திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது நல்லா இருந்த நரிப்பையூர் திட்டத்திற்கு என்னாச்சு?

Vinkmag ad

முதுகுளத்தூர், : திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நரிப்பையூர் குடிநீர் திட்டம் போதிய பராமரிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் ஏராளமான கிராமங்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன.
முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுகாக்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 1996ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, நரிப்பையூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.46 கோடியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், கடல்நீர் நன்னீராக மாற்றப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய, கிராமங்கள்தோறும் இரும்புக் குழாய் அமைக்கப்பட்டது. இக்குழாய்கள் போதிய அளவில் பராமரிக்கப்படாததால், மாசு படிந்து, தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறியது. அதன் பின்னர் இரும்பு குழாய்கள் மாற்றப்பட்டு, பிவிசி பைப்புகள் அமைக்கப்பட்டன.

இந்த குழாய்களும் நாளடைவில் சேதமடைந்து, பல கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது. தற்போது இத்திட்டத்தின்கீழ், நரிப்பையூரில் இருந்து 5 கிமீ. தொலைவில் உள்ள சாயல்குடி வரை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அதற்கு அடுத்துள்ள புனவாசல், மாரந்தை, ஆப்பனூர், தேவர்குறிச்சி, ஒருவானேந்தல், பொதிகுளம், ஓரிவயல், ஏனாதி உள்ளிட்ட கிராமங்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. எனவே அனைவரும் பயன்பெறும் வகையில் சேதமடைந்த குழாய்களை சீரமைத்து, முழுமையாக தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கடலாடியை சேர்ந்த லிங்கம் கூறுகையில், ‘‘இப்பகுதியில் பருவமழை முறையாக பெய்வதில்லை. நிலத்தடி நீரும் பெரிய அளவில் இல்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் நாங்கள் தவித்து வருகிறோம். காவிரி குடிநீர் திட்டமும் முறையாக பராமரிக்காததால், தண்ணீர் வந்து சேர்வதில்லை. எனவே நரிப்பையூர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து குடிநீர் வடிகால்  வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘ நரிப்பையூர் குடிநீர் திட்டம் சில இடங்களில் செயல்பாடில்லாமல் உள்ளது. அதுபோன்ற இடங்களில் நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் தண்ணீர் விநியோகிக்கப்படும்’’ என்றார்.

News

Read Previous

பூக்களினைப் பூட்டிவைத்து பூமிக்கு வந்தரதம்!

Read Next

தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

Leave a Reply

Your email address will not be published.