அன்னையர் நாள் வாழ்த்துகள்
அன்னையர் நாள் வாழ்த்துகள் அனைத்து அன்னையர்களுக்கும்!!
ஆயிரம் பாடி யுன்தாள்
அடியினைத் தொழுவ தெல்லாம்
பாயிரம் நூறு பாடிப்
பணிந்துமே நிற்ப தெல்லாம்
சேயிவன் கற்று வந்த
செந்தமிழ் காட்டத் தானே!
நாயிவன் கொண்ட நன்றி
நாலுபேர் அறியத் தானே!!
.
.குருதியும் சதையும் ஈந்து
கூடவே மெய்யும் தந்து
மருவிலா எண்ணம்; கொள்கை
மாசிலாத் தமிழும் தந்து
திருவெனப் பெயரு மிட்டுச்
சிறப்புற நடக்கும் மாட்சி
உருவென ஆக்கி யென்னை
உலகினில் விதைத்தாய் வாழ்க!!
.நெய்யினில் சோற்றைச் சேர்த்து
நீயதை எடுத்து வந்து
நொய்யவே பிசைந்தே உப்பும்
நுண்மிள கொன்றும் சேர்த்துக்
மெய்யுணர் வண்ணம் தந்த
மேன்மையை என்ன வென்பேன்
அய்யமே இல்லை! மண்ணில்
அருளதன் சாட்சி நீயே !
கண்ணினில் என்னை வைத்துக்
காலமும் தாங்கி னாயே!
உண்ணநான் அடமே செய்தால்
ஊரெல்லாம் சுற்று வாயே!!
எண்ணிலா இரவில் தூங்கா
திருந்துநீ என்னைக் காத்தாய்!
மண்ணிலே பொன்வி ளக்காய்
வழியெலாம் ஒளிர்ந்தாய் நீயே!!
நடையினைப் பழகும் முன்னே
நடுயிடை யேற்றி வைத்து
கடைபல காட்டி நின்று
களிப்பினில் மூழ்கு வாயே
உடைபல மாற்றிப் போட்டே
உவகையி லாழ்ந்து போவாய்!
இடையிடை நோயும் வந்தால்
இதயமும் நொறுங்கு வாயே!!
‘அம்ம”நான் சொன்ன போதும்
ஆடியே குதித்தாய் நீயே!
தும்மலும் போட்டு விட்டால்
துயரினில் புரள்வாய் நீயே
விம்மிநான் அழுகக் கேட்டால்
விரைந்துநீ வருவாய் தேடி!
அம்மவுன் மடிதான் நானும்
ஆடிடும் ஊஞ்சல் தானே!
பள்ளியில் படித்த பாடம்
பக்கமே நின்று கேட்பாய்!
துள்ளிநான் ஓடி யாட
துணையெனக் காத்து நிற்பாய்!!
எள்ளியே யாரும் சொன்னால்
இடியென முழங்கித் தீர்ப்பாய்!
அள்ளியே அணைத்து யென்னை
அரசனாய் வாழ வைத்தாய்!!
தேடிய செல்வ மெல்லாம்
தேர்தலில் கரைந்து போக
ஆடியே முடித்தார் அப்பா
அடுத்தவர் பிடித்தார் ஓட்டம்
வாடியே நின்ற துண்டோ
வறுமைதான் பயந்து நோகும்!
ஓடியே உழைத்து நீதான்
உயர்த்தியே என்னைக் காத்தாய்
தட்டினில் சோறு போட்டு
தானாக உண்ட தில்லை!
எட்டிரு வயதின் போதும்
இன்கையால் ஊட்டு வாயே!!
வட்டியும் முதலும் சேர்ந்து
வாட்டியே வதைத்த போதும்
சுட்டுநீ தருவாய் தானே!
சொன்னவை யாவும் செய்தே!
வெயிலினில் களத்து மேட்டில்
வெந்துமே வேலை செய்தும்
கயிற்றினைக் கட்டித் தாலி
கடையினில் அடகு வைத்தும்
உயிரென யென்னைக் காக்க
உன்னுட லுருக்கிக் கொண்டு
பயிரெனை வளர்ப்ப தற்கு
பாவிநீ சருகா யானாய்!!
.கடவுளே இல்லை என்ற
களத்திலே நிற்பேன் நானும்
படையதில் சேர்ந்து கொண்டு
பாதையும் மாறி னாயே
சடலமாய் ஆன பின்பும்
சாற்றியே கருப்புச் சேலை
உடலதை எரிக்கச் சொன்ன
உறுதியை என்ன சொல்வேன்?
ஏந்துவேன் உன்னை நெஞ்சில்
என்னுயிர் போகும் மட்டும்
நீந்துவேன் நினைவு ஆற்றில்
நினைவைநான் மறக்கும் மட்டும்
காந்தமோ இரும்பை ஈர்க்கும்
கனித்தமிழ் பாட்டே நல்கும்
மாந்தனா யென்னை வார்த்த
மகத்துவம் நீதான் அம்மா!!
ஒப்பிலா மணியே போற்றி !
உலகதின் கருவே போற்றி!!
தப்பிலா நெறியே தந்த
தண்டமிழ் குறளே போற்றி!!
அப்பனை இழந்த வாழ்வில்
அனைத்துமே ஆனாய் போற்றி!
அப்பனை மரத்தைப் போலே
அனைத்துமே ஈந்தாய் போற்றி!!
எப்படி வாழ வேண்டும்
என்பதை சொன்னாய் போற்றி!
இப்படி இருந்தால் போதும்
என்றுதான் நடந்தாய் போற்றி!!
தப்பினில் வீழா தென்னைத்
தவிர்த்தநல் உள்ளம் போற்றி!
செப்படி வித்தை இல்லா
செயல்திறன் தந்தாய் போற்றி!!
உப்பெனச் சோற்றில் நின்று
உவப்பினைத் தந்தாய் போற்றி!
செப்பெனச் சொல்லி சொல்லி
செந்தமிழ் வளர்த்தாய் போற்றி!!
தொப்புளின் கொடியி னுள்ளே
தொண்டுளம் விதைத்தாய் போற்றி!
துப்பெலாம் எனக்குத் தந்த
சுடர்மதி போற்றி போற்றி!!
-சுப முருகானந்தம்
