சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

Vinkmag ad

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 
— சிவ இளங்கோ, புதுவை

சிங்காரவேலனாரின் அரசியல் நுழைவுக் களமாகக் காங்கிரஸ் கட்சி இருந்தது. 1920 களில் காந்தியை “மகாத்மா” என்று ஏற்றுக் கொண்ட இந்திய அரசியல் தலைவர்களுள் முகமது அலி ஜின்னா, பெரியார் ஈவெரா, ம.  சிங்காரவேலனார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். 
இதில் 1920 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் மகாத்மா காந்தியோடு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்ட முஸ்லிம் லீகின் தலைவரான ஜின்னா, வரும் நாட்களில் காந்தியின் தேசியம் என்னும் பிம்பத்தின் பின்னாலிருந்த இந்துத்துவ கோர முகத்தைக் கண்டு கொண்ட பின்னர் தேசியத்தைக் கை விட்டவுடன், மத அடிப்படையில் நாட்டுப் பிரிவினை கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 
1927ஆம் ஆண்டில் பெங்களூருவில் மகாத்மா காந்தியைச் சந்தித்த பெரியார், அவருடனான நீண்டநேர விவாதங்களின் விளைவாக, அவருக்குள் இருந்த சனாதனியைக் கண்டபிறகு, காந்தியார், “மகாத்மா” அல்ல என்ற முடிவுக்கு வந்து விடுகிறார். 
கம்யூனிஸ்ட் அகிலம் மாநாட்டில் “காந்தி நேர்மையான, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்” என்னும் லெனினின் மதிப்பீட்டை, அங்கேயே “காந்தி ஒரு பிற்போக்குவாதி” என்று போட்டுடைத்தவர் உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் (கோமின்டான்) தலைவர்களில் ஒருவரான எம். என். ராய். தொடர்ந்து, “காந்தி, இந்திய விடுதலை இயக்கத்தை, இந்து சமய மீட்சி இயக்கமாக மாற்றி இருப்பதையும், நாளடைவில் ஆங்கிலேயர்களிடமே சுரண்டும் பூர்ஷ்வா வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்வார்” என்று பேசியும் எழுதியும் வந்தார் எம்.என்.ராய். 
திரு. ராயின் கருத்துடன் சிங்காரவேலர் கொண்ட உடன்பாடு பின்னாட்களில் அவருடைய எழுத்துக்களில் தெரிந்தது. “ஒரு பக்கம் வருணாசிரமத்தை ஆதரித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் தீண்டாமை ஒழிக என்று காந்தியார் பிரசங்கம் செய்து வருவதில் பயனில்லை” என்று 1931 ஆம் ஆண்டிலேயே அறிவித்தார் சிங்காரவேலர். காந்தியின் “மகாத்மா” பிம்பமான அரிசன சங்கத்தின் அழைப்பை, “தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்பது ஏழைகளை ஏமாற்றி அவர்கள் அறிவை விளங்காமல் வைத்திருக்கும் சூழ்ச்சி என்று விளங்குகிறது” என்றும், இன்ன பிற பிம்பங்களான கதர், தேசியம், சுயராஜ்யம் ஆகியவற்றையும் கபட நாடகங்கள் எனத் தோலுரித்தவர் சிங்காரவேலர் (குடி அரசு, 25.10.1931). 
காங்கிரஸ் கட்சியைப் “பிற்போக்குத் தனமானது” என்று வர்ணிக்கும் சிங்காரவேலர், அன்றைக்கிருந்த மற்றக் கட்சிகளையும் “உதவாக்கரைக் கட்சிகள்” என்றே குறிப்பிடுகிறார். அவருக்கு நண்பர்கள் அதிகமாக இருந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சியையும், “குட்டி பூர்சுவாக் கட்சி” என்றே மதிப்பிடுகிறார். (சுயராஜ்யம் யாருக்கு? இரண்டாம் பாகம்).
 “கோடானுகோடி பாமர மக்களுக்கு வீடும், வாசலும், நீரும், நிலமும் சமமாகக் கிடைத்தால் ஒழிய எந்த அரசியல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றே” என்னும் சமத்துவ நிலைப்பாட்டுக் கொள்கையரான சிங்காரவேலர் (குடி அரசு, 1.11.1931), இந்தியாவில் அதற்கான ஒரே இயக்கமாகப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைக் குறிப்பிட்டு, அவ்வியக்கத்தைச் “சுயமரியாதை சமதர்மக் கட்சி”யாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர்.
(திரு. சிங்காரவேலனாரின் 163 ஆவது பிறந்த நாள் இன்று)

News

Read Previous

குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்

Read Next

உலகத் தாய்மொழி தின விழா

Leave a Reply

Your email address will not be published.