கவிதைகள் (All)

கவிக்கோ…………..

மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் முனைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு ஈரவரிகளில்…………… கவிதாஞ்சலி

—- தமிழ்மாமணி ஹாஜி மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி—

கவிக்கோவே ! இந்தப்

புவிக்குக் கிடைத்த….

புன்னகையே !

நாங்கள் தேடிக்கண்ட

இலக்கியச் சுரங்கமே !

இதுவரை

எங்களோடு தானே….

இருந்தீர்கள் !

இப்போது ….?

மரபுக்கவிதை – ஜாதகங்கள் !

புதுக்கவிதை – முகவரிகள்

எது கவிதையென்ற

எத்தனையோ பேர்களின்

வினாக்களுக்கு

ஒரே வரியில் விடை !

இது, உங்கள் ஒருவரால் தான்

சாத்தியம் என்று எண்ணுகிறோம் !

உன் கண்ணால்

தூங்கிக் கொள்கிறேன் என்றும்,

மற்ற உறவுகள்

வயிற்றிலிருந்து !

காதல் மட்டும் ….

இதயத்தில் இருந்து

பிறக்கிறதென்று

இவ்வளவு நளினமாய்

யாரும் சொன்னதில்லை !

படித்த இளைஞர்கள்

கல்வி, வேலைவாய்ப்பைத் தேடி

எத்தனையோ ……..

அலுவலக கதவுகளைத்

தட்டுகிறார்கள் !

இப்போது … நவீனமாய்

ஆன்லைனிலும்

அவர்களின் தேடல்கள் !

இவர்களின் தேடலுக்கு

விடையாக

தட்டாதே ! திறந்திருக்கிறதென

வழிகாட்டியிருக்கிறீர்கள் !

இந்த நூற்றாண்டில்

எங்களோடு வாழ்ந்த

நக்கீரரே !

தன்னறையில் இருந்து

போதுமென்று

மண்ணறைக்கு

மௌனித்துப் போனீர்களோ …?

தாய்மொழி

உருதுவாக இருந்தாலும்

தமிழைத்தான்

அதிகமாக நேசித்தீர்கள் ! – காரணம்

சங்கம் வைத்து

தமிழ் காத்த

மதுரை தான்

நீங்கள்

பிறந்து வளர்ந்த

ஞானத் தொட்டில் !

அன்னை தமிழ் உங்களுக்குப் பல

மகுடங்கள் சூட்டி

அழகு பார்த்தாள் !

நாங்கள் நேசித்து வாசித்த

பாடநூலே ! உங்களை

நாங்கள்

படித்துக் கொண்டிருக்கும்போதே

மரணம் !

பறித்துப் போய்விட்டதே !

மண் விளக்கு அணையலாம் !

மணி விளக்கு அணையலாம் !

எங்கள் ஞானவிளக்கு

அணைந்து போனதே ….!

எல்லோரையும் அஞ்ச வைப்பது

மரணம்

வாழ்க்கை விளையாடி உடைத்த

பொம்மைகளை ( மனிதர்களை )

மரணம் தான்

பரிவோடு ஏற்றுக் கொள்கிறதென

மரணத்தை

இன்னொரு தாயாக

உருவகப் படுத்தினீர்கள் !

எல்லோருடைய இதயங்களையும்

இணைப்பது – வேறு எதுவுமே இல்லை !

இலக்கியமே என்றீர்கள் !

இது

நீங்கள் மட்டுமே சொன்ன

வேதம் !

இலக்கணத்திற்காக ……..

இலக்கியம் இல்லை !

இலக்கியத்திற்காகவே !

இலக்கண மென்றீர்கள் !

உங்கள் தோற்றத்தில் … அந்த

தொல்காப்பியராய்

பார்த்து மகிழ்ந்தோம் !

நரைத்தாலும் விடாமல்

இறையை காதலித்த …. நேசரே !

ஒன்று தெரியுமா …?

நீங்கள் இல்லாமல்

உங்கள் நந்தவனம்

பூக்கவில்லை !

புலம்பிக் கொண்டிருக்கிறது !

பூப்பதில்லை யென்று

தீர்மானம் போட்டிருக்கிறதாம் !

அண்ணாந்து பார்க்கும்

உங்கள் கற்பனைகளின்

உயரங்களை

இதுவரை யாரும் தொட்டதில்லை !

கண்ணீரை

கண்கள் உருட்டும்

ஜெபமாலை என்றீர்கள்

ஒவ்வொரு பூக்களும்

இறைவனின் காதல் கடிதங்கள்

என்றீர்கள் !

அல்ஹம்துலில்லாஹ் !

மண் ஒட்டா மரமில்லை !

மந்து ஒட்டாத உறவுமில்லை !

எங்கள் உறவே !

இப்போது …

நீங்கள் எங்கே ….?

எங்கள் விழிகளால்

கண்ணீர் விளக்கேந்தி தேடுகிறோம் !

கிடைப்பீர்களா … ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button