருங்க…வேலைக்கு அழைச்சுட்டு வந்தாங்க, என் ஒரே பையன்…ஒரே நிமிஷம் வெளியே வரச் சொல்லுங்க…பார்த்துட்டுப் போயிர்றேன்” என்றான்.

“ஏய்யா ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு…..யாருக்குயா தெரியும் உன் பையன் எங்கே ஓடிப் போனான்னு…எங்க உயிரை வாங்குற….போலீசை கூப்பிடுவேன் ஜாக்கிரதை” என்று குரல் கொடுத்தான் கம்பெனி ஆள்.

லாலுக்கு உயிரே போனதுபோல் ஆகிப் போனது…’அடப்பாவிங்களா…பையன் எங்கேன்னு கேட்டா என்னையே அடிச்சு விரட்டுவேன்னு சொல்றீங்களே…’ என்று நடுவீதியில் நின்று தனது தாய்மொழியில் ஓலமிட்டார்.  கதவுகள் திறக்கவே இல்லை அவருக்கு.  

அதற்குப் பிறகு லால் குடும்பம் அந்த அபார்ட்மெண்ட் இடத்தை விட்டு வெளியே போய்விட்டார்கள்.  என்ன ஆனார்கள் என்று தெரியாது.  ஆனால் விசுவநாதன் ஆளை வைத்து விசாரித்துக் கண்டுபிடித்தார்.  

லால் அழுததை எதிரே இருக்கும் அபார்ட்மெண்டில் குடியிருந்த வங்கி அதிகாரி ஒருவர் பார்த்திருக்கிறார்.  அவரது உதவியோடு காவல் துறைக்கு புகார் கொடுத்துத் தேடி இருக்கிறார்கள்.  சிறுவர் காப்பகங்களில் எல்லாம் போய்ப் பார்த்திருக்கிறார்கள்.  ராயபுரம் இல்லத்தில் கிடைத்துவிட்டானாம் லால் பையன்.

பன்வாரிலால்  வீட்டில் அவன் பட்ட பாடு வெளியுலகுக்குத் தெரியாது. கடைசி கட்டம், விருந்தினருக்காக வைத்திருந்த பலகாரம் எதையோ எடுத்து சாப்பிட்டு விட்டான் என்று ஒரு பாட்டம் அடி அடி என்று அடித்துத் துவைத்து இருக்கிறார்கள். அங்கிருந்து எப்படியோ ஓடி அருகே சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் போய் நின்றிருக்கிறான்.  இப்படியாக அலைந்து கொண்டிருக்கும் சிறுவர்களை அடையாளம் கண்டு, சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் சேர்க்கும் தன்னார்வ அமைப்பின் தொண்டர் ஒருவரது கண்ணில் பட்டுவிட்டான். பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டு ராயபுரம் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தான். லாலுக்கு மகன் திரும்பக் கிடைத்துவிட்டான்.

லால் ஏதேனும் பழி வாங்கி இருப்பானோ என்று  பன்வாரிலால் யோசித்துக் கொண்டிருக்கும்போது, கம்பெனி வாசலில் லால் வந்து நிற்பது போல் இருந்தது. தனக்குத் தான் பிரமை என்று நினைத்துக் கொண்டார்  பன்வாரிலால்  .  

விசுவநாதன் சத்தமாக, “சார்…லால் சார்..கேட்டீங்களே அந்த கூர்க்கா லால் சார்” என்று பதட்டத்தோடு உரத்த குரலில் சொன்னார்.  

பன்வாரிலால் மேற்கொண்டு எதுவும் யோசிக்கவோ, லாலை அழைத்து விசாரிக்கவோ தேவை ஏற்படவில்லை.  லால் பின்னாலேயே நுழைந்து கொண்டிருந்தான் மோட்டோ…. காணாமல் போன மோட்டோ. .. பன்வாரிலால்   மகன் மோட்டோ….

அப்படியே எழுந்து ஓடிப் போய் அவனைக் கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்துவிட்ட முதலாளியை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த விசுவநாதன், “ஏய் லால்…இங்கே வாப்பா… உட்காரு…என்ன ஆச்சு  சொல்லு…” என்றார்.  உள்ளே திரும்பி அலுவலகப் பையனை அழைத்து, ‘ஏய் ஜல்தி…லாலுக்கு ஒரு ஜூஸ் பாட்டில் எடுத்துக் கொண்டு வா’ என்று உத்தரவிட்டார். 

“அதெல்லாம் வேண்டாம் சாப்…நமக்கு எதுக்கு ஜூஸ்” என்ற லால், “யாரு புண்ணியமோ உங்க பையன் என் மகன் கண்ணில் பட்டான்….கிடைச்சான்” என்றார். 

மீதிக் கதையை மோட்டோ அழுதபடி திக்கித் திணறிச் சொல்லி முடித்தான்.  பள்ளிக்குப் போயிருந்த அன்று திரைப்பட ஷூட்டிங் டீம் ஒன்று சாலையில் படப்பிடிப்பு எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துச் சொக்கியவன் அந்த யூனிட் பின்னாலேயே ஓடியிருக்கிறான்.  எங்கெங்கோ அலைந்து வழி தெரியாமல் எப்படியெப்படியோ மாநகரக் கூட்டத்தில் கரைந்தபடி அலைந்திருக்கிறான்.  மெரினா கடற்கரை போன இடத்தில் லாலின் மகன் பார்த்து அடையாளம் கண்டு தனது தந்தையிடம் சொல்லி இருக்கிறான். 

பன்வாரிலால்   எழுந்து வந்து லாலின் காலில் விழுந்து தேம்பத் தொடங்கிவிட்டார்.  லால் சங்கடமாக உணர்ந்து அவரைத் தடுத்து நிறுத்தி நிமிர வைத்தார். பன்வாரிலால் தன்னியல்பைத் தொலைத்தவராகிப் போனார். 

“உனக்கு நான் என்ன கொடுத்தாலும் தகும்….கொஞ்சம் பொறு”  என்று கஜானா பக்கம் திரும்பினார்.

“சாப்…அதெல்லாம் வேணாம்…..எழுந்திருங்க…போய் தீபாவளியை சந்தோஷமாக் கொண்டாடுங்க”  என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நிற்காமல் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

‘லால் அப்படித் தான் இருக்க முடியும்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருந்தார் விசுவநாதன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button