கட்டுரைகள்

மரம்

விதை குண்டுகள்” மண்ணைத் தோண்டி, குழி எடுத்து, விதை போட்டு, மரக்கன்றை நட்டு உரமிட்டு, பண்ணை பிடித்து, பாத்தி கட்டி, நீரூற்றி பசுமை பெருக்க வேலைகளை ஒரு புறம் மனிதன் செய்து கொண்டு தான் இருக்கிறான். அவன் பூட்டனார், தாத்தா, தாய் தகப்பன் வீடு கட்ட, விறகு எரிக்க வெட்டிய மரங்களுக்கு ஈடாக, பிராயச்சித்தமாக மரங்களை மனிதன் நட்டுக் கொண்டே தான் இருக்கிறான். வீடு கட்டி வசிக்க, சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள் நிர்மாணம், வசதிகளை பெருக்க, கட்டிடங்கள் எழுப்ப என ஆண்டாண்டு காலமாய் நின்ற மரங்களையும் மனிதன் வெட்டத்தான் வேண்டியதிருக்கிறது. “அறிந்தும் அறியாமலும்” மனித குலம் மாற்று ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறது.

 “எனக்கு மரம் வளர்ப்பில் ஆர்வமுண்டு” என்று சொல்லும் மனிதர்களை நாம் மரியாதையுடன் நிமிர்ந்து பார்க்கிறோம். சிட்டுக்குருவி வாழ அட்டைப்பெட்டியில் வீடு கட்டி உத்திரத்தில் தொங்கவிடும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இதெல்லாம் பலரது வாழ்வில் அனிச்சைச் செயலாய் நடக்கிறது.

 நடமாடும் மனிதர்கள் தங்களது ஆடைகள் மூலம் விதைகளை வெவ்வேறு பகுதிகளுக்கு அறியாமலேயே விதிக்கின்றனர். சூக்கோரி ( zoochory) என அதனை சொல்கிறோம். மனிதர்களின் உரோமம் நிறைந்த கால்களில் கூட ஒட்டி பல விதைகள் இடம் மாறுகின்றன. பசு, எருமை, ஆடு போன்ற பாலூட்டிகள் அதன் தோல்களிலூம், உரோமங்களிலும் ஒட்டிய விதை வித்துக்களை இடம் மாற்றுகின்றன. அதனை எப்பி சூக்கோரி (  Epi Zoochory ) என சொல்கிறோம்.

 ஆற்றில் நீந்தும் ஆமை, மீன் இனங்கள் தண்ணீருடன் போட்டி போட்டு விதைகளை சுமந்து சென்று வேறு பகுதிகளில் சேர்க்கின்றன. பறவைகள், மிருகங்கள் விதை கடத்தலை எண்டோசூக்கோரி (   Endozoochory ) என அழைக்கின்றனர். முழு நீள வேட்டி, முழு கால்சட்டை, சேலை, தாவணி என தாவர விதைகளை மனிதர்கள் தாராளமாக கடத்துகின்றார்கள். உயிரற்ற உடைகள், போக்குவரத்தில் ஈடுபடும் லாரி, பேருந்து, கார், டேங்கர், வேன் கூட விதைகளை இடம் விட்டு இடம் வேகமாக கடத்துகின்றன. அர்த்தம் அறிந்த மனிதர்களை விட பொருள் புரியாமல் விதை வித்துக்களை இடம் மாற்றும் முயல், அணில், மான், சிங்கம் என வனவிலங்குகள் கூட இயற்கையைப் பேண விந்தை செய்கின்றன.

 மகரந்த சேர்க்கையைப் பற்றி மதிப்பெண்ணிற்காக படித்தோமா இல்லை மனித குலம் மகத்துவம் பெற்றிட தேமதுர தேனீக்களை உதாரணமாய் கொண்டாடிட படித்தோமா – சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 ஒருவித அழுத்தத்துடன் சத்தமாக வெடித்து பழ விதைகளை விதைக்கும் மரங்கள் இருக்கின்றன. வெடித்த விதைகளை காற்றின் துணையுடன் பாராசூட் போல பல காத தூரத்தில் பத்திரமாக இறக்கும் இயற்கையின் விந்தையை என்னவென்று சொல்வது. இலவம் மர நெத்துக்கள் வெடித்து பஞ்சுடன் விதை காற்றில் தரை இறங்குவது கண்கொள்ளாக் காட்சி. தென்னை மரங்களிலிருந்து தேங்காய்கள் ஆறு, நீரோடைகளில் விழுந்து கரையோரங்களில் மரமாகிவிட்டதை பார்த்தாலே தண்ணீர், காற்று கூட விதைகளை மரமாக்க பொறுப்புடன் செயல்படுவதைப் பார்க்கலாம் செயல்படுவதை பார்க்கலாம். விலங்குகள், வாகனங்கள், “மர -செடி – கொடி” விதைகளை இடம் மாற்றி விழச் செய்வது இருப்பதிலேயே சிறந்த முறை.

அவரவர் வேலைகளை மட்டுமே அவரவர் பார்த்துக் கொண்டு சென்றால் இதெல்லாம் சாத்தியமில்லை. தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், பசுமை அமைப்புகளுக்கு அடுத்து மரம் வளர்ப்பிலும், விதைப்பந்து வீச்சிலும் சிறந்து விளங்கும் துறை நமது தமிழக காவல்துறை. குறிப்பாக “த. சி. கா” என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழக சிறப்பு காவல் படை. போலீஸ் பட்டாலியன் என அழைப்பார்கள். அதிலும் மிகக்குறிப்பாக விதைப்பந்து வீச்சில் ஈடுபடுபவர்கள் மணிமுத்தாறு த.சி.கா 9 வது அணி. தாமிரபரணி துவங்குமிடத்திலுள்ள இந்த பசுமை பேணும் “காக்கிக்கோட்டை” பனை விதை விதைப்பிலும், “விதை குண்டுகளை” தென்தமிழகமெங்கும் வீசுவதிலும் பெயர் பெற்றவர்கள். பள்ளிக் குழந்தைகள் வீசினால் அது விதைப்பந்து, காவல்துறை வீசினால் அது “விதை குண்டு”.

 போலீசார் “விதைகளை இடம் விட்டு இடம் கடத்தும்” நற்செயலை போலீஸ் சூக்கோரி (   Police Zoochory  ) என புது வார்த்தையால் விளிப்போம். விதைப்பந்து வீச்சால் மணிமுத்தாறு போலீஸ் தளவாய் கார்த்திகேயன் நெஞ்சத்தில் குடியிருப்பவர்கள் இன்ஸ்பெக்டர் கண்ணன், உதவித் தளவாய் தீபா, இன்ஸ்பெக்டர்கள் பிரசாத், பூதபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ், பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் கோமதி, லாவண்யா, தலைமை காவலர் சங்கரநாராயணன், பெண் காவலர்கள் முத்து செல்வி, சுபா, எலக்ட்ரீஷியன் பாரதி கண்ணன் மற்றும் பலர். இதில் ஈடுபட்டு வரும் மற்றவர்களை அவர் தான் பெற்ற மெடல்களுக்கும் மேலாக மதிக்கிறார்.

 2025 செப்டம்பர் நிலவரம்- இதுவரை 43 லட்சத்து 54,000 விதைப்பந்துகள் செய்து முடித்தாகிவிட்டது. 43 லட்சம் மண்ணில் வீசியாகிவிட்டது. சுமார் 50,000 வீசப்பட வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் 50 லட்சத்தை தாண்டி விடுவோம். தமிழகத்தின் 19 மாநிலங்களில் விதைப்பந்து வீச்சு நடந்து வருகிறது.

 திருமாறன் திசை நோக்கி பத்ம விருதுகளும், பாரத ரத்னா விருதும் திரும்பிப் பார்க்கின்றன என விதைப்பந்து புரட்சியை உற்று கவனித்து வரும் என் எம் பெருமாள் ஐ. ஏ. எஸ், மூத்த காந்தியவாதி விவேகானந்தன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி பலமுறை பல பேரிடம் கூறி வருகின்றனர். அவர்கள் ஆசிகளும், அன்புமே விருதுகள் தாம். 1987 முதல் 3000க்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்கள் நடத்தி, பல லட்சம் உயிர்களை காப்பாற்றிய போது கூட விருதுகளுக்காக எதையுமே செய்ததில்லை. மரம் மாதிரியே வாழ்ந்து பழகுவோம். வேர் விடட்டும், இலை துளிர்க்கட்டும், கிளை பருக்கட்டும், மரம் வளரட்டும், பிஞ்சு பிடிக்கட்டும், கனி பழுக்கட்டும், பறவைகள் பழம் தின்னட்டும்- “பழுத்த இலை” என்னும் அகம்பாவமும் உதிரட்டும்!

 பூ திருமாறன்,

சமூக நல ஆர்வலர், வெங்காடம்பட்டி- 62 74 15

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button