+2 மதிப்பெண்கள் வந்தாச்சு…..
+2 மதிப்பெண்கள் வந்தாச்சு…..ஓரளவுக்கு தான் மார்க் வந்திருக்கு….பணம் அதிகம் செலவு செய்யவும் வாய்ப்பில்லை….
நல்ல திறமையிருக்கு..நல்லா பேசுவான்…ஓரளவுக்கு இங்கிலீஸ் பேசுவான்…
உழைக்க தயாராக இருக்கான்….கைநிறைய சம்பளத்துடன் நல்ல ஒரு வேலையில் சமுதாயத்தில் ஒரு நன்மதிப்போட வாழ்ந்தா போதும்..
கல்லூரி பேராசியராக முயற்சி செய்யுங்கோ…
பக்கத்தில் இருக்கும் அரசு கல்லூரியிலோ , அரசு உதவி பெறும் கல்லூரியிலோ போய் உங்களுக்கு பிடித்த பாரம்பரியமான பி.ஏ அலல்து பி.எஸ்சி படிப்பில போய் சேருங்கோ…
வரலாறு , பொருளாதாரம், ஆங்கிலம் , கணிதம், இயற்பியல் , வேதியியல் , உயிரியல் சார்ந்து எதாவது ஒரு படிப்பை தேர்ந்தெடுங்கள். எளிதாக இடமும் கிடைக்கும்…பெரிய பொருளாதாரமும் செலவாகாது.
சத்தமில்லாமல் ரொம்ப அலுப்பில்லாமல் இளநிலை ( UG Degree ) படித்து முடியுங்கள்.எந்த பட்ட படிப்பு படிக்கிறீர்களோ அதே பாடத்தில் மேற்படிப்பை தொடருங்கள்.அதையும் அரசு கல்லூரியிலோ அரசு உதவி பெறும் கல்லூரியிலோ படியுங்கள். அங்கையும் பெரிய பொருளாதாரம் செலவு ஆகாது.
மேற்படிப்பு படிக்கும் போது இரண்டு கட்டாய இலக்குகளை நிர்ணயித்து கொள்ளுங்கள். ஒன்று நெட் / செட் தேர்வை மேற்படிப்பு முடியும் இரண்டு வருடத்திற்குள் வெற்றிகரமாக முடித்து கொள்ளுங்கள்.இரண்டு குறைந்த பட்சம் 55% மதிப்பெண்களை நீங்கள் உங்கள் முதுநிலை படிப்பில் பெறவேண்டும்.
முதுநிலை ( P.G) முதலாம் ஆண்டே நீங்கள் நெட் / செட் தேர்வை எழுதலாம்.
சம்மந்தப்பட்ட முதுநிலையில் 55% சதவித மதிப்பெண்கள் மற்றும் நெட் அல்லது செட் தேர்வில் வெற்றி ஆகிய இரண்டு மட்டுமே பேராசிரியர் வேலைக்கான அடிப்படை தகுதிகள்.
நெட் / செட் முடித்திருந்தால் ஓரளவுக்கு நல்ல சம்பளத்துடன் சுயநிதி கல்லூரிகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதை பெற்று கொண்டே அரசு கல்லூரியிலோ , அரசு உதவி பெறும் கல்லூரியிலோ வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும்.
நெட் தேர்வு எழுதும் போது ஜெ.ஆர்.எப் ( JRF ) சேர்த்து தயார் செய்தால் ( ஒரே தேர்வு தான் – கொஞ்சம் மதிப்பெண்கள் அதிகம் எடுக்க வேண்டும்) பி.ஹெச். டி ( Ph.D ) ஊக்கதொகையோடு பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.
புதிய கல்வி கொள்கைக்கும், மாறி வரும் உயர் கல்வி சூழலுக்கும் நிறைய பேராசியர்கள தேவைபடுவதால் , அதிலும் திறனும் திறமையும், ஈடுபாடும் உள்ள பேராசியர்கள் தேவைபடுவதால் நீங்கள் அதற்கு திட்டமிட்டு உழைத்தால் வெற்றி உறுதி.
ஒரு மாணவர் பார்வையிலிருந்து ஒரு பேராசியர் வேலையை பார்க்கும் போது எப்படி மாணவர்களை சமாளிக்க போகின்றோம் என்ற பயமும் தயக்கமும் வருவது இயல்பு தான். எல்லா வேலைகளை போன்றும் இதில் ஆரம்ப சில நாட்கள் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். பழகும்போது அது உங்களுக்கு இலகுவாகிவிடும்.
நல்ல மொழி திறன், சம்பந்தப்பட்ட பாடங்கள் குறித்த ஆழ்ந்த அறிவு , அன்றாட செய்திகள் பற்றிய பொது அறிவு ஆகியவற்றோடு மாணவர்களை கையாளும் கலையையும் நீங்கள் பழக்கி கொண்டால் மாபெரும் ஒரு பேராசிரியராக உங்களை வரலாறு பதிவு செய்யும்.
வாருங்கள்….அறிவு உலகத்தின் ஆசான்களாக வலம் வருவோம்..பலபேரின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்
முனைவர் மு.அன்சார்
புதுக்கல்லூரி , சென்னை