மகளிடமிருந்து அப்பாக்களுக்கு..

Vinkmag ad

 

மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) வித்யாசாகர்!

1

நான் சிறுவயதாயிருக்கையில்
சிறுநீர் கழித்துவிடுவேன், ச்சீ என்பார்கள்
என் அப்பா ‘மகள்தானே
பரவாயில்லை’ என்பார்..

உடம்பிற்கு முடியாதென்றால்
இருக்குமிடத்தில் அப்படியே வாந்தியெடுப்பேன்
அய்ய; அசிங்கம் என்பார்கள்
என் அப்பா ‘மகள்தானே
பரவாயில்லை’ என்பார்..

இப்போதெனக்கு திருமணமாகியும்
அடிக்கடி போய்
அப்பாவிடம் நிற்பேன், எல்லோரும்
இவள் எப்பவுமே தொல்லை என்பார்கள்
என் அப்பா ‘மகள்தானே
பரவாயில்லை’ என்பார்..

எல்லோருக்குமே நான் எப்போதும்
இன்னொருத்தியாகவே தெரிகிறேன்
அவருக்கு மட்டும்தான் நான்
அவராக தெரிகிறேன்..
———————————————————

2

ங்களுக்கு அப்போது ஒழுகும்
கூரைவீடு இருந்தது,
வீடு ஒழுகுவதற்கு அப்பா
கவலைப்பட்டதேயில்லை,
என் பிள்ளை நனைவாளோ என்று பதறி எழுந்து
கூரைக்கு தார்பாயிடுவார்!

கருவேல மரம் நெடுகயிருக்கும்
அதை வெட்டி வேலி கட்டுவோம்
மரம் வெட்டுகையில் அப்பாவிற்கு
கையெல்லாம் புண்ணாகி நீர் கோர்த்துக்கொள்ளும்
மறுநாள் நான் சென்று வெட்டுவேன்
என் அப்பாவிற்கு வலிச்ச மரம் வலிச்ச மரம்னு
ஓயாது வெட்டிச் சாய்ப்பேன்
கையெல்லாம் எனக்கும் புண்ணாகும்
மாலையில் அப்பா வந்துப் பார்த்துவிட்டு
தாளாது துடிப்பார்,
அவருக்கு அதிகம் வலிக்குமென்று தெரிந்ததும்
நான் மரமே வெட்டுவதில்லை!
———————————————————

3
ட்டிலிக்கு மாவரைக்க
ஒரு பாட்டி கடைக்குப் போவோம்
அப்பாவின் மிதிவண்டியில் அப்போது
பின்சீட்டு கிடையாது
முன்னால்தான் அமர்ந்திருப்பேன்
அப்பா வலிக்குதாடா என்பார்
இல்லைப்பா என்பேன்
ஆனால் வலிக்கும்
நெளிவதைக் கண்டு என்னம்மா வலிக்குதா என்பார்
இல்லைப்பா, வலிக்கலையே என்பேன்
அதற்குப் பிறகு நிறைய கடைக்கு
அப்படித்தான் போவோம்,
அப்பாவிற்கு  நான் சொன்னதேயில்லை
எனக்கு வலிக்கிறதென்று,
சொல்லியிருந்தால் அப்பா
அதற்கும் கவலைப்பட்டிருப்பார்,
அது எனக்கு அதைவிட அதிகமாக
இன்றும் வலித்திருக்கும்!!
———————————————————

4

னக்கு நடைபழகிய சமயமது
அறைக்குள் போனவள்
விளையாட்டாக சாவியை திருக
சாவி உள்ளுக்குள் அறையைப் பூட்டிக்கொண்டது
அம்மா ஓடிவந்து
பதட்டமாகத் தட்டுகிறாள்
மகளே மகளே என்று அலறுகிறாள்
எனக்கோ உயிர்போகும் பயம்
உள்ளே என்ன ஆகுமோ
யார் வருவார்களோ
அம்மா ஏன் அழுகிறாள்
எதையோ கொடிதாய்ச் செய்துவிட்டேனோ என
ஏக பயமெனக்கு,
அப்பாவை அழைக்கிறாள் அம்மா
ஐயோ மகள் உள்ளே பூட்டிக்கொண்டாள்
என்று கதறுகிறாள்
நடந்ததத்தனையும்
நடந்ததைப்போலவே யெனக்கு அத்தனை
நினைவிலில்லை யென்றாலும்
பின்னாளில் நான் வளர்ந்துவந்ததும்
தெரியவந்ததது –
‘என் அப்பா’ என் அழை நின்றுவிட்டதை
அறிந்ததும்
மகளின் –
குரலே வரவில்லை என்றுக் கேட்டதும்
அதிர்ந்து
பேருந்தைவிட்டுக் கீழிறங்கி
ஓடியே வீட்டிற்கு வந்தாராம்
கதவை உடைத்தாராம்
எனைக் கட்டிப்பிடித்து அழுதாராம்
நான் கட்டிலில் ஒரு ஓரத்தில்
கெட்டியாய் அமர்ந்திருந்தேனாம்
பேருந்திலிருந்து இறங்கி ஓடிவந்த
அப்பாவை
இன்றும் தேடிக்கொண்டேயிருக்கிறது
இரு கண்களும்
மனசும்..
———————————————————–
 
5
ரு முறை
வெளிஊர் சென்றுவிட்டு
மாநகரப் பேருந்தில் ஏறி
எங்களூர் தெருமுனை வந்து இறங்கினோம்,

அங்கே ஏனோ ஒரு ஆள்
இன்னொரு பெண்ணைப் போட்டு
அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தான்

அப்பா ஓடிப்போய்
அவனைச் சட்டையை பிடித்திழுத்து
ஒரு அரை விட்டார்
அவன் அதற்கெல்லாம் அடங்கவில்லை
போயா என்றுத் தள்ளி
அப்பாவை உதறி சாய்த்துவிட்டு வேகமாகப் போனான்
நான் ஓட
அருகே இருந்தோரெல்லாம் ஓடி
அப்பாவைத் தூக்கி நிறுத்துவதற்குள்
‘உனக்கு ஏன் பெருசு இதலாம்’ என்றார்கள்
அப்பா சொன்னார் “என் மக மாதிரி இருக்காங்க..” என்றார்
எனக்கு அதை நினைக்க நினைக்க
இப்போதும் அழை வரும்
நான்தான் என் அப்பாவின் உலகம்
நான்தான் என் அப்பாவின் இலக்கு
நான் தான் என் அப்பாவிற்கு எல்லாம்..

அப்பா பாவம்
இன்று நானில்லாத என் பிறந்தவீட்டில்
இப்போதுகூட என்னைத்தான் நினைத்துப்
படுத்திருப்பார்..

அப்பாவிடம் ஒருமுறை
அழைத்துப் பேசத்தோணும்
அவரைப் பார்க்கத் தோணும்
அவர்கூட ஒரு நடை அதுபோலவே நடக்கத் தோணும்

இப்படி எது தோன்றினாலும்
அதையெல்லாம் மறைத்துக்கொண்டு
‘அப்பா வறேன்பா’ என்று அப்பாவிற்கு வலிக்காமல் நானும்
எனக்கு வலிக்காமல் அப்பாவும்
இத்தனை லேசாகச் சொல்லவைத்தச் சொல்லில்
எத்தனை ஆழ அன்பிருக்கென்று
எங்களின் கண்ணீருக்கே தெரியும்..
———————————————————
வித்யாசாகர்

News

Read Previous

நெஞ்சில் துணிவிருந்தால் பஞ்சாய்ப் பணியிருக்கும்……!!!!

Read Next

இன்று அப்துல் கலாம் பிறந்த தினம்

Leave a Reply

Your email address will not be published.